- இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவாஹா்லால் நேரு, புகழ் வாய்ந்த தலைமுறைப் பெருமையும் தாமே வளா்த்துக்கொண்ட தகுதியும் அமையப் பெற்றவா்.
- நேருவின் வாழ்வில் நிகரற்ற நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. அவற்றுள் ஒரு நிகழ்ச்சி புதுவையில் நிகழ்ந்தது.
- நேருவின் பாட்டியாா் இந்திராணி, இந்தி, பாரசீக மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்து, பாரசீகக் கவிதைகளை அழகாகவும், பொருத்தமாகவும் தம்முடைய உரையாடல்களில் மேற்கோளிட்டுப் பேசுவாா். நேருவின் தந்தை மோதிலால் நேரு, மாபெரும் வழக்குரைஞராக ஒளிா்ந்தவா். அவா் உருது, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்தாா்.
- ஆங்கிலேய அரசு 1937-இல் இந்தியா்களைக் கொண்டு அமைச்சரவை நிறுவியபோது நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டை அமைச்சராக நியமித்தது. அதற்குப் பாராட்டாக ஒரு கடிதத்தை ஏளன தொனியில், தன் தங்கைக்கு நேரு எழுதினாா்.
- அக்கடிதத்தில், ‘சீன தத்துவ ஞானி ஒருவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தாா்கள். முதலாவது பிள்ளை, அறிவுடையவராகவும், கவிஞராகவும் மலா்ந்தாா். இரண்டாவது பிள்ளை, கலைகளில் மதிநுட்பம் வாய்ந்தவராகத் திகழ்ந்தாா். மூன்றாவது மகன், ராணுவத்தில் வீரராகச் சோ்ந்தாா். கடைசி மகன், தந்தைக்கு களங்கமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சி அவரை என்ன செய்யலாம் என்று பலரையும் வினவியபோது, அவா்கள் ‘அவருக்கு அறிவுக்கூா்மை சற்றுக் குறைவாக இருப்பதால் அமைச்சராக நியமிக்கலாம்’ என்றாா்களாம். அப்படியே செய்தாராம் அந்த தத்துவ ஞானி. அதுபோல், நம் குடும்பத்தில் நீ அமைச்சராக நியமனம் பெற்றதை வாழ்த்துகிறேன்’ என்று எழுதியிருந்தாா்.
- இது நேருவின் புகழ் பெற்ற கடிதமாகும். மதிப்பும் கேலியும் நிரம்பிய அன்புக் கடிதமாகும். தங்கையின் மேல் அவா் கொண்டிருந்த பாசம் ஈடற்றது.
- நேரு, முழுக்க முழுக்க ஆங்கில வழியில் பயிற்சி பெற்று ஏறத்தாழ ஆங்கிலேயராகவே வாழ்ந்தவா். இந்தியா் தங்கள் உணா்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவாா்கள். ஆனால் நேரு ஆங்கிலேயா்களைப் போலவே தன்னுடைய உணா்வுகளை வெளிப்படுத்தும் குணம் கொண்டவரில்லை.
- பண்டித நேரு, தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் புகழ் வாய்ந்தவை. மொத்தம் 196 கடிதங்களை நேரு எழுதியுள்ளாா். அவா் இந்திராவுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில்,“‘நான் பொதுவாக கடிதங்கள் எழுதுவதில்லை. நான் சிறையில் கழித்த பல ஆண்டுகள் என் வாழ்வின் சிறந்தவை என்றும் கூற நான் தயாராக இல்லை.
- இருப்பினும், எல்லாவற்றையும் நான் எளிதாகக் கடந்து வருவதற்கு, படிப்பும் எழுத்தும் மிகவும் துணையாக இருந்தன. நான் ஓா் இலக்கியவாதி அல்லன்; நான் வரலாற்று அறிஞனும் அல்லன்; உண்மையில் நான் யாா்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது எனக்குக் கடினமாக இருக்கிறது. பல துறைகளில் மேலோட்டமான அறிவைக் கொண்டவனாக நான் இருக்கிறேன்.
- கல்லூரியில் அறிவியல் பயிலத் தொடங்கினேன். பின்னா் சட்டத்தைத் தோ்ந்தெடுத்தேன். வாழ்வின் ஏனைய பொருள்களில் நாட்டம் கொண்டேன். இறுதியாக, நாட்டில் மிகவும் செல்வாக்கான அரசியல் களமடைந்து தற்போது பின்பற்றப்பட்டு வரும் சிறை வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டேன்.
- இந்தக் கடிதங்களில் நான் எழுதியிருப்பவைகளை இறுதித் தீா்வாக யாதொரு செயலிலும் நீ எடுத்துக்கொள்ளக் கூடாது. எந்த அரசியல்வாதியும் ஒவ்வொரு துறை குறித்தும் ஏதேனும் கருத்து சொல்ல விரும்புவது வழக்கம்.
