- தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 96.88 கோடிப் பேர் இடம்பெற்றுள்ளனர். இது 2019 மக்களவைத் தேர்தலின்போது இருந்த வாக்காளர் எண்ணிக்கையைவிட 6% அதிகம். மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்புதான். ஆனால் வாக்குப்பதிவு - அதாவது தேர்தல் அன்று வாக்களிப்போரின் எண்ணிக்கை அதே வேகத்தில் அதிகரிக்கவில்லை.
- 1951இல் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 1951-52இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு 45.67%தான். 1962 தேர்தலில்தான் வாக்குப்பதிவு 50%ஐக் கடந்தது (55.4%). 1967 தேர்தலில் 61.3% வாக்குகள் பதிவான நிலையில், 1971இல் அது 55.29%ஆகச் சரிந்தது. அதன் பிறகு 2004 தேர்தல் வரை வாக்குப்பதிவு ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது.
- 2009இலிருந்துதான் நிலையான ஏறுமுகத்தில் உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 67.40% வாக்காளர்கள் வாக்களித்தனர். இதுவே மக்களவைத் தேர்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். அந்தத் தேர்தலில் வாக்களிக்காத சுமார் 30 கோடி பேரில் நகர்ப்புற மக்கள், இளைஞர்கள், புலம்பெயர்த் தொழிலாளிகளே அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தப் பிரிவினர் வாக்களிப்பதை அதிகரிப்பதற்கான திட்டங்களுடன் 2024 மக்களவைத் தேர்தலில் 75% வாக்குப்பதிவை எட்டுவது என்னும் இலக்குடன் பணியாற்றிவருகிறது.
- தேர்தல்கள் தமது வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக ஏழைகளும் படிக்காதவர்களும் கருதுவதால் அவர்கள் தவறாமல் வாக்களிக்கிறார்கள் என்றும், படித்தவர்கள், பணக்காரர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை என்றும் பரவலான கருத்து நிலவுகிறது; இது முழு உண்மையல்ல. ஏழைகள் அதிகமாக உள்ள நகரங்களில் ஒன்றான ஹைதராபாத்தில் 2019 தேர்தலில் 44.8% வாக்குகள் பதிவாகின.
- ஏழைகள் குறைவாக உள்ள பகுதியான கேரளத்தின் கண்ணூரில் 79.21% வாக்குகள் பதிவாகின. எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலமான கேரளத்தில், 77.6% வாக்குகள் பதிவாகின. எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள பிஹாரில் 57.33% வாக்குகள் பதிவாகின.
- வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் வாக்களிக்க முடியாமல் போவதற்குப் பணிசார்ந்த காரணங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. வெளிமாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேர்தல் நாளன்று தொலைதூரத்தில் இருக்கும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க முடிவதில்லை.
- தேர்தல் அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஒரே மாநிலத்தில் வெளியூரில் பணியாற்றும் அனைவருக்கும் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. இது போன்ற சிக்கல்களைக் களைந்தால்தான் 100% வாக்குப்பதிவு என்னும் இலக்கை எட்ட முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 02 – 2024)