நர்கிஸ் மொகம்மதி
- 2023 க்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி நர்கிஸ் மொகம்மதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இப்போது ஈரான் நாட்டின் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் ஆளுமைகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1935 இல் ஜெர்மானியப் பத்திரிகையாளர் கார்ல் வொன் அஸ்ஸிட்ஸ்கி (Carl Von Ossietzky) ஹிட்லரின் ஆட்சியில் சிறையில் இருந்தார். அப்போது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
சிறையில் விருதாளர்கள்
- 1991இல் அமைதிக்கான நோபல் பரிசு மயன்மார் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு அறிவிக்கப்பட்டபோது, அவர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்தே தன் நோபல் உரையை அவர் ஆற்ற முடிந்தது. பின்னர் அவரது நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. வெளிநாட்டுக்காரரை மணந்தவர் என்பதால், அவரால் பிரதமராக முடியவில்லை. எனினும், ராணுவத்துடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்ட ஆங் சான் சூச்சிக்கு, பிரதமருக்கு நிகரான பதவி (ஸ்டேட் கவுன்சிலர்) வழங்கப்பட்டது. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்திய மயன்மார் ராணுவத்தை ஆதரித்தார். இது தொடர்பான வழக்கில், சர்வதேச நீதிமன்றத்தில் மயன்மார் ராணுவத்துக்கு ஆதரவாக ஆஜரானார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரா இவர் எனப் பலத்த கண்டனம் எழுந்தது. பின்னர், ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம் அவரைச் சிறையில் தள்ளியது தனிக்கதை.
- 2010 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சீனாவின் லியு ஜியாபோவுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவர் 11 ஆண்டு தண்டனை பெற்றுச் சிறையில் இருந்தார். 2017 இல் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். பரிசை வாங்காமலே காலமானார்.
- கடந்த ஆண்டுக்கான விருது பெலாரஸைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கி, உக்ரைனில் இயங்கும் மனித உரிமைக் குழுவான சிவில் உரிமைகளுக்கான மையம் (Center for Civil Liberties), ரஷ்யாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான மெமோரியல் ஆகியோருக்கு இணைந்து அறிவிக்கப்பட்டது. அப்போது பியாலியாட்ஸ்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2020இல் நடந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாகப் போராட்டங்களை முன்னெடுத்துவந்த அவர், 2021 இல் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
- அவருக்கு நோபல் பரிசு அறிவிக் கப்பட்டுள்ளதே தெரியுமா என்பதே தெரியவில்லை என்று அவரது சக தோழர்கள் அப்போது கூறினார்கள். எதிர்க்கட்சி நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக பெலாரஸுக்குப் பணம் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த பியாலியாட்ஸ்கிக்கு, 2023 மார்ச் மாதம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பின்னர்தான் அவருக்குத் தண்டனையே வழங்கப்பட்டது.
பெண்ணுரிமைப் போராளி
- சிறையில் இருக்கும்போது நோபலுக்கான அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாவது ஆளுமைதான் நர்கிஸ் மொகம்மதி. ‘Defenders of Human Rights Center’ எனப்படும் மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் துணைத் தலைவராகச் செயல்படும் நர்கிஸ், மாணவப் பருவத்திலிருந்தே பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அரசியல் சீர்திருத்தங்களுக்காகவும் எழுதியும் பேசியும் களத்தில் போராடியும் வருபவர்.
- ஈரானின் முதல் நோபல் விருதாளரான ஷிரின் எபாடியால் தொடங்கப்பட்ட அமைப்பில்தான் நர்கிஸ் செயல்பட்டு வருகிறார். மத அடிப்படைவாதிகளின் கையில் சிக்கியுள்ள ஈரானின் ஆட்சிக்கு எதிராகக் கடந்த ஆண்டு எழுந்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியில் நர்கிஸ் முன்னணியில் இருந்தார்.
- ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக ஈரானின் கலாச்சார போலீஸால் கைதுசெய்யப்பட்டுக் காவல் துறையின் சித்ரவதைகளால் மரணமடைந்த இளம்பெண் மாஷா ஆமினிக்கு நீதி கேட்டு ஈரானிய மக்கள் கிளர்ந்தெழுந்த தருணத்தில், சிறைக்குள் அடைக்கப்படும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல், பிற வன்முறைகள் குறித்த விரிவான அறிக்கையை நர்கிஸ் மொகம்மதி வெளியிட்டார்.
