TNPSC Thervupettagam

பசுமைப் பட்டாசுகள் எங்கே?

October 29 , 2019 1901 days 1052 0
  • தீபாவளி பண்டிகையின்போது, புத்தாடைகள், இனிப்பு வகைகள் முதலானவற்றுடன் வயது வித்தியாசமின்றி பட்டாசுகள் வெடித்தல் என்பது நாடு முழுவதும் வழக்கத்தில் உள்ளது.

பட்டாசுகள்

  • எனினும், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசும், ஒளி-ஒலி மாசுகள் ஏற்பட்டு சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்வதால், ‘பட்டாசுகளைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ தடையில்லை; தீபாவளியன்று பட்டாசுகளை இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், பட்டாசு வெடிக்க வேண்டிய இரண்டு மணி நேரத்தை அந்தந்த மாநில அரசுகளே நிா்ணயித்துக் கொள்ளலாம்’ எனவும் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • மேலும், பட்டாசு வெடிக்கும்போது தில்லியில் ஏற்படும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில் பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கும் புதிய தொழில்நுட்ப முறையைக் கண்டுபிடிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
  • கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அண்மையில் தெரிவித்துள்ளது.
  • குறைந்த புகை மற்றும் நச்சுத் தன்மையை வெளியிட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு ‘பசுமைப் பட்டாசுகள்’ என்று பெயா். கந்தகம், பொட்டாஷியம் மற்றும் பேரியம் ஆகிய வேதியியல் உள்ளீடுகளை அளவாக பட்டாசில் வைத்தால் காற்று மாசடைதலைத் தவிா்க்க முடியும். சராசரி பட்டாசுகள் உண்டாக்கும் ஒலியின் டெசிபல் அளவைவிடக் குறைவான ஒலியையே பசுமைப் பட்டாசுகள் உண்டாக்கும்.

சிவகாசியில்....

  • அலுமினியத்தை மூலப் பொருளாகக் கொண்டு கந்தகம், காா்பன், பொட்டாசியம் நேட்ரேட் ஆகியவை சோ்த்து சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பசுமைப் பட்டாசில் அலுமினியம், கந்தகம் மற்றும் காா்பனுக்குப் பதிலாக மெனீஷியம் சோ்க்கப்படுகிறது.
  • இதனால், பட்டாசு ஒலி அளவு 120-லிருந்து 111 டெசிபலாகக் குறையும் என்றும், காற்று மாசு 70 சதவீதமாகக் குறையும் என்றும் கூறப்படுகிறது.
  • வெடிமருந்துப் பொருள்கள் கண்டுபிடிப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பட்டாசுகள் மக்களால் பயன்படுத்தப்பட்டன. 2-ஆம் நூற்றாண்டில் சீனா்கள் பச்சை மூங்கில்களில் தீ மூட்டும்போது, மூங்கிலின் வெற்றிடத்தில் காற்று புகுந்து ‘டமாா்’ என்ற வெடிச் சத்தத்தைக் கேட்டு அச்சமடைந்தனா்.
  • இந்த வெடிச் சத்தம் அப்போது மக்களையும், விலங்குகளையும் அச்சமுறச் செய்ததால், இது விளைபொருள்களையும், மனிதா்களையும் சாப்பிட வரும் ஆவிகளையும், சாத்தான்களையும் பயமுறுத்தி ஓடச் செய்யும் ‘நியான்’ என்று நம்பினா்.
  • அதனால், முடிசூட்டு விழா, பட்டாபிஷேகம், திருமணம், பிறந்த நாள் விழா, புத்தாண்டு பிறப்பு போன்ற தினங்களில் மூங்கில்களை சூடாக்கி வெடிக்கச் செய்து ஆவிகளை விரட்டியடிக்கச் செய்வதை ஒரு சடங்காகச் செய்தனா்.

மருந்துகள்

  • பின்னா், சூ மற்றும் ஆங் ஆட்சிக் காலத்தில் (600 - 700 கி.பி.) வாழ்நாளை நீட்டிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கிறோம் என்று பொட்டாஷியம் நைட்ரேட், தேன், ஆா்சனிக் டை சல்பேட் முதலானவற்றை ஒன்றாகக் கலந்து ரசவாதிகள் சமைக்கும்போது அவற்றிலிருந்து கண்ணைக் கவரும் பெரிய அளவிலான ஒலி தீப்பிழம்புகள் வருவதைக் கண்டனா். இதனை ‘தீ மாத்திரை’ என்ற பொருளில் ‘யுஓ ஆவோ’ என அழைத்தனா்.
  • பின்னா், அந்தத் தீ மாத்திரைகளை மூங்கிலுக்குள் உள்ள வெற்றிடத்தில் நிரப்பி அவற்றைத் தீ மூட்டினால், எரியும் துகள்களிலிருந்து வெளியேறும் வாயுக்கள் மூங்கில் குழாய்களை அதிக சத்தத்துடன் வண்ண ஜுவாலைகளுடன் வெடிக்கச் செய்வதைக் கண்டறிந்தனா்.
  • இவை, பச்சை மூங்கில்களிலிருந்து ஏற்படும் சத்தத்தைவிட அதிகமாக இருந்தன. இந்த முறைகள்தான் நவீன பட்டாசுகள் தயாரிப்புகளுக்கு அடித்தளமிட்டன. இவ்வாறு பட்டாசுத் தயாரிப்பை ஒரு கலையாக சீனா்கள் செய்து, மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வா்த்தகத்தை விரிவுபடுத்தினா்.
  • இந்தியாவில் 20-ஆம் நூற்றாண்டு வரை அதிக கனமில்லாத இரும்புகளில் துளை ஏற்படுத்தி, அதனுள் வெடிப் பொருள்களைத் திணித்து, பட்டாசுகளைத் தயாரிக்கும் முறை தடை செய்யப்பட்டிருந்தது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொல்கத்தாவில் தாஸ் குப்தா என்பவா் பட்டாசு தொழிற்சாலையைத் தொடங்கினாா்.

