- முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரித்துவருவது மனிதகுலத்தின் முதன்மைப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஜூலை மாதத்தில் பதிவான வரலாறு காணாத வெப்பநிலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கும் ஐ.நா. அவையின் பொதுச் செயலர் அண்டோனியோ குட்டர்ஸ், புவி வெப்பமாதல் கட்டத்தில் இருந்து உலகளாவிய கொதிநிலையின் சகாப்தத்தை உலகம் கடந்துவருவதாகக் குறிப்பிட்டார்.
- வரும் காலத்தில் இது மேலும் திகிலூட்டக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். செப்டம்பரில் நடைபெறவிருக்கும் காலநிலை உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, வளர்ந்த நாடுகள் 2040ஆம் ஆண்டுக்கு முன்னதாகவும், வளர்ந்துவரும் நாடுகள் 2050க்கு முன்னரும் நிகர பூஜ்ய கார்பன் (net zero carbon) நிலையை அடைவது குறித்து உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.
பசுமை கார்பன் வரவு
- மேற்கண்ட எச்சரிக்கை, காலநிலை மாற்றத் தடுப்பு நடவடிக்கைகள் பல மடங்கு உத்வேகத்துடன் நடைபெற வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு. மத்திய சுற்றுச்சூழல், வனம் - காலநிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEFCC) 2023 ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட வரைவு பசுமை கார்பன் வரவுத் திட்ட அமலாக்க விதிகள் 2023 (Draft Green Credit Programme Implementation Rules 2023), சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காகத் தனிநபர்கள் - நிறுவனங்களுக்குப் பசுமைப் பாதுகாப்பு வரவுகளை வழங்க முன்மொழிகிறது.
- ‘பசுமை கார்பன் வரவு’ என்பது சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையின் ஒற்றை அலகு என்று பொருள் கொள்ளலாம். இந்த கார்பன் வரவுகளை உள்நாட்டுச் சந்தைத் தளத்தில் வர்த்தகம் செய்ய இயலும்.
- போட்டிச் சந்தை அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தும்போது, பல்வேறு பங்குதாரர்களின் தன்னார்வச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் என்று கருதப்படுகிறது. இத்திட்டம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு கார்பன் வணிகச் சந்தைக்கான தேவையை நிறைவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு கார்பன் வரவுச் சந்தை, கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது, சுற்றுச்சூழல் கடமைகளைப் பூர்த்திசெய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்டச் செயலாக்கம்
- இந்திய வனவியல் ஆராய்ச்சி - கல்வி கவுன்சில் (ICFRE) இந்தத் திட்டத்தை நிர்வகிக்கும். திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல், செயல்முறை மற்றும் நடைமுறைகளை உருவாக்கும். தொடர்புடைய ஒவ்வொரு துறையிலிருந்தும் இரண்டு அல்லது மூன்று செயல்பாடுகளை மாதிரித் திட்டமாக வடிவமைத்து இயக்க முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் செயல்பாடுகள் ஒவ்வொரு துறையிலும் சேர்க்கப்படும்.
- பசுமைப் பாதுகாப்பு வரவுகளை வழங்குவதற்கான ஒவ்வொரு சாதகமான நடவடிக்கைகளுக்கு வரம்புகள், வரையறைகள் உருவாக்கப்படும். அவை ஏற்கெனவே உள்ள மற்ற சட்டதிட்டங்களின் கீழ் உள்ள வழிமுறைகளுக்கு உட்பட்டவாறு வடிவமைக்கப்படும். சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அல்லது அரசுத் துறைகளின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்தியத் தொழில் சங்கங்கள், இதன் பங்கேற்பாளர்கள் உள்ளடக்கிய வழிநடத்தும் குழு இதனை நிர்வகிக்கும் என முன்மொழியப்பட்டுள்ளது.
சந்தேகங்களும் சவால்களும்
- அதேவேளையில், சந்தை அடிப்படையிலான இந்தத் திட்டம் செயல்படும் முறையானது பசுமைக் கண்துடைப்புக்கே வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கவலைப்படுகின்றனர். (சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தாங்கள் முதன்மையானவர்கள் எனும் நற்சான்றிதழ்களை நிறுவனங்கள் தவறாகச் சந்தைப்படுத்துகின்றன.
