TNPSC Thervupettagam

ந‌ல்லது, நட‌க்க‌ட்டு‌ம்!

June 23 , 2021 1135 days 491 0
  • ஜம்மு - காஷ்மீரிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஜூன் 24-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு பிரதமர் அழைத்திருப்பது மிக முக்கியமான திருப்பம்; சமயோசிதமான முடிவு என்றும் கூற வேண்டும்.
  • அவர்களும் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்புக்குரியது. காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
  • 2018 ஜூன் மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது முதலே, ஜம்மு - காஷ்மீரில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன.
  • 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்த மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, மாநிலம் பிரிக்கப்பட்ட போது அது எதிர்பாராத அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.
  • ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான அரசியல் சாசனப் பிரிவு 370, ஆரம்பம் முதலே அன்றைய சட்ட அமைச்சர் பாபா சாஹேப் அம்பேத்கர் உள்ளிட்ட பலராலும் எதிர்க்கப்பட்ட சட்டப்பி ரிவு என்பதுதான் உண்மை.
  • அந்த மாநிலத்துக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் இந்திய அரசுக்கு அங்கு எந்த உரிமையும் கிடையாது என்கிற அளவிலான சட்டப்பிரிவு 370, தொடக்கம் முதலே விவாதத்துக்குரியதாகத்தான் இருந்து வந்தது.
  • பிரதமர் நரேந்திர மோடி அரசு அதை அகற்றியதும் விவாதத்துக்குள்ளாகி இருப்பதில் வியப்பில்லை.
  • 2019 ஆகஸ்டில் மத்திய அரசு சட்டப்பிரிவு 370-ஐ அகற்றியதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்; தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது; அரசியல் நடவடிக்கைகளும் எதிர்ப்புகளும் முடக்கப்பட்டன.
  • அதன் காரணமாக அந்த மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளும் தலைவர்களும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது கடுமையான எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மை.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில், படிப்படியாக அரசியல் தலைவர்கள் பலர், வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது; துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓரளவுக்கு அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன.
  • என்றாலும்கூட, அந்த மாநிலத்தின் பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாத நிலைதான் காணப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் உருவாக்கியிருக்கும் குப்கர் கூட்டணியில் பிரதமரின் அழைப்பை ஏற்பதில் கருத்தொற்றுமை இல்லாமல் இருந்தது.
  • பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்த தெளிவு கிடைத்த பிறகு தான், அழைப்பை ஏற்பதா, வேண்டாமா என்கிற முடிவை எடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தன.
  • அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கு குப்கர் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பாக பிரதமரின் அழைப்பு அமைந்திருக்கிறது.
  • பிரதமர் உள்ளிட்ட அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேருக்கு நேர் சந்தித்து விவாதிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் புதுதில்லி என்ன நினைக்கிறது என்பதை அவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
  • அதுமட்டுமல்லாமல், தங்களுடைய வருத்தங்களையும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் அநீதிகளையும் நேருக்கு நேர் எடுத்துரைக்கக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • பஞ்சாயத்து தேர்தலில் பங்கு பெற்றதும் இந்தியாவிலேயே அதிகளவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்ததும் எந்த அளவுக்கு இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்கிற ஆர்வத்துடன் காஷ்மீர மக்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன.

அரசியல் தீர்வு

  • கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகார வர்க்கத்தின் கீழ் இயங்கும் ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்திருக்கின்றன. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க யாருமில்லாத நிலையில், அந்த இடத்தைத் தீவிரவாத அமைப்புகள் கைப்பற்ற நினைக்கின்றன.
  • எல்லை கடந்த பயங்கரவாதம் பெருமளவில் குறைந்துவிட்டிருப்பதால், இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கும் முயற்சிகளும் பயங்கரவாத நடவடிக்கைகளும் குறைந்திருக்கின்றன.
  • கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு, மக்கள் மத்தியில் இந்திய ராணுவத்துக்கு எதிராகக் காணப்பட்ட மனநிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப் படுகிறது.
  • இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசு அரசியல் செயல்பாடுகளுக்கு வழிகோலும் முயற்சியில் இறங்கியிருக்கிறது எனலாம்.
  • கடந்த 2020 மார்ச் 6-ஆம் தேதி அமைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு மீண்டும் ஓர் ஆண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் பிரதமரின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடிவெடுத்திருப்பது புத்திசாலித்தனமான அரசியல் அணுகுமுறை.
  • அதன் முடிவு சாதகமா, பாதகமா என்பதல்ல பிரச்னை. அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபடாமல் போனால் அது
  • காஷ்மீர மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காமலிருக்கும் அரசியல் தவறாக முடியக் கூடும்.
  • காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் வந்தால் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பிரதமர் வழங்கியிருக்கிறார். அதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள கட்சிகளின் தீர்வுக்கான அடிப்படை நிபந்தனை.
  • அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான தொகுதி சீரமைப்பும் நேர்மையான தேர்தலும் ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தீர்வு காண்பதற்கான பாதைகளாக இருக்கும்.

நன்றி: தினமணி  (23 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்