- பொதுவாக இன்றைய பெற்றோர் தங்களது குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே குறிவைத்து அதற்குத் தகுந்தாற்போல் அவர்களது சூழ்நிலைகளை மாற்றிக்கொள்கின்றனர். ஆனால், மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மனிதனின் தகுதிகளை முழுமையாக அளக்கக்கூடிய ஒரு கருவி அல்ல. என்றாலும், வெற்றி அடைவதற்கு ஓரளவு மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.
நினைவில் நிற்கும் படிப்பு
- ஆழமான சுயசிந்தனையுடன் கூடிய கல்வியைப் படிப்பதன் மூலமாகவே பற்பல ஆராய்ச்சியின் வழியாக புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். இவ்வுலகுக்கும் சமூகத்துக்கும் வாழ்வுக்கும் வளம் சேர்க்கும் பல ஆக்கபூர்வமான பணிகளை உருவாக்கித் தரமுடியும். பாடக் குறிப்புகள், டியூஷன், தேர்வுக்கு முன் வினாத்தாள்கள் வெளியாகாதா போன்ற எதிர்பார்ப்புகள் மாணவர்களை உண்மையான கல்வியிலிருந்து திசை திருப்புகின்றன.
- படிப்பு என்பது மேலும் மேலும் இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் அதிதீவிரமான அர்ப்பணிப்பு ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். மனதோடும் உடலோடும் இணைந்து படிப்பது நினைவில் நிற்கும். எளிதில் மறக்க இயலாது. இதற்கு வாகனங்கள் ஒட்டுவது, நீச்சல் அடிப்பது ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
- எந்தப் பாடத்தையும் புரிந்துகொள்ளாமல் படித்தால் நினைவில் நிறுத்த முடியாது. வரலாற்றுப் பாடமாக இருந்தால் நிகழ்வுகளுடன் வருடங்களையும், வருடங்களுடன் நிகழ்வுகளையும் தொடர்புபடுத்திப் படிக்க வேண்டும். படித்த பாடங்களை ஒரு இடைவெளி விட்டு, குறிப்பிட்ட காலத்தில் திருப்புதல் செய்தல் நினைவைவிட்டு அகலாதிருக்க வகைசெய்யும்.
எப்படிப் படிக்கலாம்?
- படிப்பதற்கென்று ஓர் அமைதியான இடத்தைத் தேர்வுசெய்வது கவனம் சிதறாமல் படிப்பதற்கு வகைசெய்யும். இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிப்பதைவிட அமைதியான அதி காலை நேரத்தில் படிப்பது நினைவில் நிற்கும். ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ படிப்பதற்கென்று ஒதுக்கி, அதனைச் செயல்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் வேறு எந்த செயலையும் செய்ய உங்கள் மனதை அனுமதிக்காதீர்கள். ‘சுவரின்றி சித்திரம் எழுத முடியாது' அல்லவா? எனவே படிப்பதற்குத் தயாராகும் முன் உடல்நலத்துக்குத் தேவையான சத்தான உணவு உண்ண வேண்டும்.
- பொதுவாக நமக்குப் பிடித்த பாடங்களை முதலில் படிப்பது நல்லது. தேர்வுக்குத் தயார்செய்யும்போது முதலில் எளிமையான பகுதிகளைப் படிப்பது நலம். மனப்பாடம் செய்வதைவிட இயன்ற வரை படிக்கும் பகுதியின் உட்கருத்தைப் புரிந்து படிக்க வேண்டும். உங்களது கையெழுத்தில் குறிப்புகள் எடுத்துப் படிப்பது, எளிதில் மனதில் பதிய வகை செய்யும். படிக்க வேண்டிய பாடங்கள் நீண்ட பகுதியாக இருப்பின் அவற்றைச் சிறுசிறு பகுதிகளாகவோ முக்கியச் செய்திகளாகவோ பிரித்துப் படிப்பது நல்லது.
கவனமாகப் படியுங்கள்
- பள்ளியில் ஆசிரியர் கற்பிப்பதை முழுக் கவனத்துடன் உள்வாங்கிக் கொள்ளுங்கள். சந்தேகம் இருப்பின் அதனை வகுப்பிலோ பாட ஆசிரியரிடமோ நன்கு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். எப்பாடத்தையும் புரியாமல் மனப்பாடம் செய்தால் நினைவில் நிற்காது. ஆசிரியர் கற்பிக்கும்போது குறிப்பு எடுங்கள். குறிப்பெடுக்கும்போது மனது பாடத்தில் இருப்பதோடு மட்டுமின்றி கவனிப்பதும் எழுதுவதும் அப்பாடத்தை நன்குப் புரிந்துகொள்ள உதவும்.
- மனது அமைதியாக ஒரே நிலையில் இருக்கும்போது படித்த பாடங்கள் சம்பந்தமாக அடிக்கடி மனதில் வினாக்கள் எழுப்பித் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். அன்றாட நிகழ்வுகளில் பாடம் தொடர்புடைய பிற கருத்துகளுடன் தொடர்புபடுத்திப் படித்தறிதலைச் சிறப்பாக்குங்கள்.
- படிக்கும் பாடம் தொடர்பான ஒரு வரைபடத்தை மனதில் உருவாக்கிக்கொண்டு படிப்பது நினைவில் நிறுத்திக்கொள்ள ஏதுவாகும். எடுத்துக்காட்டாக, இந்தியா பற்றிப் படிக்கும்போது இந்திய மாநிலங்கள், தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், ஆறுகள், முக்கிய விளைபொருள்கள் எனப் பல உள்பிரிவுகளோடு மையக் கருத்தான இந்தியாவைத் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள்.
- சுருக்கமாக நினைவு வைத்துக் கொள்ள உங்களுக்குப் பிடித்த, பழக்கமான குறியீட்டு மொழியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக மாநிலங்களின் பெயர் களை நினைவில் நிறுத்த அகர வரிசையைப் பயன்படுத்தலாம். படித்ததை அசை போடுங்கள். பலமுறை தவறின்றி எழுதிப் பாருங்கள். தேர்வுகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 09 – 2023)