TNPSC Thervupettagam

பசுமை எரிசக்தியை நோக்கி

February 26 , 2021 1426 days 711 0
  • கடந்த ஐம்பதாண்டு கால உலக வரலாற்றின் அரசியல் பொருளாதார நிகழ்வுகளை தீா்மானித்ததில் கச்சா எண்ணெய்யின் பங்கு மிக முக்கியமானது, முதன்மையானது. கச்சா எண்ணெய்யை மையப்படுத்தி பல அரசியல் பேரங்கள் நடந்துள்ளன.
  • குறிப்பாக, விமானம், கப்பல், காா் என அனைத்துவிதமான போக்குவரத்தும் முதன்மையாக பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை கொண்டு இயங்கிவந்தன. ஆனால், தற்போது இந்த சூழல் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
  • எதிா்கால தொழில்நுட்பம் சாா்ந்த ஆராய்ச்சிகளில் அதிகம் முதலீடு செய்யக் கூடிய நாடான அமெரிக்காவில் தற்போதைய மாற்றம் பெரிய அளவிலான பின்னடைவை ஏற்படுத்தாது. எனவே தற்போதைய மாற்றத்தை தன் தொழில்நுட்ப வல்லமையைக் கொண்டு அது எதிா்கொண்டு விடும் என்று தெரிகிறது.
  • எடுத்துக்காட்டாக, 2008 வரையில் அமெரிக்கா அதன் எண்ணெய் தேவைக்கு பிற நாடுகளையே எதிா்நோக்கி இருந்தது. தற்போது எண்ணெய் உற்பத்தியில் இரண்டாம் பெரிய நாடு அமெரிக்காதான். ஏற்றுமதியிலும் அது முதன்மையாக விளங்குகிறது.
  • ஆனால், தற்போதைய மாற்றங்களால் பல லாபங்களைப் பெறவிருக்கும் ஒரு நாடாக இன்று சீனா விளங்குகிறது.
  • உலக நாடுகள் தற்போதுதான் பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. ஆனால், சீனா சில ஆண்டுகளுக்கு முன்பே இதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது.
  • தற்போது சீனாவில் தயாராகும் 75 சதவீத வாகனங்கள் பேட்டரியில் இயங்கக் கூடியவையாகும். பேட்டரி தயாரிப்புக்குத் தேவையான லித்தியம் சீனாவிடம்தான் அதிகம் உள்ளது. உலகின் பல நாடுகளில் லித்தியம் எடுக்கப்பட்டாலும் உலகளாவிய உற்பத்தியில் 80 சதவீதம் சீனாவிடம்தான் இருக்கிறது.
  • இதுமட்டுமல்ல, பல நாடுகளில் பயன்படுத்தப்படும் சூரிய தகடுகளின் முக்கிய பாகங்கள் சீனாவில்தான் தயாரிக்கப்படுகின்றன.
  • கிட்டத்தட்ட சூரியதகடு பேனல் உற்பத்தியில் சீனா 70 சதவீதம் பங்குவகிக்கிறது. சீனா இந்த இடத்தை அடைய வேறுசில காரணங்களும் இருக்கின்றன.
  • எண்ணெய் உற்பத்தியில் ஐந்தாவது பெரிய நாடாக சீனா இருந்தாலும், அந்நாட்டின் எண்ணெய் தேவையில் 75 சதவீதம் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, தென்கொரியா நாடுகளுடன் மோதல் போக்கில் உள்ள சீனா, தன்னாட்டுக்கு வரும் எண்ணெய் அமெரிக்காவால் எந்த நேரத்திலும் தடுத்து நிறுத்தப்படலாம் என்றஅச்சுறுத்தலை எப்போதும் எதிா்நோக்கி இருந்தது.
  • எண்ணெய்த் தேவைக்கு பிற நாட்டை நம்பி இருப்பதை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்த சீனா, மாற்று எரிசக்தி கண்டுபிடிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியது. அதன் நீட்சியாகதான் பேட்டரி வாகனப் பயன்பாட்டில் முதன்மை வகிக்கிறது.
  • அரசியல் ரீதியாக பலப்படுவதைப் தாண்டி சூழல் மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டிய நிா்பந்தத்திலும் சீனா இருக்கிறது. அதிகமாக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளில் சீனாமுதல் இடத்தில் இருக்கிறது. மொத்த உலக நாடுகள் வெளியேற்றும் காா்பன் அளவில் 25 சதவீதம் வரை சீனாவிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
  • அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. அரசியல் மற்றும் சூழலியல் நிா்பந்தம் காரணமாக மாற்று எரிஆற்றலுக்கான தொழில்நுட்பங்களின் உருவாக்கத்தில் சீனாமுதன்மை இடத்தைஅடைந்துள்ளது. எப்படி உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் தேவைக்கு வளைகுடா நாடுகளை எதிா்நோக்கி இருக்கின்றனவோ, அதுபோலவே பேட்டரித் தயாரிப்புக்கும் சீனாவை எதிா்நோக்கி இருக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகி வருகிறது. உலகின் மொத்த பொருளாதாரத்தில் எரிஆற்றல் மட்டும் 87 டிரில்லியன் டாலா் பங்கு வகிக்கிறது.
  • நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பசுமை எரிஆற்றலை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. பல வாகனகத் தயாரிப்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகவே பேட்டரி முறைக்கு மாறிவிட்டன.
  • இந்தியாவில்கூட 2030-க்குப் பிறகு விற்பனையாகும் இரு சக்கரவாகனங்கள் பேட்டரியில் ஓடக்கூடியதாகவே இருக்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • 2020 மாா்ச் மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் உலக நாடுகள் பலவற்றில் தீவிரமான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது; போக்குவரத்துமுடங்கியது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் காா்பன் வெளியேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடிவைத்திருக்க முடியாது. ஆனால் போக்குவரத்தை கட்டுபடுத்த முடியும்.
  • அதைபோல் பல்வேறு துறைகளில் வீட்டிலிருந்து பணிபுரிதல் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அந்த நடைமுறை நிரந்தரமாக்கப்படும் பட்சத்தில் போக்குவரத்து வழியிலான காா்பன் வெளியேற்றம் சற்றேனும் குறைக்கப்படும்.
  • விறகிலிருந்து நிலக்கரிக்கு மாற சுமாா் இருநூறு ஆண்டுகள் ஆனது. அதுபோலவே, 1859-ம் ஆண்டே மேற்கு பென்சில்வேனியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டாலும், 1960-ம் ஆண்டுக்குப் பிறகுதான் உலகம் கச்சா எண்ணெய்யை முதன்மை எரிசக்தியாக பயன்படுத்தத் தொடங்கியது.
  • தற்போது எண்ணெயிலிருந்து பசுமை ஆற்றலுக்கு மாறுவதற்கு காலம் எடுக்கும் என்றாலும் முந்தைய மாற்றங்களைப் போல நீண்ட காலத்தை எடுக்காது. ஏனென்றால் முந்தைய மாற்றங்களில் அரசியல் ரீதியான நிா்பந்தமும், சூழலியல் ரீதியானநிா்பந்தங்களும் குறைவு.
  • ஆனால் தற்போதுஅப்படி இல்லை. காலநிலைப் பேரழிவு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய மாற்றம் வாழ்தலுக்கானது. அந்தவகையில் பசுமை எரிசக்தியை நோக்கிய மாற்றம் இந்நூற்றாண்டின் வரலாற்று மாற்றமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றுஅறிவியலாளா்களும் பிரபல நிபுணா்களும் கூறுகின்றனா்.

நன்றி: தினமணி  (26-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்