TNPSC Thervupettagam

நைட்டிங்கேல்: காலத்தைத் தாண்டிய ஒளி

May 12 , 2020 1709 days 803 0
  • பள்ளிப் பாடப்புத்தகங்களின் வாயிலாக ‘கை விளக்கேந்திய காரிகை’ என்ற பெயரில் நமக்கு அறிமுகமானவரும், தாதியர்களுக்கு லட்சிய உருவமாக இருப்பவருமான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த நாள் இன்று.
  • ஒரு பெருந்தொற்று காலத்தில், கைகள் கழுவுவது உள்ளிட்ட அடிப்படையான பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசும் இந்நாட்களில், ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவுகூர்வது இன்னமும் பொருத்தமானது.
  • பொதுச் சுகாதாரத்தையும் சுத்தத்தையும் மேம்படுத்துவதன் மூலம், தொற்றுநோய்ப் பரவலைக் குறைக்க முடியும் என்பதைத் தனது செயல்பாடுகளின் வழியாக நிரூபித்துக் காட்டிய முதன்மையான நவீன தாதி அவர்தான்.
  • சுகாதாரமாக இருப்பதற்கும் நோய் குணமாவதற்கும் இடையிலான தொடர்புகள் அறியப்படவோ... சொன்னால் நம்பவோபடாத 1800-கள் அது. தாதிப் பணிக்கு வருவதற்கு முன்னர் கணிதத்தில் ஈடுபாடு மிக்க அவர், தொற்றுநோய்கள் பரவுவது, குணமாவது தொடர்பில் புள்ளியியலையும் விளக்கப்படங்களையும் பயன்படுத்திய முன்னோடி.
  • ரஷ்யாவுக்கு எதிராக துருக்கியுடன் பிரிட்டனும் பிரான்ஸும் சேர்ந்து போரிட்ட கொடூரமான கிரீமியன் போர்தான் கணிதம் போதித்துவந்த நைட்டிங்கேலை மருத்துவ சேவை நோக்கி ஈர்த்தது. 1854-ல் துருக்கியில் உள்ள ராணுவ மருத்துவமனைகளில் ஆங்கிலேயப் படை வீரர்கள் சந்தித்த மோசமான சூழ்நிலையைப் பற்றி போர்ச் செயலரான சிட்னி ஹெர்பர்ட் ஒரு பத்திரிகை செய்தியைப் படித்து வேதனை அடைந்தார்.
  • அவர் தனது தோழி நைட்டிங்கேலை அழைத்தார். நைட்டிங்கேலின் தலைமையில் துருக்கிக்குச் சென்ற 38 மருத்துவத் தாதிகள், ராணுவ மருத்துவமனைகளில் இருந்த நிலையைப் பார்த்துத் திகிலடைந்துபோனார்கள்.
  • காயமடைந்த வீரர்கள் ஒருவரின் மூச்சு இன்னொருவருக்குப் படும்படி படுத்திருந்த அறைகள், அழுக்கும் கழிவுநீரும் ஓடும் தரை, எலிகள் ஓடும் தாழ்வாரம் என ராணுவ மருத்துவமனை நரகம்போல இருந்தது.

நோயை விரட்டிய கணிதம்

  • நைட்டிங்கேலின் கணிதத் திறன், ராணுவ மருத்துவமனையில் நோயோடு போராடிக்கொண்டிருந்த வீரர்களைக் காப்பாற்றுவதற்காகச் செயல்படத் தொடங்கியது.
  • மரணங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் அவர் பட்டியலிட்டார்.
  • போர்க்களத்தில் அடைந்த காயங்களால் விளைந்த மரணங்களைவிடவும் மருத்துவமனைக்கு வந்த பின்னர் ஏற்பட்ட நோய்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அவரால் கணக்குகள் வழி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அரசுக்கும் நிரூபிக்க முடிந்தது.
  • நைட்டிங்கேல் உருவாக்கிய போலார் விளக்கப்படத்தில், நீல வண்ணமிட்ட பகுதிகள் முன்கூட்டியே தடுக்கக்கூடிய வியாதிகளைக் காட்டக்கூடியதாகவும், சிவப்பு வண்ணம் போரில் பட்ட காயங்களால் ஏற்பட்ட மரணங்களையும், கருப்பு வண்ணம் பிற காரணங்களால் ஏற்பட்ட மரணங்களையும் காட்டுவதாகவும் இருந்தன.
  • ராணுவ நிர்வாகத்திடம் போலார் வரைபடத்தைக் காட்டிப் பேசி, மருத்துவமனைகளின் சுகாதார நிலையை மேம்படுத்தியதுதான் நைட்டிங்கேலின் முதல் வெற்றிகரமான தலையீடு.
  • மருத்துவமனைக்கு வந்த பிறகு போர் வீரர்களுக்கு வரும் நோய்களை, அவர் சுகாதாரத்தை மேம்படுத்திக் குறைத்ததன் வழியாக இறப்பு விகிதம் ஆண்டுக்கு 40%-லிருந்து வெறும் 2.2%-ஆகக் குறைந்தது. போலார் விளக்கப்படம் இன்றும் புள்ளியியல் கணக்கீட்டில் நைட்டிங்கேலின் பெயராலேயே அறியப்படுகிறது.

