TNPSC Thervupettagam

பட்டியல் சாதியினரும் தேர்தல் அறிக்கைகளும்

April 11 , 2024 279 days 217 0
  • உலகின் பல நாடுகளில் வாக்குறுதிகளை அளித்து தேர்தலை எதிர்கொள்வது அரசியல் கட்சிகளின் வழக்கமான நடைமுறை. சில நாடுகளில் தேர்தல் அறிக்கைகளை முன்கூட்டியே தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆணையம் அதை ஆய்வுக்கு உள்படுத்தி பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய பிறகே, தமது வாக்குறுதிகளைச் சொல்லி வாக்குச் சேகரிப்பில் கட்சிகள் ஈடுபட முடியும். அத்தகைய நடைமுறை இந்தியாவில் இல்லை.
  • தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தாமே அறிக்கைகளைத் தயாரித்து வெளியிடுகின்றன. ஆனால், தேர்தலுக்கு முன்போ பின்போ அனைத்துக் கட்சிகளின் வாக்குறுதிகளுக்கும் சமூகத்தின் மேம்பாட்டுக்குமான தொடர்புகள் குறித்துப் போதுமான உரையாடல் நிகழ்வதில்லை.
  • வருங்காலத்தில் அது நிகழுமானால், கட்சிகளுக்கும் சமூகத்துக்குமான வரையறுக்கப்பட்ட மேம்பாட்டு நகர்வுக்கான பாதைகளைக் கண்டடைய முடியும். உதாரணமாக, 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி வெளியான அறிக்கைகளில் இடம்பெற்ற பட்டியல் சாதியினருக்கான வாக்குறுதிகளை மையப்படுத்தி யோசிக்கலாம்.
  • கடந்த காலத் தேர்தல் அறிக்கைகள்: கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களையொட்டி வெளியான அனைத்துக் கட்சிகளின் வாக்குறுதிகள் தேசிய அளவிலான கல்வி, போக்குவரத்து, வணிகம், தொழில்நுட்பம், பெண்கள், சிறுவர்கள், மருத்துவம், விவசாயம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு என்கிற பொது விஷயங்களில் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
  • இவை அனைத்திலும் கவனம்செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, வெளிப்பார்வைக்குப் ‘பொது’ என்பதாகத் தோற்றமளிப்பவை, பல நேரம் பட்டியல் சாதியினரின் மேம்பாட்டுக்குப் போதுமான நியாயம் சேர்க்க இயலாதவையாக இருக்கின்றன. உதாரணமாக, ‘சர்வதேசத் தொழில் வளர்ச்சியில் கவனம் குவித்து, அதற்கேற்ப உள்நாட்டுத் தொழில் வளத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்னும் வாக்குறுதியை எடுத்துக்கொள்வோம்.
  • இது அனைவரையும் கவனத்தில் கொண்ட ‘பொது’ வாக்குறுதிபோலத் தெரியும். அந்த வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் அதை நிறைவேற்றி தொழில் வளத்தை உண்மையிலேயே அதிகரித்திருக்கலாம். ஆனால், சாதியின் பெயரால் சிறுதொழில் செய்வதற்குக்கூட வாய்ப்புகளும் வசதிகளும் மறுக்கப்பட்டவர்களுக்கு அந்தப் ‘பொது’ வாக்குறுதிகள் நன்மை பயத்திருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.
  • செல்வந்தருக்கும் ஏழைக்கும் ஒரே அளவிலான வாய்ப்பை உருவாக்கித் தருவது சமத்துவமாக இருக்கலாம். சமூகநீதியாக இருக்க முடியாது. கடந்த காலங்களில் ‘பொதுத் திட்டம்’ சார்ந்த வாக்குறுதிகளில் சமத்துவம் அதிகமாகவும் சமூகநீதி மிகச் சொற்பமாகவுமே இடம்பெற்றுவந்திருக்கின்றன.
  • வாக்குறுதிகளும் தனிக் கவனமும்: கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களின்போது வெளியான அறிக்கைகளில், பட்டியல் சாதியினர் தொடர்பாக இடம்பெற்ற வாக்குறுதிகள் சராசரியாக 1%க்கும் குறைவானவையே ஆகும். அவையும்கூடப் பட்டியல் சாதியினரின் கல்வியை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன.
  • முதல் தலைமுறையிலிருந்து படிக்க வருகிறவர்களுக்கு அந்த வாக்குறுதி நம்பிக்கையைத் தரலாம். ஆனால், பெரும்பாலும் படித்துவிட்டு வேலைக்காகவும் தொழில் செய்யவும் காத்திருப்பவர்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் அவை இல்லை.
  • வேலை, தொழில் வாய்ப்புகள் என்று வருகிறபோது பட்டியல் சாதியினருக்கென்று தனிக் கவனம் செலுத்த வேண்டியதற்கான அவசியம் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பட்டியல் சாதியினரின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 16.63%. இந்தக் காலங்களில் பட்டியல் சாதியினரின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அம்மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் இல்லை.
