- தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாவது தொடர்பாக, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையே எழுந்திருக்கும் பூசல்கள் மிகுந்த ஆயாசமளிக்கின்றன.
- பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாததால், தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் 12 பல்கலைக் கழகங்களில் பயின்ற 9,29,542 மாணவர்கள் இன்றைக்குத் தங்கள் பட்டச் சான்றிதழ் பெறாமல் இருப்பதாகத் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்திருக்கிறார். இந்தத் தாமதத்தால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர முடியாதது உள்ளிட்ட பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
- பட்டமளிப்பு விழாக்களுக்கு மத்திய அமைச்சர்களை விருந்தினர்களாக அழைக்க ஆளுநர் விரும்புவதும் அவர்களால் தேதி ஒதுக்க முடியவில்லை என்று அவர் சொல்வதும்தான் இப்பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என அமைச்சர் கூறியிருக்கிறார்; பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் இன்னமும் தேதிகளை ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநில அமைச்சர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தவறில்லை என்பது அமைச்சரின் வாதம்.
- மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு விவகாரங்களில் முரண்பாடுகள் தொடரும் சூழலில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அழைத்து மாநாடு நடத்துவது உள்ளிட்ட வேலைகளில் ஆளுநர் ஈடுபட்டிருக்கிறார். இதன் காரணமாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதாவைத் திமுக அரசு நிறைவேற்றி ஆளுநருக்குச் சவால் விடுத்தது.
- மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் (2022) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டதால், அந்நிகழ்ச்சியைப் புறக்கணித்த அமைச்சர் பொன்முடி, பட்டமளிப்பு விழாவில் அரசியலைக் கலப்பதாக ஆளுநர்மீது குற்றம்சாட்டியிருந்தார். மேலும், பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநர் தாமதம் காட்டுவதாகவும் அமைச்சர் தரப்பில் சொல்லப்படுகிறது.
- ஆனால், இதுவரை 7 பல்கலைக்கழகங்களில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சென்னை (ஜூன் 16), திருவள்ளுவர் (ஜூன் 19), பெரியார் (ஜூன் 28), ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (ஜூலை 7) ஆகியவற்றின் பட்டமளிப்பு விழாவுக்குத் தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருந்தால், அங்கு பட்டமளிப்பு விழாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என்றும் ஆளுநர் தரப்பு கூறியிருக்கிறது.
- இந்தப் பின்னணியில், ஆளுநர் மாளிகை அருகே ஜூன் 16 அன்று போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்ந்து அரசியல்ரீதியான பிரச்சினையாக நீடிப்பது எந்த விதத்திலும் சரியல்ல.
- பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களின் கல்விப் பயணத்தில் மிக முக்கியமான தருணம். படிப்பில் அவர்கள் செலுத்திய கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பல்கலைக்கழகத்தில் வைத்து வழங்கப்படும் அங்கீகாரம். இதில் இனிமேலும் போட்டி அரசியல் தொடரக் கூடாது. இரு தரப்பும் இது குறித்துக்கலந்துபேசி ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்!
நன்றி: தி இந்து (15 – 06 – 2023)