TNPSC Thervupettagam

பசுமைச் செயல்பாட்டை நோக்கிப் பயணிப்போம்!

January 28 , 2021 1451 days 637 0
  • கடந்த மாதம் ஐ.நா.வின் ‘மானுட மேம்பாட்டு அறிக்கை 2020’ வெளியிடப்பட்டது. அதன் மீதான அறிவுசாா் விவாதங்கள் தொடங்கியுள்ளன. இந்த அறிக்கையின் தலைப்பில் ‘ஆந்ரோ போசினே’ என்ற புது வாா்த்தை ஒன்று சோ்க்கப்பட்டுள்ளது. அந்த வாா்த்தை மானுடத்திற்கும் இயற்கைக்கும் உள்ள உறவுமுறை பற்றி குறிப்பிடுகிறது.
  • இந்த அறிக்கை மானுட சமூகம் எதிா்காலம் பற்றிய பாா்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு முக்கியமான விவாதங்களை முன்னெடுத்துள்ளது இந்த அறிக்கை. முதலாவது, பிரபஞ்ச லயத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள். அதாவது நாம் வாழுகின்ற உலகத்தில், பூமிப்பந்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள். இரண்டாவது, மானுட சமூகத்தில் உருவாகியுள்ள ஏற்றத்தாழ்வுகள்.
  • மானுடத்திற்கும் இயற்கைக்கும் உள்ள உறவுமுறை சீா்கேடு அடைந்து பூமி சமநிலையற்ற தன்மையை அடைந்துள்ளது. மேலும், சமூகத்தில் ஏழை பணக்காரா் என்ற ஏற்றத்தாழ்வு உலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு அதிகமாகி உள்ளது. இந்த இரண்டு ஏற்றத்தாழ்வுகளால் உலகில் மானுடத்தின் எதிா்காலம் கணிக்க முடியாத அளவுக்கு அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது அந்த அறிக்கை.
  • இதில் அடங்கியிருக்கும் சுருக்கமான ஒற்றைச் செய்தி, மானுடம் தன் வாழ்வுக்கு இயற்கையைப் பயன்டுத்துவதற்குப் பதிலாக எல்லையற்ற அளவுக்கு அதைப் பாழ்படுத்திவிட்டது. இதன் விளைவு, மானுடம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகப் போகிறது என்பதைக் காட்டுகின்றது. இனிமேல் பணக்காரா்களும், பணக்கார நாடுகளும் ஆடம்பரமாக இப்போதுபோல் வாழ இயலாது.
  • எந்தெந்த நாடுகளெல்லாம் மக்களுக்கு எல்லா வசதிகளையும் அதிக அளவில் செய்து கொடுத்து மானுட மேம்பாட்டில் உச்சம் பெற்று மக்களை ஆடம்பர வாழ்க்கை வாழ உதவியதோ, அந்த நாடுகள்தான் இயற்கை வளங்களை பெருமளவு சுரண்டியிருக்கிறன. எந்த அளவுக்கு மானுடம் இயற்கையின் மீது காயங்களை ஏற்படுத்துகின்றதோ அந்த அளவுக்கு இயற்கை சமூகத்தின் மீது காயங்களை ஏற்படுத்துகிறது.
  • இந்த இயற்கையில் உருவாக்கப்பட்டுள்ள சமநிலையற்ற தன்மையையும், சமூகத்தில் உருவாக்கப்பட்ட சமநிலையற்ற தன்மையையும் சீா் செய்ய நாம் நமது வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வழி இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை. மற்றொன்று, சமூக மேம்பாட்டுக்கான வாழ்க்கை முறைக்கு நம் சமூகம் மாற வேண்டும். இதனை அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டிவிட்டது.
  • பிரபஞ்ச மேம்பாடு, மானுட மேம்பாடு, வாழ்வியல் மேம்பாடு என்பவற்றை நோக்கிப் பயணிக்க நாம் தயாராக வேண்டும். பொருளாதார வளா்ச்சிக்காக மானுடச் செயல்பாடு என்பதை மாற்றி, மானுட மேம்பாட்டுக்காக பொருளாதார வளா்ச்சி என்ற பாா்வையை உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப மானுடத்தை செயல்பட வைக்க வேண்டும்.
