TNPSC Thervupettagam

படைப்புகளில் வாழ்வார்

January 7 , 2021 1299 days 598 0
  • தமிழ் இலக்கிய உலகில் 1953-ஆம் ஆண்டிலிருந்து அழுத்தமான கால் பதித்தவர் ஆ.மாதவன். ஆற்றில் மணல் வாரும் மக்களின் வாழ்வியல் அவலங்களைச் சித்திரிக்கும் "புனலும் மணலும்' (1974), கிருஷ்ணப் பருந்து (1980), தூவானம் (1987)  போன்ற காலத்தை வென்ற புதினங்கள், "எட்டாவது நாள்', "காளை' போன்ற குறும்புதினங்கள், "கடைத்தெருக் கதைகள்' (1975), "மோகபல்லவி' (1975), "காமினி மூலம்' (1975), "ஆனைச்சந்தம்'  (1981), "மாதவன் கதைகள்' (1985), "அரேபியக் குதிரை' (1995), "ஆ. மாதவன் கதைகள்' (2002), "முத்துக்கள் பத்து' (2007), "பெயரில்லாத கதை' (2014) போன்ற சிறுகதைத் தொகுப்புகள் என்றென்றும் இவரது பெயர் சொல்லும்.
  • காரூர் நீலகண்டபிள்ளையின் "சம்மானம்', பி.கே. பாலகிருஷ்ணனின் "இனி ஞான் ஒறங்கட்டே' போன்ற நூல்களை மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்தவர்.
  • இவரது நாவல்கள் மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாட, ஆய்வு நூல்களாகப் பயிற்றுவிக்கப்பட்டு உள்ளன.
  • இவர் திருவனந்தபுரம் சாலைத் தெருவில் பாத்திரக்கடை  நடத்தி வந்தார்.  தம் கண்முன் அன்றாடம் தோன்றும் மனிதர்களையே தனது கதையின் பாத்திரங்களாக வனைந்த நேர்த்தியாளர்.
  • "மாதவனின் கதாபாத்திரப் படைப்புகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. தனித்தன்மை கொண்டவை. அதனாலேயே  நெஞ்சில் குத்தி நிற்கின்றன. சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் உழலும் பாமர வர்க்கத்தை-தமது அனுபவம் வாயிலாகவே பிரதிபலித்துக் காட்டுகிறார்' என்று திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கக் கருத்தரங்கில் பேசும்போது எடுத்துரைத்தார் வல்லிக்கண்ணன்.
  • 1934 பிப்ரவரி 7-ஆம் நாள் பிறந்த ஆ. மாதவனின் முன்னோர் வாழ்ந்தது செங்கோட்டையில். பெற்றோர் ஆவுடைநாயகம் பிள்ளை-செல்லம்மாள். வணிகம் நிமித்தமாக அன்றைய திருவிதாங்கூரில் குடியேறிய குடும்பம். தாய்மொழி தமிழ் என்பதால் தேவாரம், திருவாசகம் தொடங்கிப்  பழந்தமிழ் இலக்கியங்களைக்  கற்றவர். 1948-இல் பள்ளி இறுதித்தேர்வு வரை மலையாளம் பயின்றதால், தமிழிலும், மலையாள மொழியிலும் 70 ஆண்டு கால எழுத்தாளுமை கொண்டவர்.
  • அரு. ராமநாதன் நடத்தி வந்த "காதல்' மாத இதழில்தான் இவர் எழுதிய படைப்பு முதலில் அச்சில் வந்ததாம்.  டால்ஸ்தாய், தாஸ்தோயேவ்ஸ்கி, மாக்சிம் கார்க்கி, ஷோலோகோவ், செக்கோவ், மாப்பசான் போன்ற உலக இலக்கிய மேதைகளைத் தேடித்தேடி வாசித்தார்.
  • எழுத்தாளர் புதுமைப்பித்தனின் துணைவியார் கமலா விருதாச்சலத்தின் சொந்த ஊர் திருவனந்தபுரம். அவரது பக்கத்து வீட்டுக்காரரான எஸ். சிதம்பரம் என்பவர் நடத்தி வந்த "கவிக்குயில்' இலக்கிய ஏட்டில் எழுதி வந்த புதுமைப்பித்தனுடன் நெருங்கிப் பழகியவர்.
  • கு.ப. ராஜகோபாலன், லா.ச.ராமாமிருதம், தி. ஜானகிராமன், தொ.மு.சி. ரகுநாதன், வல்லிக்கண்ணன், கு. அழகிரிசாமி போன்றவர்களின் படைப்புகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
  • 1949-இல் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த என்.வி. நடராசன் நடத்தி வந்த "பொன்னி' இதழின் பொங்கல் மலரில் இவர் எழுதிய "பூவும் காயுமான சில நினைவுகள்' என்ற எழுத்தோவியத்தைத் தொடர்ந்து, "தென்றல்', "முல்லை', "முத்தாரம்', "முரசொலி', "தினமணி கதிர்', "தீபம்', "கணையாழி' போன்ற பல இதழ்களில் சிறுகதைகளும் புதினங்களும் எழுதியுள்ளார்.
  • ஆ. மாதவன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகத் தொண்டாற்றியவர். இவர் தலைவராயிருந்தபோதுதான் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்திற்கு சொந்தக்  கட்டடம் எழுப்பப்பட்டது. 
  • "கேரளத் தமிழ்' இதழின் தொடக்க ஆசிரியர். "தினமணி கதிர்', "தீபம்' ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழு உறுப்பினர் என பல்வேறு தளங்களில் செயல்பட்டவர்.
  • "கேரளத்தமிழ் மொழிபெயர்ப்பு சிறப்பு மலர்' (1992), "தி. ஜானகிராமன் சிறுகதை சிறப்பு மலர்' (1983), " தமிழில் சிறுபத்திரிகைகள்' (1998), "புதினப் பூக்களம்' (1994) ஆகியவை இவரது இலக்கியச் செயல்பாடுகள்.
  • 1991-ஆம் ஆண்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தென்னகப் பண்பாட்டு மையமும் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய "பாரதிதாசன் நூற்றாண்டு விழா'வின்போது, கேரள மாநில அரசின் கெளரவிப்பு பெற்றவர். 1994-ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பொன்விழாவிலும் பாராட்டுப் பெற்ற படைப்பாளி.
  • இவரது "இலக்கியச் சுவடுகள்' நூலுக்கு 2015-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
  • தமிழக அரசின் "கலைமாமணி' விருது, மகாகவி உள்ளூர் விருது, விஷ்ணுபுரம் விருது, சிறுகதைச் செல்வர், தமிழ் மாமணி  உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். சாகித்திய அகாதெமியின் தமிழ்ப்பிரிவில் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர்.
  • பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவியையும் ஒரே மகனையும் இழந்தவர். அன்றிலிருந்து தனது இரண்டு பெண் மக்கள், பெயரக் குழந்தைகளுடன்  திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.
  • தனது இறுதிக்காலம் வரை சமகால இலக்கியங்களை வாசித்து வந்தார் ஆ. மாதவன். உடல்நலக்குறைவால் அண்மையில் ஒரு வாரகாலம் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை (5.1.2021) காலமானார். கேரள அரசு மரியாதையுடன் அவரது இறுதிப்பயணம் நிறைவுற்றது. தன் படைப்புகளின் வழியே என்றென்றும் வாழ்வார் ஆ. மாதவன்.

நன்றி: தினமணி  (07 -01 -2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்