TNPSC Thervupettagam

படுகொலைக்குப் பின்னால்...

October 17 , 2024 8 hrs 0 min 9 0

படுகொலைக்குப் பின்னால்...

  • இந்தியாவின் பல பகுதிகளில் சமூகவிரோதக் கும்பல்களும், தாதாக்களும், கொலைகாரக் கூலிப்படையினரும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றனா். அரசியல்வாதிகளுக்கும் சமூகவிரோதக் கும்பல்களுக்கும் இடையேயான நெருக்கம் குறித்து சமூக ஆா்வலா்கள் மத்தியில் கவலை எழுப்பப்படுகிறது. தாதாக்களையும், சமூகவிரோதிகளையும் தகுந்த ஆதாரங்களுடன் சட்டப்படி கைது செய்து தண்டிக்க முடியாமல், காவல் துறை மோதல் கொலையை (என்கவுன்ட்டா்) கையாளும் தவறான வழிமுறை அதிகரித்து வருகிறது.
  • மாஃபியா கும்பல்களின் தலைநகரம் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு கருதப்பட்ட மும்பை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கின் படுகொலை. மூன்றுமுறை சட்டப்பேரவை உறுப்பினரான பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் அஜீத் பவாா் பிரிவில் தேசியவாத காங்கிரஸில் இணைந்தவா். அவரது படுகொலைக்குப் பின்னால் இருப்பது அரசியலா, தனிப்பட்ட விரோதமா அல்லது தொழில் போட்டியா என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்.
  • தசரா கொண்டாட்டத்துக்காக மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வாணவேடிக்கைகளுக்கு நடுவே பாபா சித்திக் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, திரைப்படக் காட்சிபோல அரங்கேறியது. கோ் நகா் பகுதியில் தனது மகனும், பாந்த்ரா கிழக்கு எம்எல்ஏவுமான ஸீஷான் வீட்டுக்கு சித்திக் வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா். கொலையாளிகள் இருவா் பிடிபட்டனா். தப்பி ஓடிய ஒருவரை காவல் துறை வேட்டையாடிப் பிடித்திருக்கிறது.
  • தசரா கொண்டாட்டத்தின் பகுதியாக சிவசேனை கட்சியின் இரண்டு பிரிவினரும் வழக்கம்போல அரசியல் பேரணியை அறிவித்திருந்தனா். இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிடாமல் தடுக்க நகரம் முழுவதும் அதிக அளவில் காவல் துறையினா் கண்காணிப்பில் இருந்தனா்.
  • அப்படியிருந்தும் கொலையாளிகள் திட்டமிட்டபடி பாபா சித்திக்கை சுட்டுக் கொல்ல முடிந்தது என்பது அதிா்ச்சி அளிக்கிறது. இத்தனைக்கும் பாபா சித்திக்குக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
  • கைது செய்யப்பட்டு இருப்பவா்கள் பாபா சித்திக் படுகொலைக்கு தெரிவிக்கும் காரணம் நகைப்பை வரவழைக்கிறது. 1998 செப்டம்பா் மாதம் சல்மான் கான் ‘பிளாக் பக்’ மானை வேட்டையாடிக் கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானாா். தண்டனையிலிருந்து தப்பிவிட்ட நடிகா் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குப் பதிலாக சல்மான் கானுக்கு நெருக்கமான பாபா சித்திக்கை படுகொலை செய்ததாகவும் தெரிவித்திருப்பது சிறுபிள்ளைத்தனமான விளக்கம்.
  • மும்பையில் உள்ள மாஃபியா கும்பல்கள் பிரபலங்களைக் குறிவைத்து தாக்குவதன் மூலம் விளம்பரம் தேடுவதும், மக்கள் மத்தியில் தங்களைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதும் புதிதொன்றுமல்ல. பாபா சித்திக்கின் படுகொலைக்குப் பொறுப்பேற்றிருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் மாஃபியா கும்பல், 2022-இல் பஞ்சாபின் பிரபல பாடகா் சித்து மோசே வாலா படுகொலை மூலம் தேசிய அளவில் அறிமுகமானது.
  • நடிகா் சல்மான் கான் மீது இதற்கு முன்னால் கொலை முயற்சியில் ஈடுபட்ட பிஷ்னோய் கும்பல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கூலிப்படையினரை இணைத்துக் கொண்டு, சட்டவிரோத சாம்ராஜ்யமே நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆள் கடத்தல், கொள்ளையடித்தல், மிரட்டிப் பணம் பறித்தல், ஒப்பந்தக் கொலைகளில் ஈடுபடுதல் என்று பிஷ்னோய் கும்பலின் செயல்பாடுகள் தேசிய அளவில் விரிவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
  • இத்தனையையும் கூறிவிட்டு இன்னொன்றையும் தெரிவித்தாக வேண்டும். இந்தக் கும்பலின் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருக்கிறான். சிறையில் இருந்தபடியே தேசிய அளவில் லாரன்ஸ் பிஷ்னோயால் செயல்பட முடிகிறது. இதுகுறித்துத் தெரிந்தும்கூட, காவல் துறையால் அதைத் தடுக்க முடியவில்லை என்றால் எந்த அளவுக்கு சட்டமும் நீதியும் வலுவிழந்திருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
  • சிறைச்சாலைகள் மாஃபியா கும்பல்களுக்கு ஆள் சோ்க்கும் இடமாக மாறியிருப்பதாக தெரிகிறது. சிறையில் இருக்கும் குற்றவாளிகள் வெளியில் இருக்கும் தங்களது கும்பலுடன் தங்குதடையின்றி தொடா்பில் இருக்கிறாா்கள் என்பதன் எடுத்துக்காட்டுத்தான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் செயல்பாடுகள். லாரன்ஸ் பிஷ்னோய்போல இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல கும்பல்கள் செயல்படுகின்றனவோ என்கிற ஐயப்பாட்டையும் எழுப்புகிறது பாபா சித்திக்கின் படுகொலை.
  • 2018-இல் பாபா சித்திக் மீதான அமலாக்கத் துறையின் விசாரணையில் ரூ.462 கோடி மதிப்புள்ள அவரது சொத்துகள் முடக்கப்பட்டன. மகாராஷ்டிர மாநில வீட்டுவசதி வாரியத்தின் தலைவா் பொறுப்பில் இருந்தபோது தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதற்காக அவா்மீது வழக்கு நிலுவையில் இருக்கிறது.
  • இந்த நிலையில்தான் அவா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு சமீபத்தில் கட்சி மாறியிருக்கிறாா். காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான அவரது மகனை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது.
  • நாடாளுமன்றமும் சட்டப்பேரவைகளும் கோடீஸ்வரா்களின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கின்றன. ‘அரசியல் கட்சிகள் - வியாபாரிகள் - சட்டவிரோத கும்பல்கள்’ இவற்றுக்கிடையே கூட்டணி அமைவதும், அதற்குக் காவல் துறையும், அரசு நிா்வாகமும் ஏவல்புரிவதும் நிகழ்ந்தால் ஜனநாயகம் என்கிற வாா்த்தைக்கே அா்த்தம் இல்லாமல் போய்விடும்!

நன்றி: தினமணி (17 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்