புள்ளியியல் தரவுகள்

  • கிரீமியன் போருக்குப் பின்னர், மருத்துவரீதியான திட்டங்களை இடுவதற்குப் புள்ளியியல்ரீதியான தரவுகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தார் நைட்டிங்கேல்.
  • லண்டனில் உள்ள ‘இன்டர்நேஷனல் ஸ்டேடிஸ்டிக் காங்கிரஸ்’ மூலமாக அனைத்து மருத்துவமனைகளின் புள்ளிவிவரங்களையும் ஒரேமாதிரியாகச் சேகரிக்கும் திட்டத்தை முன்வைத்தார்.
  • இத்திட்டத்தின் மூலம் ஒரு நோயாளியின் விவரங்களை மருத்துவமனை அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் தேச அடிப்படையிலும் ஒப்பிடும் சூழல் ஏற்பட்டது.
  • 1857-ல் நைட்டிங்கேலை ப்ரூசெல்லோசிஸ் நோய் தாக்கியது. பாக்டீரிய நோய்த்தொற்று கொண்ட இறைச்சி, பால் பொருட்களை உண்பதன் வாயிலாக ஏற்படும் நோய் அது.
  • காய்ச்சல், சோர்வு, உடல் வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இந்த நோய்த்தொற்று நைட்டிங்கேலுக்கு கிரீமியன் போரில் காயமடைந்த வீரர்களுக்குச் சேவையாற்றிய காலகட்டத்தில் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • படுத்த படுக்கையாக இருந்தும் வீட்டிலிருந்தபடி பணிகளைத் தொடர்ந்தார். இங்கிலாந்து அரசின் சுகாதாரச் சீர்திருத்தத்தை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான நூல்கள், அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்களைத் தனது வாழ்நாள் முழுவதும் எழுதி வெளியிட்டார்.
  • இங்கிலாந்தில் தாதியருக்கான புகழ்பெற்ற கல்லூரிகள் அவரது முயற்சியின் வாயிலாகவே தொடங்கப்பட்டன.
  • சுகாதாரம் தொடர்பான உணர்வு பொதுமக்களிடம் பரவலாவதை நைட்டிங்கேல் தனது வாழ்நாளிலேயே பார்த்தார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பெட்பேன் எனப்படும் கழிகலங்கள் வழங்கத் தொடங்கியிருந்தனர்.
  • காற்றோட்டமான இடமும், சுத்தமான போர்வைகளும், உணவுக் கிண்ணங்களும் நோயாளிகளுக்கு அவசியம் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. நைட்டிங்கேலின் கவனம் இந்தியாவில் உள்ள படை வீரர்களின் ஆரோக்கியம் சார்ந்தும் திரும்பியது.
  • இங்கிலாந்தின் ஆதிக்கம் இருந்த எல்லா நாடுகளிலும் உள்ள ராணுவக் குடியிருப்புகளில் சுகாதாரம், சுத்தமான நீர் வழங்கப்படுவதற்கு அவர் காரணமாக இருந்தார்.

பெருந்தொற்று அறிவியல்

  • நைட்டிங்கேலின் புள்ளியியல்ரீதியான பகுப்பாய்வு, பெருந்தொற்று அறிவியலில் மிக முக்கியமான கணக்கீடாக விளங்குகிறது. இப்போது கரோனா பரவலைக் கணக்கிடக்கூட அவர் உருவாக்கிய கணக்கு மாதிரிகள் உதவுகின்றன.
  • நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, வீழ்ச்சி அடைவது, எதிர்கால நிலைமை பற்றிக் கணிப்பது என எல்லாவற்றுக்கும் இந்தக் கணக்கீடு உதவுகிறது.
  • சுகாதாரப் பணியாளர்கள், அரசியலர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை பெருந்தொற்றுகள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குக் கணிதத்தைத்தான் முதன்மையான கருவியாகப் பெருந்தொற்றியலாளர்கள் பார்க்கின்றனர்.
  • கைவிளக்கேந்திய காரிகையின் 200-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் அவர் தனது கணிதத்தின் மூலம் பரப்பிய ஒளிக்காக அவருக்கு நன்றி சொல்வோம்.

நன்றி தி இந்து (12-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்