  • அதனால் அவர்களின் சமூக, பொருளாதார நிலை எதிர்பார்த்த அளவுக்கு மேம்படவில்லை என்கிறது 2018–19, 2019-20ஆம் ஆண்டுகளில் வெளியான பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் (National Commission for Scheduled Castes) ஆண்டறிக்கை.
  • பட்டியல் சாதியினருக்கும் பிறருக்கும் இடையிலான மனித வளர்ச்சிக் குறியீடுகளுக்கு (Human Development Index) இடையே பெரிய இடைவெளி உள்ளது எனக் குறிப்பிடும் அவ்வறிக்கை, மற்ற பொதுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் செலவினங்களையும் ஆய்வுசெய்து, பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது, பட்டியல் சாதியினரின் நலனுடன் நேரடியாக இணைக்கப்படாத பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
  • பல மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டிலும் செலவினத்திலும் இதே நிலைதான். பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 1 முதல் 4% வரையில்தான் அவர்களுக்கென்று செலவழிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டிருக்கிறது.
  • பட்டியல் சாதியினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கப்படாததைச் சுட்டிக்காட்டும் ஆணையத்தின் அறிக்கை, பட்டியல் சாதியினருக்கான துணைத் திட்டங்கள் ஆண்டுத் திட்டம், ஐந்தாண்டுத் திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்கிற ஆலோசனையை அரசுக்கு வழங்கியிருக்கிறது.
  • இன்னொரு புறம், தேசிய அளவில் 2019-2020ஆம் ஆண்டுகளில் மட்டும் பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் 9.4% அதிகரித்துள்ளதாகவும், பட்டியல் சாதிப் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 15.5% அதிகரித்துள்ளதாகவும், தண்டனை விகிதமோ மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் தேசியக் குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் பட்டியல் சாதியினரின் மேம்பாட்டுக்காகத் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
  • பட்டியல் சாதியினருக்கு எதிரான சமூகத் தடைகளைப் பட்டியலிடும் ஆணையம், அவர்களின் மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் முக்கியமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. அவற்றில், பட்டியல் சாதி மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்காக வழங்கப்படும் உதவித்தொகையைப் பெறுவதற்குப் பெற்றோர்களின் வருமான உச்சவரம்பைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதிகப்படுத்த வேண்டும்; தொழில் தொடங்குவதற்கான அடிப்படை விதிகளில் தளர்வு வேண்டும்; தொழில்கடன் பெறுவதற்கு அரசே பிணையப் பாதுகாப்பு வழங்க வேண்டும்; தொழில் வளர்ச்சிக்காகச் சிறப்புப் பொருளாதார மண்டல (Special Economic Zone) கருத்தின் அடிப்படையில் பெருநிறுவனங்களுக்கு நிலம் வழங்கப்படுவதைப் போலப் பட்டியல் சாதியினர் தொழில் தொடங்கவும் நிலம் வழங்க வேண்டும்; சேவை வரியில் இருந்து விலக்குத் தர வேண்டும்; தொழில் முனைவு, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பட்டியல் சாதியினருக்கென்று கூடுதல் வாய்ப்புகளை வழங்கி, அவற்றை முழுமையாகப் பட்டியல் சாதியினர் பயன்கொள்வதற்கான சூழலை அரசு தொடர்ந்து கண்காணித்துவர வேண்டும் என்பவை முக்கியமானவை.
  • முக்கியக் கோரிக்கைகள்: ஆணையத்தின் ஆலோசனைகளைத் தவிர, பட்டியல் சாதியினர் மேம்பாடு சார்ந்து இயங்கக்கூடிய பல்வேறு பிராந்திய அமைப்புகள் - பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பது; அரசின் டெண்டர்கள், வணிக வளாகங்கள், வழக்கறிஞர் நியமனங்கள், பதவி உயர்வு ஆகியவற்றில் இடஒதுக்கீடு; காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல்; உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைக் களைதல்; கழிவுநீர்க் குழி மரணங்கள் / ஆணவக்கொலைகளைத் தடுக்கக் கூடுதல் கவனம் செலுத்துதல்; தனி நிதிநிலை அறிக்கை; தனி வங்கிகள் உள்ளிட்டவற்றுக்குக் கோரிக்கை விடுக்கின்றன.
  • தொழில் செய்வதில் இருக்கும் உள்ளூர் தடைகளைக் களைந்து சந்தையில் கிடைக்கும் உற்பத்திப் பொருளில் கணிசமான அளவு பட்டியல் சாதியினரின் தயாரிப்புகள் இருப்பதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் செய்வதற்குத் தற்போது ஒதுக்கப்பட்டு வருகின்ற நிதியை முழுமையாகச் செலவழித்தாலே போதும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
  • இவற்றைக் கவனத்தில் கொண்டு தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, ஆட்சியாளர்களால் அவை நிறைவேற்றப்படுமானால், பட்டியல் சாதியினரின் வாழ்க்கைத்தரம் நிச்சயம் மேம்படும். தேவையின் அளவைப் பொறுத்தே வாய்ப்புகளும் பங்கீடுகளும் வழங்கப்பட வேண்டும். அதுவே தேசத்தின் ஒருமித்த வளர்ச்சிக்குப் பயனளிக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்