- பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதையாக நிகழ்ந்துவரும் நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழு, பட்டாசு ஆலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கான காத்திரமான பரிந்துரைகளை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. 2023ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; ஆறு பேர் காயமடைந்தனர்.
- இந்த விபத்து குறித்து ஆராய்வதற்காகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு ஒரு குழுவை நியமித்தது. வருவாய்க் கோட்ட அலுவலர் எம்.சிவகுமார், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய இயக்குநர் ஹெச்.டி.வரலட்சுமி, சுற்றுச்சூழல் இணைத் தலைமைப் பொறியாளர் எம்.விஜயலட்சுமி, மத்திய சுற்றுச்சூழல், காடுகள், காலநிலை மாற்ற அமைச்சகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் இ.ஆரோக்கிய லெனின் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர்.
- ‘பட்டாசு ஆலைகளுக்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தபோதிலும், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு வெடிவிபத்துகள் நிகழ்கின்றன’ என்று இந்தக் குழு கூறியுள்ளது. ‘விதிமுறைகளைச் சரியாகப்பின்பற்றாததும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்குப் போதுமான ஏற்பாடுகள் இல்லாததும்தான், பட்டாசு ஆலைகளில் விபத்துகள் தொடர்வதற்குக் காரணம்’ என்று இந்த ஆய்வுக் குழு சரியாக அடையாளப்படுத்தியுள்ளது. அத்துடன் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு நிர்வாகரீதியிலான, தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது.
- பட்டாசுப் பட்டறைகளைத் (sheds) தீவிரமான கண்காணிப்புக்கு உட்படுத்துவது, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட பட்டறைகளை நிரந்தரமாக மூடுவது, விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிப்பது, இயந்திரமயமாக்கலை அதிகரிப்பதன் மூலம் வெடிபொருள்களை மனிதர்கள் கையாள வேண்டிய தேவையைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவற்றில் முக்கியமானவை.
- வேதிப்பொருள்களைக் கலப்பது, நிரப்புதல் போன்ற ஆபத்துமிக்க பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும், சான்றிதழ் பெற்ற ஊழியர்கள் மட்டுமே இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- மேலும் பட்டாசு ஆலைகள், கிடங்குகளைக் கண்காணிப்பதற்கான அமைப்புகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
- பட்டாசு ஆலை, கிடங்குகளுக்கான உரிமம் வைத்திருப்பவர்கள் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அவை உரிய ஒழுங்காற்று அமைப்புகளின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
- மேற்கூறிய பரிந்துரைகள் குறித்த செய்தி வெளியான அடுத்த நாள், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கல்குவாரிக்கு அருகில் உள்ள வெடிபொருள் கிடங்கில் நேர்ந்த வெடி விபத்தில் மூன்று தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். கிடங்கு ஊழியர்களின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
- பட்டாசு ஆலைகள், கிடங்குகளில் நிகழும் வெடி விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழக்கும் அவலம் நிரந்தரமாகத் தடுக்கப்பட வேண்டும் என்றால், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும்.
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் அளித்துள்ள பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது அதற்கான தொடக்கப்புள்ளியாக அமையக்கூடும். இதை உறுதிசெய்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை. பட்டாசு நிறுவன அதிபர்கள் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 05 – 2024)