TNPSC Thervupettagam

நோய்களுக்கு 'நோ'

July 29 , 2023 532 days 308 0
  • ஒவ்வாமை காரணமாக நமது சுவாசப் பாதையில் ஏற்படும் வீக்கத்தினாலோ சுருக்கத்தினாலோ சீரான சுவாசம் தடைப்படுவதே ஆஸ்துமா. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாது. ஆஸ்துமா பாதிப்பு ஒரு முறை ஏற்பட்டால், அது நோயாளியின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். ஆஸ்துமா உயிரிழப்பை ஏற்படுத்தாது என்றாலும், வாழ்க்கைத் தரத்தை வெகுவாகப் பாதிக்கும்; அன்றாட வாழ்க்கையைச் சிரமத்துக்கு உள்ளாக்கும். அடிக்கடி வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும்.
  • அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய நவீன மருத்துவத் தொழில்நுட்பம் நோய் கண்டறிதலையும், முறையான சிகிச்சையையும் எளிதாக்கி இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70% தாங்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப் பட்டிருப்பது தெரியாமல் அல்லது முறையான சிகிச்சை பெறாமல் வாழ்ந்துவருகின்றனர். தற்போது இந்தியாவில், மூன்று கோடிக்கும் மேலானோர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர்; 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 18 சதவீதத்தினர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு

  • ஆஸ்துமா பாதிப்பின் போது, நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயின் (Bronchus) வெளிப்புறத் தசைகள் இறுக்கமடைகின்றன. இது சிறு மூச்சுக் குழாய்களை (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கச் செய்கிறது. அதே நேரத்தில், மூச்சுக்குழாயின் உள்புறச் சவ்வும் வீக்கமடைகிறது. வெளிப்புறத் தசைகளின் இறுக்கமும் உள்புறச் சவ்வின் வீக்கமும் சுவாசப் பாதையைச் சுருங்கச் செய்கின்றன. மேலும், வீங்கிய உள்புறச் சவ்விலிருந்து சளியும் வெளியேறும்.
  • இந்தச் சளியானது, ஏற்கெனவே சுருங்கியிருக்கும் சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி, தீவிர மூச்சுத் திணறலை உருவாக்குகிறது. ஆஸ்துமா பாதிப்பின்போது மூச்சை உள்ளிழுப்பதில் சிரமம் இருக்காது; மூச்சை வெளிவிடுவதே சிரமமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர் வெளியிடும் மூச்சு ஒரு வித விசில் சத்தத்துடன் வெளியேறும். ஆஸ்துமா வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படும் என்றாலும், சிறார்களே இதன் பாதிப்புக்கு அதிகமாக ஆளாகின்றனர்.

காரணிகள்

  • ஒவ்வாமையும் மரபுவழி தன்மையும்தான் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை, வாசனைத் திரவியங்கள் போன்றவற்றால் தூண்டப்படும் ஒவ்வாமையால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படலாம். குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பநிலை ஆகிய இரண்டினாலும் ஆஸ்துமா ஏற்படும் சாத்தியம் உண்டு.
  • நுரையீரலில் ஏற்படும் நோய்த்தொற்றினாலும் ஆஸ்துமா ஏற்படலாம். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாகச் சிகிச்சை எடுக்கவில்லை என்றால், அவற்றின் காரணமாகவும் ஆஸ்துமா ஏற்படும் சாத்தியம் உண்டு. தொண்டையில் சதை வளர்தல் (டான்சில்), சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளக்ஸ் (காசநோய்) போன்ற பாதிப்புகளால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படலாம்.
  • மன அழுத்தம், கோபம், பயம், மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளும் ஆஸ்துமாவை ஏற்படுத்தக்கூடும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும் ஆபத்து உண்டு.

தவிர்க்கும் வழிகள்

  • ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த முடியாது; பாதிப்பைக் கட்டுப்படுத்தி வாழ்வது மட்டுமே நம் முன் இருக்கும் ஒரே வழி. வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்பது ஆஸ்துமா பாதிப்பைத் தவிர்க்க உதவும். ஆஸ்துமா நோயாளிகளின் வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ள தூசியையும் குப்பையையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.
  • ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்ற பணிகளில் ஆஸ்துமா நோயாளிகள் ஒருபோதும் ஈடுபடக் கூடாது. வெளியில் செல்லும்போது, குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவசியம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். மாவுமில் நெடி, தூசி, சிமெண்ட் மாசு, ஆஸ்பெஸ்டாஸ் மாசு, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது என்பதால், அந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்.
  • ஆஸ்துமாவைத் தூண்டுகிற முக்கிய காரணியாகப் பூக்களின் மகரந்தம் உள்ளது. பூக்கள் பூக்கின்ற இளங்காலை பொழுதில் தோட்டத்துக்குள் செல்லக் கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் வளர்ப்புப் பிராணிகளைக் கண்டிப்பாக வளர்க்கக் கூடாது.
  • ஆஸ்துமா நோயாளிகள் படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்ற வேண்டும்; கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தவே கூடாது; வாசனைத் திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது; ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது; தூசியும் ஒட்டடையும் படியும் சாத்தியம் இருப்பதால், சுவர்களில் படங்களைத் தொங்கவிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். குடிப்பழக்கமும் கண்டிப்பாக இருக்கக் கூடாது.

சிகிச்சை

  • ஸ்பைரோமெட்ரி (Spirometry) பரிசோதனை மூலம் மூச்சுக்குழாயின் சுருக்க அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார். ஒருவருக்கு ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது என்றால், எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆஸ்துமாவுக்கு நாம் சாப்பிடும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த உணவைத் தவிர்ப்பது அவசியம்.
  • ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை பலன் தருவதற்குச் சிறிது காலம் ஆகலாம். ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக்குழாயின் தசைகளைத் தளர்த்திவிடும்; மூச்சுத் திணறலிலிருந்து உடனடி விடுதலையும் கிடைக்கும். ஆஸ்துமா நோயாளிகள் வெது வெதுப்பான தண்ணீரை அடிக்கடி அருந்துவது நல்லது. அது நுரையீரலில் சேருகின்ற சளியை உடனுக்குடன் வெளியேற்ற உதவும். தினமும் நீராவி பிடிப்பதும் மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவதும் நல்ல பலன் தரும்.

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

  • பால், தயிர், முட்டை
  •  மீன், கருவாடு, நண்டு, கடல் மீன்
  • கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள்
  • வாழைப்பழம், திராட்சைப்பழம், கொய்யா, எலுமிச்சை
  • நெல்லிக்காய், கத்திரிக்காய், தக்காளி
  • டால்டா
  • சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் போன்ற குளிர்பானங்கள்

அறிகுறிகள்

  • தொடர் இருமல்
  • மூச்சுத்திணறல்
  • மார்பில் இறுக்கம் போன்ற உணர்வு
  • இரவில் மோசமாகும் இருமல்
  • இரவிலும் அதிகாலையிலும் பாதிப்பு மோசமாகுதல்
  • உடற்பயிற்சி செய்யும்போது பாதிப்பு மோசமாகுதல்
  • மூச்சு இறைப்பினால் நிலைமை மோசமாகுதல்

நன்றி: இந்து தமிழ் திசை (29–07–2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்