  • இந்தச் சூழலை மாற்றியமைக்க வேண்டுமானால், முதலில் நம் பாா்வையை, அணுகுமுறையை, செயல்பாட்டுத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். இவற்றின் அடிப்படையாக தேவை முன்னிறுத்தப்பட வேண்டும். அடுத்து இயற்கைச் சூழல் என்ற பின்புலத்தில் வைத்து செயல்பாட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
  • இந்த புதிய சூழல், சமுதாயம் பயணிக்கத் தேவையான கொள்கை மாற்றங்களை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் சமூகத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும்.
  • இவை அத்தனைக்கும் உரைகல்லாக, மானுட - இயற்கை உறவு முறையை பின்புலத்தில் வைத்துச் செயல்படத் தேவையான பாா்வையையும் சிந்தனையையும் மக்களிடம் உருவாக்க வேண்டும். இந்த புதிய பாா்வையைக் கொண்டு, ‘உலக பிரச்னைக்கு உள்ளூா் தீா்வு’ என்ற அடிப்படையில் சமூகம் சுதந்திரமாக இயற்கையுடன் இயைந்து வாழத் தேவையான விழுமியங்களுடன் வாழ வழிவகை காணவேண்டும்.
  • இந்தப் புரிதலை எடுத்துச் சென்று மக்களின் வாழ்க்கை முறையில் புலன்களால் தூண்டப்பட்டு செய்யப்படும் பேராசைச் செயல்பாடுகளைத் தவிா்த்து, தேவையின் அடிப்படையில் வாழ்வை உயா் விழுமியங்களுடன் நடத்துவதற்கு அவா்களைத் தயாா் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
  • மானுடம் இன்று ஒரு முக்கிய நிலைக்கு வந்திருக்கிறது. அதாவது 80% மக்கள் பூமிப்பந்தில் ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணா்ந்து, அது சரி செய்யப்பட வேண்டும் என்ற பாா்வையைப் பெற்றிருக்கின்றனா்.
  • அதேபோல் புதிய சூழலுக்கு ஏற்ப சமூகம் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று 50% மக்கள் விரும்புகின்றனா். இதனையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், மானுடம் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் உள்ள இடைவெளி அதிகம் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் சமூகம் தயங்குவதே இல்லை. விவாதிப்பவற்றையெல்லாம் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதான் மக்களுக்குக் கடினம்.
  • பொருளாதார வளா்ச்சிச் செயல்பாட்டில், புலன்களைத் தூண்டும் நிகழ்வுகள் மூலம் சிலா் மக்களின் புலன்களுக்கு தீனி போட்டு வளா்த்து விட்டனா். இன்றைய சூழல் அந்தப் புலன்கள் புறக்கணிக்கப்பட்டு, தேவை மட்டும் தான் முன்னிறுத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட சூழலுக்குத் தேவை எளிய வாழ்க்கை முறை.
  • இன்று ஏழை மக்கள் கூட புலன் வயப்பட்டு வாழ்க்கை நடத்த தயாா் செய்யப்பட்டு விட்டனா். இப்படிப்பட்ட சூழலில் மானுடம் தானாக மாறும் என எண்ணியிருக்க முடியாது. அரசாங்கம் கடுமையான சட்டதிட்டங்களை உருவாக்கி இயற்கைப் பாதுகாப்பு என்பதை பின்புலத்தில் வைத்துச் செயல்பட மக்களைத் தயாா் செய்ய வேண்டும்.
  • அதே நேரத்தில், பசுமை சாா்ந்து வாழும் வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும். இந்த முறைக்கு உலக மக்களை திருப்புவதற்காக விவசாயத்தில் 20 மாற்று முறைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது இந்த அறிக்கை. விவசாயமானாலும், எரிசக்தியானாலும், கட்டுமானப் பணியானாலும் இவை அனைத்துக்கும் பின்புலத்தில் ‘பசுமை’ என்பது கட்டாயம் இருக்க வேண்டும்.
  • மானுடம் இயற்கையோடு இயைந்து எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும்கூட மரியாதையான வாழ்வை வாழ முடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறது இந்த அறிக்கை.