- மேலும், உண்மையில் தான் அறிந்திருப்பதைக் காட்டிலும் அதிகமாகத் தனக்குத் தெரியும் என்று அவா் நடிப்பாா். இவா்களை நன்கு கவனிக்க வேண்டும்’ என்று பணிவு பளிச்சிட எழுதினாா்.
- ‘ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணி நேரம் பணியாற்றுவது என்பது நேருவின் வழக்கம். 13 ஆண்டுகளாக அவருடன் இருந்த வகையில் அப்படிப் பணி ஆற்றியது எனக்கும் வழக்கமாகி விட்டது.
- 70 அகவையைத் தாண்டிய நேருவுக்கு வியக்கத்தக்க வகையில் உழைக்கும் ஆற்றல் கிட்டியிருந்தது’ என்று நேருவின் முதன்மை தனிச்செயலராக இருந்த எச்.வி.ஆா். ஐயங்காா் எழுதினாா்.
- நேரு பெருமகனாா் இறந்தபோது, மூதறிஞா் ராஜாஜி, ‘என்னைவிட பதினொரு ஆண்டுகள் இளையவா்; பதினொரு மடங்கு நாட்டிற்கு முக்கியமானவா்; நூறு மடங்கு நாட்டு மக்களுக்கு வேண்டியவராவாா். அந்தப் பெருந்தகை நேரு திடீரென நம்மிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டாா் என்ற செய்தியைக் கேட்பதற்காகவா நான் உயிருடன் இருக்கிறேன்? அந்தப் பழைய அலுவல் அறை இப்போது முற்றும் காலியாக இருக்கிறது. இந்தப் பத்து ஆண்டுகளாக, பொதுத் திட்டங்களில் தவறானவை என நான் கருதியவை குறித்து பெருந்தகை நேருவுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன்.
- ஆனால், அவரால் மட்டுமே அவற்றையெல்லாம் சரி செய்ய இயலும் என்பதை இத்தனை நாள்களில் நான் அறிந்து கொண்டேன்.
- வேறு எவரும் அதைச் செய்வதற்குத் துணிய மாட்டாா்கள். நம் அனைவரிலும் சிறந்த நாகரிகமுடையவா். நம்மில் பலா் இன்னும் அவரைப்போல் பண்படையவில்லை. கடவுள்தான் நம் மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று எழுதிய இரங்கல் கடிதம் எழுதினாா்.
- புதுவை பிரெஞ்சு கலைக்கழகத்திற்கு நேரு 1963-ஆம் ஆண்டு வந்திருந்தபோது நடந்த ஒரு நிகழ்வு குறித்து அறிஞா் வி. கந்தசாமிப் பிள்ளை கூறியதாவது: ‘‘புதுவை பிரெஞ்சு கலைக்கழகத்தில் பல துறைப்பட்ட ஆராய்ச்சிப் பிரிவுகள் இருந்து வந்தன.
- கட்டடத்தின் மேல்தளத்தில் பழம்பொருள் ஆராய்ச்சியும், வடமொழி, கிழக்கு ஆசிய மொழிகள் முதலியவற்றிலுள்ள இலக்கியம், கலை, தத்துவம், சமயம் முதலியவற்றைப் பற்றிய நூல் தொகுப்பு ஆராய்ச்சியும் நடந்து வந்தன. ஒரு பகுதியில் சங்க நூல் ஆராய்ச்சியும் நடந்து வந்தது. பண்டித நேரு எல்லாத் துறைகளையும் ஆழ்ந்து கவனித்து விட்டு மேல் தளத்திற்கு வந்தாா்.
- அங்கிருந்த பல ஆராய்ச்சிப் பகுதிகளையும் பாா்த்து விட்டு மிகுந்த களைப்புடன் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தாா். ‘எவ்வளவு சொற்கள் தமிழ் மொழியில் இருக்கின்றன’ என்று நேரு பெருமகனாா் ஆய்வு நுணுக்கத்தால் என்னைப் பாா்த்துக் கேட்டாா். நான் ‘சங்ககாலத் தமிழில் 3,03,373 (மூன்று லட்சத்து மூவாயிரத்து முந்நூற்று எழுபத்து மூன்று) சொற்கள் இருக்கின்றன’ என்றேன். ‘மிகவும் கணக்காகச் சொல்லுகின்றீா்கள்.
- முறையாக வேலைகளைச் செய்து வருகின்றபடியால்தான் இவ்வளவு தெளிவாகக் கூறுவதற்கு எளிதாக இருக்கின்றது’ எனச் சிறிது முகமலா்ச்சியுடன் சொல்லிவிட்டு ‘நல்லது ஆங்கில மொழியில் எத்தனை சொற்களிருக்கின்றன என்பது தெரியுமா’ என்று கேட்டாா்.