- தனிமைச் சிறைக்கு எதிராகவும் மரண தண்டனைக்கு எதிராகவும் அவர் சிறைக்குள் இருந்தபடியே எழுதியும் சமூக வலைதளங்களில் பேசியும் போராடிக் கொண்டிருக்கிறார். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் அவருடைய கைதைக் கண்டித்தன. அவரை விடுதலை செய் யக் கோரிக்கைவிடுத்தன. மதவாதிகள் செவிமடுப்பதா யில்லை.
- சக போராளியான தாகி ரஹ்மானியைக் காதல் மணம் புரிந்தவர் நர்கிஸ் மொகம்மதி. 1999இல் அவரது கணவரும் கைது செய்யப்பட்டார். இப்போது 14 ஆண்டு சிறை வாழ்வை முடித்த தாகி ரஹ்மானி தனது இரு குழந்தைகளுடன் பிரான்ஸில் வசித்து வருகிறார். நர்கிஸ் நாட்டைவிட்டு வெளியேறாமல் தன் போராட்டத்தைத் தொடர்ந்துவந்தார். கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமைதி அரசியல்
- அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான நோபல் பரிசுகளோடு ஒப்பிடுகையில் அமைதிக்கான நோபல் பரிசு அரசியல் தன்மை உடையதாக இருப்பதைக்காணலாம். அதிகாரத்துக்கு எதிராக மனித உரிமைகளுக்காகப் போராடும் ஆளுமைகள், அமைப்புகளுக்கே இப்பரிசு வழங்கப்பட்டு வருவதைப் பார்க்கலாம். நர்கிஸுக்கு இப்பரிசை அறிவித்ததற்காக நோபல் கமிட்டியை விமர்சித்து ஈரான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கண்டித்துள்ளது.
- இது அரசியல் நோக்கமுடைய அறிவிப்புதான் என்பதில் ஐயமில்லை. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமை அல்லது அமைப்பு யாரை எதிர்த்து எந்த அதிகாரத்தை எதிர்த்து எப்படிப் போராடுகிறார்கள் என்பதைப் பார்த்தே அந்த அரசியல் சரியா, தவறா என்று சொல்ல முடியும். சென்ற ஆண்டு உக்ரைனுக்கு ஆதரவான பரிசாக அது அமைந்ததைப் பார்த்தோம். நோபல் பரிசுக்கும் சாய்மானம் உண்டு.
- ஈரானைப் பொறுத்தவரை பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் மனித உரிமைகளை மீறுவதை அன்றாட நடைமுறையாகவும் கொண்டுள்ள அரசுதான் ஆட்சியில் இருக்கிறது. மத அடிப்படைவாதக் கருத்தியலைத் தூக்கிச் சுமக்கும் ஓர் அரசு அப்படித்தான் இருக்கும். 2003 இல் ஈரானிய மனித உரிமைப்போராளி எபாடிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- எதற்காக அன்று அவருக்கு வழங்கப்பட்டதோ அதே காரணங்களுக்காக மீண்டும் ஈரானியப் போராளி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட 20 ஆண்டுகளில் எவ்வித ஜனநாயக மாற்றமும் ஈரானில் நடைபெறவில்லை. நர்கிஸ் மொகம்மதி நோபல் பரிசைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார் என்பது தெரிந்ததே.
- ஈரானில் ஜனநாயகம் தழைக்க வேண்டும். அதற்கு இந்த நோபல் பரிசு அறிவிப்பு ஒருவகையில் சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த உதவ வேண்டும். ஆனால், முந்தைய உதாரணங்கள் அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்பதே நிதர்சனம். மதவாத அரசியல் பரவிவிட்டால், ஆட்சி அதிகாரத்திலும் அது எதிரொலித்தால் ஒரு நாடு ஜனநாயகத்துக்கு மீண்டு வருவது எளிதல்ல என்பதைத்தான் ஈரான் நமக்குக் காட்டுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (12 - 10 – 2023)