TNPSC Thervupettagam

பட்டினியை விரட்டிடவே பொது விநியோகத் திட்டம்!

August 12 , 2020 1620 days 744 0
  • கரோனா நிவாரணமாகக் கடந்த ஏப்ரலிலிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டுவந்த பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றைத் தமிழக அரசு நிறுத்திக்கொள்ளும் முடிவை எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
  • இனி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வாங்குவோர் அதற்கான விலையைக் கொடுத்து மட்டுமே வாங்க முடியும். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.450 கோடி வரை மிச்சப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
  • ஊரடங்கின் காரணமாகப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசியோடு மேலும் சில உணவுப் பொருட்களையும் விலையில்லாமல் அளிக்கும் நிவாரணத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது.
  • இன்னும் இயல்புவாழ்க்கை திரும்பாத நிலையில் பட்டினியிலிருந்து மக்களைக் காக்கும் நல்ல திட்டம் ஒன்றைத் தமிழக அரசு பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும் முடிவை எடுத்திருப்பது இதுவரையில் அது முன்னெடுத்த பட்டினி ஒழிப்பு நடவடிக்கைகளின் முழுப் பயனைப் பெற முடியாமல் செய்துவிடும்.
  • துவரம் பருப்பு கிலோ ஒன்று ரூ.30, சமையல் எண்ணெய் லிட்டர் ஒன்று ரூ.25, சர்க்கரை கிலோ ஒன்று ரூ.25 என்ற விலைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விற்கப்பட்டுவருகின்றன.
  • அந்த்யோதயா அன்ன யோஜனாதிட்டத்தின் கீழ் சர்க்கரை கிலோ ஒன்றுக்கு ரூ.13.50 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அரிசியும் கோதுமையும் மட்டுமே தற்போது இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றன. அரிசி அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்குக் கூடுதலாக ஐந்து கிலோ அரிசி வழங்கப்படும். 1.1 கோடி முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு மத்திய அரசே இலவசமான அரிசி வழங்குகிறது என்றாலும், முன்னுரிமை அல்லாத 90 லட்சம் குடும்ப அட்டைகளுக்குத் தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து கிலோ ரூ.22 என்ற விலையில் வாங்கி பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கிவருகிறது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டபோது குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.1,000 வழங்கியது தமிழக அரசு. முழு ஊரடங்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில ஜூன் மாதத்தில் மேலும் ரூ.1,000 வழங்கப்பட்டது.
  • மிகச் சிலருக்கு, இந்த உதவித்தொகை ஒரு கூடுதல் வருமானமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த உதவித்தொகையும் விலையில்லாத உணவுப் பொருட்களும் எத்தனையோ ஆயிரம் குடும்பங்களைப் பசிப் பிணியிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் மீண்டும் சீராகும் வரை மேலும் சில மாதங்கள் அரிசியோடு சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றையும் விலையில்லாமல் வழங்குவது குறித்து தமிழக அரசு யோசிக்க வேண்டும்.
  • பொது விநியோகத் திட்டத்தின் நோக்கம் உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்குவது மட்டுமல்ல, பட்டினியிலிருந்து மக்களைப் பாதுகாப்பதும்தான்.

நன்றி: தி இந்து (12-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்