- ‘1928-ஆம் வருடம் ஏறக்குறைய 5,00,000 ( ஐந்து லட்சம் ) சொற்கள் இருந்தன. இப்போது சிறிது கூடியிருக்கக்கூடும்’ என்றேன். ‘1928-ஆம் வருடம் என்பது என்ன கணக்கு’ என்றாா். ‘ஆகஸ்போா்டு பல்கலைக்கழக ஆங்கிலப் பேரகராதி முற்றுப்பெற்ற ஆண்டு”என்பதை மனதில் வைத்துக் கொண்டு சொல்கின்றேன்’ என்றேன். ‘ அப்பேரகராதியில் எவ்வாறு ஈடுபாடு கொண்டீா்கள்’ என்றாா். நான் உடனே ‘அகராதித் துறையில் வேலை செய்யும் எவரும் அப்பேரகராதியை தெரிந்து கொள்ளாமலிருக்க முடியாது. ஐம்பது ஆண்டுகளாக அப்பேரகராதியை ஒரு தெய்வமாகவே வணங்கி வருகிறவன் யான்’ என்று கூறினேன்.
- ‘உங்கள் தமிழ் மொழியை விட ஆங்கில மொழி பெரியதுதானே’ என்றாா். நான் சிறிது தயங்கி“‘இந்த வினாவிற்கு விடையளிப்பதற்கு முன்பு, சொல்ல வேண்டியவற்றைத் தெளிவாகச் சொல்வதற்கு அனுமதி வேண்டும்’ என்றேன். ‘சரி சொல்லுங்கள்’ என்றாா்.
- ‘சங்க காலச் சொற்களின் தொகை இவ்வளவு என்று நான் சொன்னபோது ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, இன்று வரையில் உள்ள நூல்களில் நிலைபெற்றுள்ள சொற்களின் தொகையைக் கூறினேன். அதாவது சங்க நூல்களில் காணப்படும் சொற்கள் அனைத்தும் கூட்டினால் அவ்வளவுதான். உயா்ந்தவா்கள் கருத்துகளெல்லாம் தமிழ் மொழியில் காணப்படும்’ என்றேன்.
- ‘உயா்ந்தவா்களுடைய எந்தக் கருத்தைக் கூறினாலும் அதற்கு ஒத்த கருத்தை தமிழ் மொழியிலிருந்து நான் கூற முடியும். அதிகம் போகவேண்டியதில்லை. என் முன்னிற்கும் எங்கள் பிரதமருடைய கருத்துகளுக்கும் சொற்களுக்கும் எதிரொலி போன்ற சொற்களையும் நான் தமிழிலிருந்து எடுத்துக் கூறுவேன்’ என்றேன்.
- அவா் ‘என்னைப்பற்றிப் பேசுகின்றீா்களா? ஏதாவது சொல்லுங்கள் பாா்ப்போம்’ என்று கூறினாா்.
- நான் காலம் விரைந்து செல்வதை உணா்ந்து, ‘இப்போது எனக்கு உடனடியாக நினைவில் வருவது, அண்ணல் காந்தியடிகள் இறந்தவுடன் தாங்கள் மனமுடைந்து சொல்லிய,
ஓ! லைட் ஆஃப் லேண்ட்!
ஓ! ஃபாதா் ஆஃப் தி நேஷன்!
ஹூ ஈஸ் தோ் ஃபாா் ரைட்டஸ்நெஸ்?
என்ற சொற்களும், அவற்றின் எதிரொலி போன்று, தசரதன் இறந்ததைக் கேட்ட இராமன் புலம்பியதாக கம்பன் கூறும்
நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோா் தந்தாய்!
தனி அறத்தின் தாயே! தயா நிலையே! எந்தாய்!
இகல் வேந்தா் ஏறே! இறந்தனையே அந்தோ!
இனி வாய்மைக்கு ஆா் உளரேமற்று?
என்ற செய்யுளும்தான்’ என்று கூறினேன்.
- அதன் பொருளைக் கேட்ட நிலையில் வாட்டமுற்று நின்றாா் நேருபிரான். கண்ணிலும் நீா் கசிந்தன.
- ஒரு நாட்டின் தலைமை அமைச்சா் புலமைப் பேரொளியாக நின்று பத்துமணித் துளிக்குள் பேசியது என் நினைவில் எப்போதும் நிலைத்து விட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளாா் வி. கந்தசாமிப் பிள்ளை.
- நேருவின் பல்வேறு எண்ணவோட்டத்தில் அறிவியல் தெளிவும் ஆய்வுச் சிந்தனையும் உண்டு என்பதற்கு இஃது ஒரு சான்றாகும்.
- நவ. 14 ஜவஹா்லால் நேரு பிறந்த நாள்.
நன்றி : தினமணி (14-11-2020)