TNPSC Thervupettagam

நேருவின் ஒரு நாள்!

May 27 , 2020 1695 days 744 0
  • ஜவாஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு 3,256 நாட்கள் - ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார்.
  • 1947-ல் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 1964 வரை 16 ஆண்டுகாலம் இந்தியாவை வளர்த்தெடுத்தார். பேராற்றல் மிக்க இந்த மனிதர் தன்னுடைய நாளை எப்படிச் செலவிட்டிருப்பார்?
  • குளிர் காலத்தில்கூட காலை 6.30 மணிக்கு எழுந்துவிடுவார். கோடையிலோ அரை மணி நேரம் முன்னதாகவே எழுந்துவிடுவார்.
  • அடுத்த ஒரு மணி நேரம் பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும் செலவிடுவார்.
  • காலை 7.30 வாக்கில் அந்த நாளின் வல்லமைமிக்க சவால்களை சந்திப்பதற்காகத் தயாராகிவிடுவார். தன்னுடைய தனி அறையில் தினந்தோறும் வந்து குவியும் ஏராளமான கடிதங்களை முதலில் படிப்பார்.
  • ஒரு நாளைக்கு சராசரியாக 500 கடிதங்களும் தந்திகளும் அவருக்கு வந்துகொண்டிருந்தன. காலை உணவை எடுத்துக்கொள்ள அவருக்கு 15 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
  • வழக்கமாகக் காலை உணவில் மேற்கத்திய உணவு வகைகளுடன் பழச்சாறு, முட்டை, தானியம், வாட்டப்பட்ட ரொட்டி, காபி ஆகியவை இருக்கும்.
  • அவரது மகள் இந்திரா அநேகமாக எப்போதும் அருகில் இருப்பார். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் விடுமுறைக் காலங்களில் உடன் இருப்பார்கள்.
  • அவருடைய தீன்மூர்த்தி பவன் வீட்டிலிருந்து இறங்கி தரைத்தளத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு 8.15 மணி அளவில் வருவார்.
  • அங்கு அவரைச் சந்திக்க எப்போதும் சிலர் காத்திருப்பார்கள். 15 நிமிடங்களுக்குள் அவர்களிடம் பேசி அனுப்பிவிடுவார். பிறகு, வளர்ப்புப் பிராணிகளுடன் சிறிது நேரத்தைச் செலவிடுவார்.
  • நாடாளுமன்ற அவை நடைபெறாத காலங்களில் நேரு தன்னுடைய வெளியுறவு அமைச்சக அலுவலக அறையில் நாள் முழுவதும் இருப்பார்.
  • காலை 9 மணி முதல் 1.30 மணி வரையிலும், மதிய உணவுக்குப் பிறகு 2.45 முதல் 6.30 அல்லது 7 மணி வரையிலும் அங்கு இருப்பார்.
  • இங்கு வெளிநாட்டுத் தூதுவர்கள், வருகைதரும் பெருமக்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சித் தொண்டர்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களைச் சந்திப்பார்.
  • மலைபோல் குவிந்திருக்கும் கோப்புகளைக் கருத்தூன்றிப் படிப்பார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றை அவர் கவனிக்க வேண்டியிருக்கும்.
  • ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் சந்திப்புகள் நடைபெறும். சந்திப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் அவரது சுருக்கெழுத்தாளர்கள் எழுதுவதற்கான விவரங்களைச் சொல்வார்.
  • உண்மையில், இவைதான் தடைபடாத அவரது அலுவலகப் பணிகளாகும். மேலும், வந்திருப்பவர்கள் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே குறிப்புகளை எடுத்துக்கொள்வார்.
  • நேரடியாக சந்தித்துப் பேசி முடித்த பிறகு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அவருக்கு இது உதவும்.

இந்தியாவின் எதிர்காலம் மீது கொண்டிருந்த கனவு

  • நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது அவருடைய வேலைத்திட்டம் இதுபோலத்தான் இருக்கும். கேள்வி நேரமாக இருந்தால் அவர் மதியம் வரை அவையில் இருப்பார்.
  • முக்கியமான விவாதங்களின்போது அவை முடியும் வரை அமர்ந்திருப்பார். நாளின் எஞ்சிய நேரத்தில் அவர் இரண்டாம் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபடி அலுவல்களைக் கவனிப்பார்.
  • கூட்டத்தொடர்களின்போது நேரமின்மை காரணமாக அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் கூட்டங்கள் போன்றவை காலை 11 மணிக்கு முன்பாகவோ அல்லது மாலையிலோ அவரது இல்லத்தில் நடத்தப்படும்.
  • மாலை 6.30 அல்லது 7 மணிக்கு அவர் வீடு திரும்பும்போது, அங்கு காத்திருப்பவர்களை இரவு 8.30 மணி வரை பார்க்க வேண்டியிருக்கும்.
  • வந்திருப்பவர்களை ஒவ்வொருவராக அழைத்துப் பேசி அனுப்பிவிட்டு இடைப்பட்ட நேரத்தில் விடுபட்டுப்போன விவரங்களை எழுதுமாறு சுருக்கெழுத்தாளர்களைப் பணிப்பார்.
  • இரவு உணவு குடும்பத்தாருடன் இயல்பான முறையில் நடக்கும். அரிதான ஒருசில சமயங்களில் தனிச் சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு அரசாங்க விருந்து நடைபெறும்.
  • நாள் முழுவதும் வேலைப்பளுவின் காரணமாக சந்திக்கவியலாது போன அமைச்சரவை சகாக்கள், தூதர்கள் ஆகியோர் வீட்டில் நடைபெறும் இரவு விருந்துக்கு அழைக்கப்படுவர்.
  • இதுபோன்ற சமயங்களில் இரவு 10.30 வரை அங்கிருப்பார். மாலையில் அரசாங்க விழாக்களில் இரவு 10.30 வரை அவர் கலந்துகொள்ள நேரிடும். இதுபோன்ற நேரங்களில் அவர் வீட்டில் உள்ள தனது அலுவலக அறைக்கு வந்து நள்ளிரவு வரையிலோ அதற்கு மேலுமோ அங்கு பணிபுரிவார்.
  • தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் உழைத்தவர். இரவு 2 மணிக்குத் தூங்கச் சென்றாலும் காலை வழக்கமான நேரத்தில் எழுந்துவிடுபவர்.
  • நேருவின் இவ்வளவு அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்குக் காரணம் அவர் மக்கள் மீது கொண்டிருந்த அன்பும், இந்தியாவின் எதிர்காலம் மீது கொண்டிருந்த கனவும்தான்!

நன்றி: தி இந்து (27-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்