- பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மருந்து ஆராய்ச்சி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா அண்மையில் சமர்ப்பித்த அறிக்கை, மருத்துவ உலகில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. கரோனா தீநுண்மிக்கு எதிரான தங்கள் தயாரிப்புத் தடுப்பூசியான வேக்ஸெர்வியா’ (இந்தியாவில் கோவிஷீல்டு) காரணமாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டணுக்கள் குறைதல் உள்ளிட்ட அசாதாரணமான பக்க விளைவுகள் மிகச் சிலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு என்ற அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் ஒப்புதல், இப்போது உலகம் முழுவதிலும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
- 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனா வின்வூஹான் மாகாணத்திலிருந்து பரவிய கரோனா தீநுண்மி, காற்றின் மூலமாக பலருக்கு விரைவாகப் பரவி, உடலின் சுவாச மண்டலத்தைச் செயலிழக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்திய கொடிய பெருந்தொற்றாகும்.
- இதற்கு தகுந்த சிகிச்சை முறையைக் கண்டறியாத சூழலில், உலகம் முழுவதிலும் பொது முடக்கம் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளால் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக உலகின் இயல்புவாழ்க்கையும், மக்களின் வாழ்வாதாரமும், நாடுகளின் பொருளாதாரமும் சீர்குலைந்தன.
- இந்நிலையில், கரோனா தீநுண்மியின் பரவலைக்கட்டுப்படுத்த, தடுப்பூசியைக் கண்டறியும் ஆய்வுகளில் மருத்துவ உலகம் ஈடுபட்டது. இந்த ஆராய்ச்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் கூட்டாக ஈடுபட்டு உருவாக்கிய தடுப்பூசி வேக்ஸெர்வியா என்பதாகும்.
- உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்புகளால் பலகட்டங்களாக நடந்த மாதிரிப் பரிசோதனைகளுக்குப் பிறகே இந்தத் தடுப்பூசி மக்களுக்குச் செலுத்த அனுமதிக்கப்பட்டது.
- தடுப்பூசி என்பதே உடலின் வழக்க மான இயக்கத்துக்கு மாறான செயல்முறைதான். நோய்க்கு எதிராகச் செயல்படும் வகையில் நமது மனித உடல் இயல்பான தகவமைப்பைக் கொண்டிருக்கிறது. அதையும் சில நோய்கள் முறியடிக்கும் போது தான் வெளியிலிருந்து சிகிச்சை தேவைப்படுகிறது.
- உடலின் இயக்கத்திற்கு சற்றும் வேறான ஒரு புதிய நுண்ணுயிரியை தடுப்பூசி வடிவில் உடலில் ஏற்றும் போது,சிலருக்கு பக்க விளைவு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இதனை மிகவும் குறைந்த சதவீத அளவில் மருத்துவ உலகம் அனுமதிக்கிறது. கரோனா தீநுண்மித் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த தடுப்பூசியைத் தவிர வேறு வழியில்லை என்பதால்தான், தடுப்பூசி முறையை உலக சுகாதார நிறுவனம் ஏற்றது. அதையடுத்து, மகாராஷ்டிரத்தின் புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் இதனை இந்தியாவில் தயாரிக்க, கடந்த 2020-இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு 'கோவிஷீல்டு' என்று பெயரிடப்பட்டது. இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க 2020-இல் மத்திய அரசு பொது முடக்கத்தை கொண்டு வந்தது. மேலும் 2021-இல் தடுப்பூசியையும் கட்டாயமாக்கி இருந்தது.
- 2021 ஜன. 16- இல் கரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கியது. இந்தத் தடுப்பூசி இயக்கத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது, 'கோவிஷீல்டு தான். இதனை சுமார் 84 நாட்கள் இடைவெளியில் இரு தடவைகளாக (டோஸ்) செலுத்த வேண்டி இருந்தது.
- இதே காலகட்டத்தில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், முற்றிலும் உள்நாட்டிலேயே 'கோவேக்ஸின்' தடுப் பூசியை உருவாக்கியது. டாக்டர் ரெட்டி லேபரட்டரீஸ் நிறுவனத்தின் 'ஸ்புட்னிக் தடுப்பூசி, ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனத்தின் 'மாடர்னா' தடுப்பூசி உருவாக்கப்பட்டன. இவற்றையும் இந்திய அரசு பயன்படுத்தியது. எனினும் இவற்றின் பங்களிப்பு விகிதம் குறைவே. தடுப்பூசி கொள்முதலுக்காக இந்திய அரசு இதுவரை ரூ.35,000 கோடி செலவிட்டுள்ளது. இந்திய அரசு மேற்கொண்ட தீவிர முனைப்பால் 12 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 88 % பேருக்கு இரண்டு டோஸ்கள் தடுப்பூசியும், 95% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டுள்ளன. இதுமத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் கிடைக்கும் புள்ளிவிவரம் (2024 மே 3 நிலவரம்). நாடு முழுவதிலும் மொத்தமாக, 220.7 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாகவே கரோனா பர வல் நம் நாட்டில் தடுக்கப்பட்டிருக்கிறது. கரோனா தீநுண்மியின் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் 77.4 கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். 70 லட்சம் பேர் பலியாகினர்.
- இன்றும் கூட நதர்ப்புறங்களில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தொற்றின் பரவல் நிற்கவில்லை. கடந்த 2024 மார்ச் 31-இல் உலகம் முழுவதிலும் 49,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
- இந்தியாவில் 4.50 கோடிபேர் கரோனா பாதிப்புக்குள்ளாகினர். அவர்களில் 5.34 லட்சம் பேர் பலியாகினர். நாட்டில் தற்போது கரோனா பெருந்தொற்றுப் பரவல் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையை எட்டிஇருக்கிறோம்.
- இந்தச் சூழலில்தான், பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் 51 தடுப்பூசிப் பயனாளிகள் தொடர்ந்த வழக்கில் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தனது மருந்தின் பின்விளைவுகள் குறித்து கூறியிருக்கிறது. இது ஆராயாமல் வதந்தி பரப்புவோருக்கு கிடைத்த வாய்ப்பாகிவிட்டது.
- உலக சுகாதார நிறுவனத்தின் தொழில் நுட்ப தலைமைப் பொறுப்பில் இருந்த இந்திய விஞ்ஞானியான சௌம்யா சுவாமிநாதன், ‘தடுப்பூசி செலுத்தியவுடனேயே பக்க விளைவுகள் தெரியவருமே தவிர, நீண்ட நாட்கள் கழித்து அதனால் பாதிப்புகள் ஏற்படாது” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
- முற்றிலும் நம் நாட்டிலேயே 'கோவேக்ஸின்' தடுப்பூசியைக் கண்டறிந்த பாரத் பயோடெக் நிறுவனம், தங்கள் மருந்தால் எந்தப் பின்விளைவும் ஏற்படாது என்று உறுதி அளித்திருக்கிறது.
- எனவே, தடுப்பூசிகள் குறித்த வதந்தி களைப் புறக்கணிப்பது அவசியமாகும். நோயை விட மிக வேகமாகப் பரவும் வதந்தி, மருத்துவ விஞ்ஞானிகளின் தன்னம்பிக்கையைச் சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது.
நன்றி: தினமணி (04 – 05 – 2024)