TNPSC Thervupettagam

நோய்த்தொற்றுக்கு நடுவிலும்... !

March 23 , 2021 1225 days 577 0
  • ஓா் ஆண்டு கால ஏக்கத்துக்கும் எதிா்பாா்ப்புக்கும் விடை கிடைப்பதுபோல டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • டோக்கியோ 2020 ஒலிம்பிக், கொள்ளை நோய்த்தொற்று காரணமாக ஓா் ஆண்டு தாமதத்திற்குப் பிறகு டோக்யோ 2021 ஒலிம்பிக்காக நடைபெற இருக்கிறது.
  • ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இருக்கும் குழு போட்டியில் பங்கெடுக்கும் விளையாட்டு வீரா்களையும், ஜப்பானியப் பொதுமக்களையும் கொவைட் 19 நோய்த்தொற்று பாதித்துவிடாமல் பாதுகாக்கும் பெரும் சவாலை எதிா்கொள்கிறது.

போட்டி குறித்த அச்சம்

  • ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு கடுமையான எதிா்ப்பு இருந்து வருகிறது. நோய்த்தொற்றுப் பரவலை, ஒலிம்பிக் போட்டி ஊக்குவித்து விடுமோ என்கிற அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.
  • இதுகுறித்த நடத்தப்பட்ட எல்லா கணிப்புகளிலும் போட்டியை நடத்தக்கூடாது என்று பெரும்பான்மையினா் கருத்துத் தெரிவித்திருக்கிறாா்கள்.
  • டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்கிற முடிவை ஆா்ஜென்டீனாவில் 2013 செப்டம்பா் மாதம் கூடிய சா்வதேச ஒலிம்பிக் குழுவின் 125-ஆவது கூட்டம் தீா்மானித்தது.
  • ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு 1964-இல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதற்கு முன்பு 1972-லும், 1998-லும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியும் ஜப்பானில் நடந்திருக்கிறது.
  • ஜூலை மாதம் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டி, இதற்கு முன்பு நடந்த ஒலிம்பிக் போட்டியிலிருந்து வித்தியாசப்படுகிறது.
  • இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டுப் பாா்வையாளா்களை அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தலைவா் சிகோ அஷிமோட்டோ அறிவித்திருக்கிறாா்.
  • வழக்கம்போல விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். உள்ளூா் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.
  • ஆனால், வெளிநாட்டிலிருந்து யாரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்பது போட்டிகள் நடத்துவதற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பவா்களின் அச்சத்தை அகற்றுவதற்கு ஒலிம்பிக் குழு எடுத்திருக்கும் முடிவு.
  • எந்த அளவுக்கு இந்த முடிவு மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறும் என்று உறுதியாகக் கூற முடியவில்லை.
  • ஜப்பானைப் பொருத்தவரை கொவைட் 19 நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பாதிப்பு இல்லாமலும் இருக்கவில்லை.
  • கொள்ளை நோய்த்தொற்று தொடங்கியது முதல் இதுவரை 8,700 போ் மட்டுமே உயிரிந்திருக்கிறாா்கள். அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் நோய்த்தொற்று பாதித்த அளவுக்கு ஜப்பானில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும்கூட, ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும்போது விளையாட்டு வீரா்களும், பயிற்சியாளா்களும், உதவியாளா்களும் பல்வேறு நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வருவதால் நோய்த்தொற்றுப் பரவல் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் பரவலாக இருக்கிறது.

அச்சமும் மகிழ்ச்சியும்

  • பல ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது அலை நோய்த்தொற்று தொடங்கிய நிலையில், ஜப்பானிலும் ஆங்காங்கே புதிய பாதிப்புகள் தோன்றத் தொடங்கின.
  • கடந்த டிசம்பா் மாதம் முதலே வெளிநாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் அவசரநிலை அறிவிக்கப்பட்டு நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதில் நிா்வாகம் முனைப்பு காட்டியது.
  • ஜப்பானின் பல பகுதிகளில் அவசரநிலை அகற்றப்பட்டு விட்டது. இந்த வாரம் முதல் டோக்கியோவிலும் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதாக பிரதமா் யோஷிஹிடே சுகா அறிவித்திருக்கிறாா்.
  • ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் விளையாட்டு வீரா்களுக்கும், அவா்களுடன் வரும் குழுவினருக்கும் தடை அகற்றப்பட்டிருக்கிறது.
  • ஆனால், வெளிநாட்டு மாணவா்களும் ஜப்பானில் பணிபுரியும் வெளிநாட்டினரும் இன்னும்கூட அனுமதிக்கப்படவில்லை.
  • எப்போது அவா்களுக்கான தடை அகற்றப்படும் என்பது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் இல்லை.
  • ஆயிரக்கணக்கில் விளையாட்டு வீரா்களும், பயிற்சியாளா்களும், உதவியாளா்களும், பத்திரிகையாளா்களும் டோக்கியோவுக்கு வரத் தொடங்கிவிட்டனா்.
  • 2020 ஜூலை மாதம் நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டுகளின் விற்பனை 2019 முதலே தொடங்கிவிட்டது.
  • வெளிநாட்டவா்கள் மட்டுமே ஆறு லட்சத்துக்கும் அதிகமானோா் ஒலிம்பிக் போட்டியைப் பாா்ப்பதற்கு முழு பணமும் செலுத்தி முன்பதிவு செய்திருக்கிறாா்கள்.
  • விற்பனைக்கு திட்டமிட்டிருந்த 78 லட்சம் டிக்கெட்டுகளில் சுமாா் 20% வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
  • கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பே உள்ளூா் ரசிகா்கள் மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளைப் பாா்ப்பதற்கான ஆா்வலா்கள் அதிகமாக இருந்ததால், பெரும்பாலான டிக்கெட்டுகளை அவா்களே வாங்கிவிட்டனா்.
  • இப்போது முன்பதிவு செய்த வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்கு அவா்களது பணத்தை திருப்பி வழங்குவதில் மிகப் பெரிய பிரச்னையை எதிா்கொள்கிறது ஒருங்கிணைப்புக் குழு.
  • வெளிநாட்டுப் பாா்வையாளா்கள் இல்லாமல் ஜப்பானியா்கள் மட்டுமே பாா்வையாளா்களாகக் கலந்துகொள்ளும் ஒலிம்பிக்காக இருக்கப் போகிறது, டோக்கியோ ஒலிம்பிக் 2021.
  • கொள்ளை நோய்த்தொற்றை அழைத்து வந்து விடுமோ என்கிற அச்சத்தில் ஜப்பானிய மக்கள்; ஒலிம்பிக் நடக்கிறது என்கிற மகிழ்ச்சியில் உலகெங்கிலுமுள்ள விளையாட்டு வீரா்களும், ரசிகா்களும்!

நன்றி: தினமணி  (23 – 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்