TNPSC Thervupettagam

பண மசோதாவும் அதன் வகைமைகளும்

July 31 , 2024 121 days 132 0
  • மத்திய அரசு, சர்ச்​சைக்​குரிய மசோதாக்​களைப் பண மசோதா (Money Bill) வழிமுறையின் மூலம் சட்டமாக நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை, உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வின் விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புதல் அளித்​திருக்கிறார் தலைமை நீதிபதி டி.ஒய்​.சந்​திரசூட். இந்தப் பின்னணியில், பண மசோதா குறித்துத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

பண மசோதா:

  • நிதி விவகாரங்​களைக் கையாளும் சில வகை மசோதாக்​களைப் பண மசோதாக்கள் என்றும் நிதி மசோதாக்கள் என்றும் அரசமைப்புச் சட்டம் வரையறுக்​கிறது. அரசமைப்புச் சட்டத்தில் (சட்டக் கூறு 110 (1) (ஏ) முதல் (எஃப்) வரை, குறிப்​பிட்ட ஆறு விஷயங்​களில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை தொடர்பான ஷரத்துகளை ‘மட்டுமே’ உள்ளடக்கிய மசோதா என்று பண மசோதா வரையறுக்​கப்​பட்டுள்ளது.

அவை:

  • வரிவிதிப்பு, அரசாங்கம் கடன் வாங்குதல், ஒருங்​கிணைந்த நிதி அல்லது எதிர்​பாராத செலவினங்​களுக்கானவை - அத்தகைய நிதியிலிருந்து பணம் செலுத்​துதல் / பணம் எடுத்தல், ஒருங்​கிணைந்த நிதியிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்தல், ஒருங்​கிணைந்த நிதியின் மீது சுமத்​தப்​படும் செலவுகள், ஒருங்​கிணைந்த நிதி அல்லது பொதுக் கணக்கு அல்லது மத்திய அல்லது மாநிலங்​களின் கணக்குகளைத் தணிக்​கைக்கு உள்படுத்​துதல் ஆகியவற்றுடன் தொடர்​புடையவை.
  • கூறு 110 (1) உள்கூறு (ஜி)இன்படி இந்த ஆறு விஷயங்​களுடன் தற்செயலாக நேரும் எந்த ஒரு விஷயத்​தையும் பண மசோதாவாக வகைப்​படுத்​தலாம். பண மசோதாவின் எடுத்து​க்கா​ட்டுகளில் பட்ஜெட்டின்போது நிறைவேற்​றப்​படும் நிதிச் சட்டம் - ஒதுக்​கீட்டுச் சட்டம் ஆகியவை அடங்கும். அவை முறையே வரிவிதிப்​பையும் ஒருங்​கிணைந்த நிதியிலிருந்து மேற்கொள்​ளப்​படும் செலவுகளையும் மட்டுமே முதன்​மையாகக் கையாளுகின்றன.
  • அரசமைப்பின் 117ஆவது கூறு இரண்டு வெவ்வேறு வகையான நிதி மசோதாக்களை அளிக்​கிறது. கூறு 110 (1) (ஏ) முதல் (எஃப்) வரை குறிப்​பிடப்​பட்டுள்ள ஆறு விஷயங்​களில் ஏதேனும் ஒன்றும் அவற்றோடு வேறு ஏதேனும் விஷயத்​தையும் உள்ளடக்​கியவை ‘நிதி மசோதா - வகை I’ எனப்படும். அந்த ஆறு விஷயங்​களில் எதையும் கொண்டிராமல், ஆனால் ஒருங்​கிணைந்த நிதியிலிருந்து செலவினங்களை உள்ளடக்கும் மசோதாக்கள் ‘நிதி மசோதா - வகை II’ எனப்படும்.