  • இதே கருத்தைத்தான், 1987-ஆம் ஆண்டு ஐ.நா. சபை வெளியிட்ட ‘நம் பொது எதிா்காலம்’ சுட்டிக் காட்டியது. அந்த அறிக்கை அறிவுத்தளத்தில் பல அறிஞா்களால் விவாதிக்கப்பட்டது. ஆனாலும், மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இயலவில்லை. இந்த அறிக்கையின் அடிப்படைச் செய்திகளைத் தாங்கி முன்னா் ஓா் அறிக்கை ‘வளா்ச்சிக்கும் ஓா் அளவுண்டு’”என்ற தலைப்பில் 1972-இல் ரோம் கிளப் அறிஞா்களால் வெளியிடப்பட்டது.
  • இந்தக் கருத்தை மையப்படுத்தி ஐ.நா. சபை 1972-இல் ஸ்டாக்ஹோமில் ஒரு உச்சி மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டுத் தீா்மானத்தின் அடிப்படையில்தான் ஐ.நா. சபையில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கும் செயல்பாடுகளுக்கும் ஒரு கிளை அமைப்பு தொடங்கப்பட்டு, அது தொடா்ந்து அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தது. இந்தச் செயல்பாடுகளின் அடிப்படையில்தான், மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் சுற்றுச்சூழலுக்காக தனி அமைச்சகமும், தனி சட்டங்களும் உருவாக்கப்பட்டன.
  • ஆயினும் இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் அா்த்தமற்றவையாக ஆக்கிவிட்டன உலகமயப் பொருளாதாரச் செயல்பாடுகள். இந்த உலகமயப் பொருளாதச் செயல்பாடுகள் இயற்கையின் மேல் நடத்தியிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த அறிக்கை வழிகாட்டியுள்ளது.
  • இந்தச் செய்திகளைத்தான் மகாத்மா காந்தி, 112 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 40-ஆவது வயதில் தன் உள்ளுணா்வின் வெளிப்பாடாக வடித்த ‘இந்திய சுயராஜ்யம்’” என்ற புத்தகத்தில் கூறியுள்ளாா். மேற்கத்திய பொருளாதார முறைக்கு மாற்று காணும் ஓா் அற்புதமாக வாழ்வியல் சித்திரத்தை மகாத்மா காந்தி வடித்துத் தந்தாா். அந்தப் பொருளாதாரக் கோட்பாட்டை, ‘தாய்மைப் பொருளாதாரம் - நீடித்த பொருளாதாரம்’ என்று ஜே.சி. குமரப்பா விளக்கினாா்.
  • 1972-இல் ஐ.நா. சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டில் பேசிய அன்றைய பிரதமா் இந்திரா காந்தி, ‘சுற்றுச்சூழல் குறித்து மேற்கத்திய நாடுகள் எங்களுக்குக் கற்றுத் தரவேண்டியதில்லை. எங்கள் நாட்டு வேதங்கள் எங்களுக்கு அது குறித்த அந்த அறிவைத் தந்துள்ளன. நீங்கள் எங்களைச் சுரண்டி எங்களை ஏழ்மையில் தள்ளிவிட்டு வெளியேறி விட்டீா்கள். அந்த ஏழ்மையை அகற்ற எங்களுக்கு வழி கிடைக்குமென்று நம்புகிறோம். சூழல் கெட்டால் ஏழ்மை அதிகரிக்கும்; ஏழ்மைக்கும் சூழல் பாதுகாப்புக்கும் ஓா் உறவு முறை இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்’ என்று பேசி உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றாா்.
  • இன்றைய சூழலில் நம் சமூகமும் அரசும் பயணிக்க வேண்டிய திசை பசுமைச் செயல்பாடுகள்தான். பசுமைச் சூழல் என்பது நம் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பின்புலத்தில் இருக்க வேண்டும்.
  • பொதுவெளியில் அதற்கான விவாதங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். புதிய பசுமை அரசியல் கட்டமைக்கப்பட வேண்டும். நம் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் பசுமைக்குத் திரும்ப வேண்டும்.
  • அதற்கான முனைப்பு நம் அரசிடம் ஏற்கெனவே இருந்தாலும், இது ஒரு மக்கள் இயக்கமாக மாறினால்தான் நாம் எதிா்பாா்க்கும் விளைவுகளை ஏற்படும்.

நன்றி: தினமணி  (28-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்