- தங்கள் சேவைகள் அல்லது தயாரிப்புகள் தரும் சுற்றுச்சூழல் நன்மைகள் பற்றி நிறுவனங்கள் தவறான அறிக்கைகளை வெளியிடுவது ஓர் உதாரணம். இதில் பல்வேறு சுற்றுச்சூழல் நேர்மறைச் செயல்பாடுகளுக்கு இடையில் சமநிலையை நிறுவுவதில் உள்ள சிரமங்கள், கண்காணிப்பு உள்ளிட்ட பிற சவால்களை எதிர்கொண்டாக வேண்டும்.
- பசுமை கார்பன் வர்த்தகச் சந்தையின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் தெளிவும் பேணப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளாமல், பசுமை கார்பன் வரவுகளை உருவாக்கத் தனிநபர்கள், நிறுவனங்கள் மேலோட்டமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சாத்தியம் உண்டு என்கிற அச்சம் ஏற்படுகிறது.
- மேலும், கரியமிலவாயு உமிழ்வு மட்டுப்படுத்தல்களை அடைவதில் மேற்கண்ட வழி முறைகளின் செயல்திறன், கண்காணிப்பு, மோசடித் தடுப்புக்கான முயற்சிகள் தோல்வி அடையும் போது பசுமை கார்பன் வரவுத் திட்டம் தோல்வியடைய நேரும். சந்தையின் நம்பகத்தன்மை - நிலைத்தன்மைக்கு, பசுமை வரவுகளுக்குப் போதுமான தேவையை உருவாக்குவதற்குக் கூடுதல் உத்திகள் அவசியம்.
- திட்ட அமைப்பைக் கவனமாக மதிப்பீடு செய்து செயல்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. குறிப்பாக, மரம் வளர்ப்பு - காடு வளர்ப்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். நம் நாட்டில் இதுவரை தீர்க்கப்படாத வன உரிமை - நிர்வாக உரிமைகள், சுற்றுச்சூழல் - பல்லுயிர் வளச் சவால்கள் - கார்பன் வரவுத் திட்டங்கள் சார்ந்த உலகளாவிய விமர்சனங்களைக் கருத்தில் கொள்வது முக்கியம். இந்த அம்சங்களை நிவர்த்தி செய்யப் போதுமான விவாதங்கள் - பொதுமக்கள் ஆலோசனைகள் அவசியம்.
- (இந்த வரைவுத் திட்டம் பற்றிய ஆலோசனைகள், சந்தேகங்களைத் தனிநபர்களும் நிறுவனங்களும் மத்திய சுற்றுச்சூழல், வனம் - காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) பார்வைக்கு sohsmd-mef@gov.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 25 வரை அனுப்பலாம்). ஒரே ஒரு வாயுவை மையமாகக் கொண்ட கார்பன் வரவுகளைக் கண்காணிப்பதுகூட நடைமுறையில் ஒரு சிக்கலான செயல். இத்திட்டத்தை ஒழுங்கு படுத்துவது மிகவும் சவாலானது.
- இதே முறையை மற்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் - மாசுபடுத்தும் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது பசுமைக் கண்துடைப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கக்கூடிய ஆபத்தை உருவாக்குகிறது. இந்திய நிறுவனங்களுக்கு இது புதிய திட்டமாக இருப்பதால் கண்காணிப்பு, விழிப்புணர்வுடன் கூடிய நடைமுறை ஆதரவு வழங்கப்படும்போது எதிர்பார்க் கப் படக் கூடிய நன்மைகள் கிடைக்கும்.
- எனவே, இத்திட்டம் முழுமை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தால் தனிநபர், தனியார் துறை நடவடிக்கைகளை அங்கீகரித்து ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு - வளங்குன்றா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் ஒரு தலைகீழ் மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்த முடியும்.
நன்றி : இந்து தமிழ் திசை (22– 08 – 2023)