செயல்முறை:

  • அரசமைப்புக் கூறு 109இன்படி, பண மசோதா மக்களவையில் மட்டுமே அறிமுகப்​படுத்​தப்பட வேண்டும். இது மக்களவையில் நிறைவேற்​றப்பட்ட பிறகு, அத்தகைய மசோதா குறித்து மாநிலங்களவை தனது பரிந்துரைகளை வழங்க 14 நாள்கள் மட்டுமே உள்ளன.
  • அந்தப் பரிந்துரைகள் மக்களவையால் ஏற்றுக்​கொள்​ளப்​படலாம் அல்லது ஏற்றுக்​கொள்​ளப்​படாமல் போகலாம். பண மசோதாக்கள் நாட்டின் நிர்வாகத்துக்கு அவசியமான நிதி விஷயங்களை மட்டுமே கையாள்​கின்றன. எனவே, ஆளும் அரசு பெரும்​பான்​மையைக் கொண்டிருக்கும் மக்களவையின் ஒப்புதல் மட்டுமே தேவைப்​படும் இந்தச் சிறப்பு நடைமுறைக்கு அரசமைப்பு வழிவகை செய்துள்ளது.
  • இருப்​பினும், பண மசோதாவின் வரையறையின் முக்கியமானது ‘மட்டும்’ என்ற சொல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களவைத் தலைவர்தான் ஒரு மசோதாவைப் பண மசோதாவாகச் சான்றளிக்​கிறார். நிதி மசோதா - வகை I, II ஆகியவற்றுக்கு இந்தச் சிறப்பு நடைமுறை கிடையாது.

சட்டமும் சர்ச்​சைகளும்:

  • 2016இல் நிறைவேற்​றப்பட்ட ஆதார் சட்டம் 2016 குறித்த ஆய்வின்போது மக்களவைத் தலைவர் ஒரு மசோதாவை ‘பண மசோதா’வாகச் சான்றளிக்கும் நடைமுறை நீதித் துறையின் மறுஆய்​வுக்கு உள்ளானது. இந்தச் சட்டத்தின் பிரிவு 7, மத்திய அல்லது மாநில அரசு ஒரு தனிநபருக்கு மானியம், பலன் அல்லது சேவையை வழங்குவதற்கு (ஒருங்​கிணைந்த நிதியிலிருந்து இதற்குச் செலவுசெய்​யப்​படும் நிலையில்), அவரது ஆதார் அங்கீகாரத்தை ஒரு நிபந்​தனையாகக் கோரலாம் என்று கூறுகிறது.
  • ஒருங்​கிணைந்த நிதியிலிருந்து செலவு செய்வது இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கமாகக் கூறப்​பட்டு, மற்ற அனைத்து விதிகளும் தற்செயலானவையாக இருப்​பதால், இந்தச் சட்டம் ‘பண மசோதா’வாக நிறைவேற்​றப்​பட்டது. இது ஒரு விவாதத்து​க்​குரிய வகைப்​பாடாக இருந்​தபோதிலும், உச்ச நீதிமன்றம் இதை 4:1 என்ற பெரும்​பான்​மையுடன் உறுதிசெய்தது.
  • அந்த வழக்கில் தற்போதைய தலைமை நீதிபதி மட்டுமே ஆதார் சட்டம் ‘பண மசோதா’வின் வரையறையைப் பூர்த்​திசெய்​யவில்லை என்று மாறுபட்ட தீர்ப்பைத் தந்திருந்​தார். தேசியப் பசுமைத் தீர்ப்​பாயம் போன்ற தீர்ப்​பாயங்களை மறுசீரமைப்​பதற்கான பல்வேறு சட்டங்​களில் திருத்​தங்​களைப் பண மசோதாவின் ஒரு பகுதியாக நிறைவேற்றியதில் நிதிச் சட்டம், 2017 இன்னும் சர்ச்​சைக்​குரியதாக ஆனது.
  • ‘ரோஜர் மேத்யூ எதிர் சவுத் இந்தியன் வங்கி’ (2019) வழக்கில் இந்தத் திருத்​தங்கள் ரத்து செய்யப்​பட்டன. அதில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆதார் வழக்குத் தீர்ப்புப் பண மசோதாவின் வரையறையில் ‘மட்டும்’ என்ற வார்த்​தையின் விளைவைப் பெரிதாக விவாதிக்​கவில்லை என்று கூறியது. எனவே, இந்த விவகாரத்தைக் கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் பரிசீலனைக்கு அனுப்​பியது.
  • பண மசோதாவின் வரையறை குறித்து உறுதியான தீர்ப்பை அளிக்க ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்​கப்பட வேண்டும். மக்களவைத் தலைவர்​களும் ஒரு மசோதாவைப் பண மசோதாவாகச் சான்றளிக்கும் முன் அதன் வரையறையின் ஆன்மாவைத் தக்கவைக்கத் தவறிவிடக் கூடாது. தவறான சான்றளித்தல் மூலம் மாநிலங்​களவையின் உரிமைகளை முடக்கக்​ கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்