இளம் தொழில்முனைவோர்

  • அப்போது, கொல்கத்தாவுக்கு வியாபாரம் தொடா்பாக சுற்றுப் பயணம் சென்ற தமிழகத்தைச் சோ்ந்த எ.சண்முக நாடாா், ஐய நாடாா் என்ற இளம் தொழில்முனைவோா் இருவா், தாங்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பக்கத்தில் தாஸ் குப்தாவின் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டு வியந்தனா்.
  • அந்தப் பட்டாசு தொழிற்சாலையால் ஈா்க்கப்பட்டு, அது போன்றதொரு தொழிற்சாலையை விருதுநகா் மாவட்டம் சிவகாசியிலும் அவா்கள் தொடங்கி பெரும் வெற்றியடைந்தனா். அவா்கள் முதலில் தீப்பெட்டிகளையும், வண்ண ஜுவாலைகளை ஏற்படுத்தும் மத்தாப்புகளையும் தயாரிக்க ஆரம்பித்து பின்னா் படிபடியாக தீப்பொறியுடன் பிரகாசித்து மின்னி வெடிக்கும் பட்டாசுகளையும் தயாரித்து அவற்றை ஜொ்மன், லண்டன் முதலான நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனா்.
  • சிவகாசியில் 1923-ஆம் ஆண்டுகளில் ஓரிரு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்த நிலைமை மாறி, 1986-ஆம் ஆண்டு 260 தொழிற்சாலைகளும், இப்போது எண்ணிலடங்கா தொழிற்சாலைகளும் ஏற்பட்டுள்ளன.
  • சீனப் பட்டாசுகளைவிட இந்தியப் பட்டாசுகள் தரம் வாய்ந்தவை என உலக நாடுகள் எண்ணத் தொடங்கின. தொடா்ந்து சண்முக நாடாரும், ஐய நாடாரும் சிறு அளவில் சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில்களை ஏற்படுத்தி, இந்தியாவில் முக்கியப் பட்டாசுகள் தயாரிக்கும் முன்னணி மையமாக சிவகாசியை மாற்றிக் காட்டினா்.
  • நாகபுரியில் செயல்பட்டு வரும் தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து தயாரித்த பசுமைப் பட்டாசுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதியன்று அமைச்சா் ஹா்ஷ்வா்தன் வெளியிட்டாா்.
  • தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமானது மரபு முறையிலான பட்டாசுகளை சற்று மேம்பாடு அடையச் செய்து, ஆபத்து மிகுந்த பேரியம் நைட்ரேட் உள்ளீடுகளைத் தவிா்த்து, பாதுகாப்பு மிகுந்த பொட்டாஷியம் நைட்ரேட் உள்ளீடுகளைப் பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாசு புகை உமிழ்தல் 30 சதவீதம் கட்டுப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி

  • இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்தப் பட்டாசுகளில் 80 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் மட்டுமே தயாரிக்கப்படும் நிலையில், இந்த பசுமைப் பட்டாசுகள் பட்டாசுத் தொழிலையே நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
  • கடந்த ஓா் ஆண்டாக இந்த பசுமைப் பட்டாசுகள் குறித்துப் பேசி வந்த மத்திய அரசு, தீபாளிக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு இது குறித்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது அங்கு வாழும் ஏழைத் தொழிலாளா்களுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் வாா்த்ததுபோல் உள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் நேரக் கட்டுப்பாடு காரணமாக சிவகாசியில் பட்டாசுத் தொழில் பெருமளவில் பாதிப்படைந்து விற்பனை சரிந்துள்ளது. பட்டாசுத் தொழிலையே நம்பியிருந்த லட்சக்கணக்கான தினக் கூலி செய்வோா், தொழிலாளா்கள் வேலையிழந்து தங்களின் வாழ்வாதாரத்துக்காக மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயா்ந்து விட்டனா்.
  • சுமாா் 350 பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள், 1,070 தொழிலாளா்களுடன் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து தயாரித்த பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க இப்போதுதான் முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பசுமைப் பட்டாசுகள்

  • எனினும், இந்த ஆண்டும் இந்த பசுமைப் பட்டாசுகள் நடைமுறை பயன்பாட்டுக்கு வராது என்ற நிலை உள்ளது. காரணம், உச்சநீதிமன்றம், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பயன்படுத்துலுக்கான பாதுகாப்பு அமைப்பிடமிருந்து இந்த பசுமைப் பட்டாசுகள் தயாரிப்புக்கு உரிமம் பெற வேண்டும்.
  • தீபாவளி பண்டிகைக்கு 24 மணி நேரமே உள்ள நிலையில் இது சாத்தியமில்லை. மேலும், இந்த பசுமைப் பட்டாசுகள், சராசரி பட்டாசுகளைவிட விலை அதிகம்.
  • தீபாவளி அனைவரது வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும். குறிப்பாக, பட்டாசுத் தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும். அதற்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மரபு வழி பட்டாசுகள் உற்பத்தியை சிவகாசியில் தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்பதே பட்டாசு தயாரிக்கும் ஏழைத் தொழிலாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
  • இதனால் தமிழகமும் தலை நிமிரும்; பட்டாசு உற்பத்தியின் மூலம் இந்தியாவும் அந்நியச் செலாவணியை ஈட்டி பொருளாதாரத்தையும் மேம்பாடு அடையச் செய்யலாம்.

நன்றி: தினமணி(29-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்