TNPSC Thervupettagam

பட்ஜெட் கூட்டத்தொடர்

January 31 , 2020 1809 days 1000 0
  • நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது நிகழ்த்தப்படும் குடியரசுத் தலைவர் உரையின் மீது விவாதம் நடப்பது வழக்கம். அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பிறகுதான் நிதியமைச்சர் அடுத்த நிதியாண்டுக்கான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

நிதிநிலை அறிக்கை

  • ஒரு மாதம் முன்னதாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தேதியை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் ஆகியோரின் உரை என்பது அரசின் செயல்திட்டங்கள் குறித்தும், கொள்கைகள் குறித்துமான முன்னறிவிப்பு.
  • அதனால், அந்த உரையில் குறிப்பிடப்படும் பல்வேறு திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகள் குறித்த விவாதம் ஆரோக்கியமானது.
  • இன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், முந்தைய கூட்டத் தொடர்களிலிருந்து வித்தியாசப்படுகிறது.
  • முந்தைய குளிர்காலக் கூட்டத்தொடரில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் நாடாளுமன்றம் கூட இருக்கிறது.
     குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பும், பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் பல அந்தச் சட்டத்தை நிராகரித்து, பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றன.

உச்ச நீதிமன்றம்

  • குடியுரிமை திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்கிற மாநில அரசுகளின் வாதம் சரியா, தவறா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வே தவிர, மாநில சட்டப்பேரவைகள் அல்ல. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரித்து விட்டிருக்கும் நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முக்கிய விவாதப் பொருளாக இருக்கப்போவது நிதிநிலை அறிக்கையா அல்லது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களா என்கிற கேள்வி எழுகிறது.
  • இந்தியப் பொருளாதாரம் பின்னடைவை எதிர்கொள்கிறது என்பதை மத்திய அரசு தனது வளர்ச்சி விகித எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டிருப்பது உறுதிப்படுத்துகிறது.
  • வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டிருப்பதும், விலைவாசி உயர்வும், வேலையின்மை அதிகரித்திருப்பதும் நிதர்சன உண்மைகள். இந்த நிலையிலிருந்து அடுத்த நிதியாண்டுக்கான அறிக்கை இந்தியப் பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
  • அதனால், நாளை (பிப்.1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிதிநிலை அறிக்கை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதன்மை அம்சம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • ஒருபுறம் உலகையே பீதியில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்திருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவல். பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் குறித்த செய்திகள் இன்னொருபுறம். இந்தியாவை பாதிக்கக் கூடிய சர்வதேச அரசியல், பொருளாதார நிகழ்வுகள் மற்றொருபுறம்.

பின்னணி

  • எல்லாவற்றுக்கும் மேலாக, முன்பு குறிப்பிட்டதுபோல, குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற போராட்ட ஆயுதத்துடன் எதிர்க்கட்சிகள். இந்தப் பின்னணியில் இன்று கூட இருக்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், அமைதியாகவும், பயனுள்ளதாகவும் தனது கடமையை ஆற்ற வேண்டுமே என்பது நமது கவலை.
  • கடந்த மே மாதம் மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்தபோது, கூச்சல் - குழப்பம் இல்லாமல் நாடாளுமன்றம், இனிமேலாவது தனது கடமையைச் செவ்வனே ஆற்றும் என்கிற நம்பிக்கை எழுந்தது. அரசுத் தரப்பும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி, தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மக்களின் வரிப் பணத்தை விரயமாக்காத பயனுள்ள கூட்டத் தொடராக அமையும்.
  • மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி விரைந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்றாலும்கூட, மக்களவை, மாநிலங்களவையின் செயல்பாடுகள் ஜனநாயக உணர்வுடன் இல்லை என்கிற உண்மையை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை. பெரும்பான்மை பலத்துடன் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது மட்டுமே நாடாளுமன்ற ஜனநாயகம் அல்ல.
  • போதிய விவாதங்களுக்குப் பிறகு சட்டங்கள் நிறைவேற்றப்படுவதுதான் முறையான ஜனநாயகம்.
  • நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசு கொண்டுவரும் திட்டங்கள் குறித்த வாதங்கள் முன்வைக்கப்படுவது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களின் மூலம் உணர்வுகள் பிரதிபலிக்கப்படுவது, அவற்றின் அடிப்படையில் அரசு தனது தீர்மானங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றுவது என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம்.
  •  கூச்சல் - குழப்பங்கள் ஏற்படுத்துவதும், அரசு கொண்டுவரும் தீர்மானங்களை விவாதங்கள் மூலம் எதிர்க்காமல் அவை நடவடிக்கைகளை முடக்குவதும் எதிர்க்கட்சிகளின் மீதான மக்களின் நம்பிக்கையை உருக்குலைத்திருக்கின்றன.
  • உறுப்பினர்கள் அவைக்கு வராமல் இருப்பது, விவாதங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பது, கலந்து கொண்டாலும் நடவடிக்கைகளை முடக்குவது போன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த நாடாளுமன்ற விவாதக் கலாசாரத்தை மீட்டு எடுப்பார்களாக!

நன்றி: தினமணி (31-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்