TNPSC Thervupettagam

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள்: சட்டத்தின் பாதுகாப்புக் கவசம்

August 2 , 2021 1095 days 560 0
  • ஆண், பெண் என்னும் பாகுபாடின்மை மற்றும் சமத்துவம் ஆகிய இரு கொள்கைகளும் மனித உரிமையைப் பாதுகாப்பதற்கான எந்தவோர் அமைப்பிற்கும் இன்றியமையாதனவாகும். இவ்விரு கொள்கைகளும் உலக அளவில் அனேகமாக எல்லா நாடுகளிலும் அரசியல் சட்டங்களின் மூலமாகவும் மனித உரிமை ஒப்பந்தங்களின் மூலமாகவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. 
  • பாகுபாடின்மை, சமவாய்ப்பு, சமமாக நடத்தப்படுதல் ஆகியவை பணிபுரிபவர் அனைவரின் உரிமைகளாகும். இக்கொள்கை நமது நாட்டிலும் மத்திய, மாநில அரசுகளினாலும் சமூக அமைப்புகளினாலும் முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதை எவ்வித ஐயமுமின்றி உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும், பணியிடப் பாலியல் துன்புறுத்தல் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கத்துடனும் மத்திய அரசின் “பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இயற்றப்பட்ட சட்டம்தான் “பணியிடத்தில் பெண்களைத் துன்புறுத்தல் (தடுப்பு, தடை) சட்டம் 2013 (போஷ் சட்டம்).
  • இச்சட்டத்தின விதிகளையும், விதிமுறைகளையும், பணியிடங்களில் பணியில் அமர்த்துபவர்கள் தவறாமல் செயல்படுத்த வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் பத்துக்கு மேல் பணியாளர்களைப் பணியிலமர்த்தி செயல்படும் நிறுவனங்கள், தாங்களே இச்சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பத்திற்குக் கீழான பணியாளர்களோடு செயல்புரியும் நிறுவனங்களின் சட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான எல்லா பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தாங்களே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று சட்டத்தில் வகுக்கப்பட்டிருக்கிறது.
  • ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் கீழ் வரும் (ஆர்கனைஸ்ட் ஸெக்டார்) நிறுவனங்களிலும் பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களிலும் மற்றும் அரசாங்கத் துறைகளிலும் பணியாளர்கள் நிர்வாகத்தின் பணிவிதிகளுக்குட்பட்டுப் பணிபுரிபுரிகின்றனர்.
  • அந்த நிறுவனங்களிலெல்லாம் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பெண் பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். இத்தகைய நிலையில் போஷ் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அச்சட்டத்தின் விவரங்களும் நிர்வாகத்தின் பொறுப்புகளும் ஆண், பெண் இரு பணியாளர் மத்தியிலும் முழுவதுமாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டியவை. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்  எண்ணத்தோடுஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்கள் சம்பந்தமான பாஷ் சட்டத்தின் முக்கிய விவரங்கள் பின்வரும் பகுதியில்: 

பணியிடத்தில் பெண்களைத் துன்புறுத்தல் (தடுப்பு, தடை) சட்டம் 2013 (போஷ் சட்டம்)

  • நடைமுறையில் வழக்கில் இருக்கும் ஆண், பெண், பணியிடம், பணிபுரிபவர்பாலியல் என்பதான சொற்களுக்கு பொதுவாக மக்கள் சமுதாயமும், குறிப்பாக பணியாளர் சமுதாயமும் கொடுத்து வந்துள்ள வரையறைகளை விரிவுபடுத்தி பெண் பணியாளர்களின் நலனுக்காகவும் மற்றும் பாதுகாப்பிற்காகவும் விரிவான வரையறைகளைப் பட்டியலிட்டுள்ளது.
  • மேலும் பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் பாலியல் பிரச்னைகள் நடைபெறாமல் தவிர்ப்பதற்கும் நிர்வாகம் மேற்காள்ள வேண்டிய நடவடிக்கைளை விரிவாக விளக்கி இருக்கிறது.
  • இவை தவிர, பாலியல் செய்கைகளால் பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்களின் புகார்களை முறையாகக் கையாள வேண்டிய விதிமுறைகளையும் விரிவாகச் சொல்லியுள்ளது.
  • இந்த சட்டத்தின் முக்கியமான அம்சங்களை, அனைத்து நிறுவனங்களும், அவற்றில் பணிபுரியும் ஆண், பெண் இருபாலர் மட்டுமல்லாது பரவலாக நம் நாட்டு மக்களனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
  • மேற்கூறிய சட்டத்தில் கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு விளக்கங்கள் பின்வருமாறு வழங்கப்பட்டிருக்கின்றன. 

பாலியல் துன்புறுத்தல்

  • பின்வரும் செய்கைகளில்ஒன்றையோ, அதற்கு மேற்பட்டதையோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு ஆண் பணியாளர் செய்வது:
    • உடல் சார்ந்த தொடர்பு மற்றும் செயல்பாடுகள்
    • பாலியல் தேவைகளை நிறைவேற்றக் கோருவது
    • பாலியலைக் குறிக்கும் வார்த்தைகளைப் பேசுவது
    • ஆபாசப் படங்களைக் காட்டுவது
    • வேறு ஏதாவது வகையில், உடல் மூலமாகவோ, வார்த்தைகள் அல்லது சைகைகள் மூலமாகவோ பாலியல் தன்மை கொண்ட செய்கைகளில் ஈடுபடுவது.

பணியிடம்

  • நிர்வாகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அகில இந்திய அளவில் அதன் கிளைகள்
  • பணியாளர் அலுவலகப் பணியில் அதன் தொடர்பாகச் செல்லும் இடங்கள்
  • அலுவலகத்தால் வழங்கப்பட்ட அல்லது ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் 

பணியாளர்

  • நிரந்தரப் பணியாளர்
  • தற்காலிகப் பணியாளர்
  • தினக்கூலிக்கு வேலை செய்பவர்
  • பணி பயில்வதற்காக நியமிக்கப்பட்டவர்

பாதிக்கப்பட்ட பெண்

  • பாதிக்கப்பட்ட பெண் பணியாளர் (எந்த வயதினராயினும்)
  • பணி புரிபவரோ, பணியில் இல்லாதவரோ
  • பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம்சாட்டுபவர்
  • பெண் பணியாளர்களின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், மேலே குறிப்பிட்ட முக்கியமான சொற்களுக்கு விரிவான வரையறைகளைச் சட்டத்தில் உறுதி செய்த அரசு, பணியிடங்களில் பெண் பணியாளர்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழாமல் தடுப்பதற்காகவும், நிர்வாகங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் சட்டத்தில் பட்டியலிட்டிருக்கிறது. 
    • பணியிடத்தில் அலுவலகத்திற்குத் தொடர்பற்ற மூன்றாம் நபர் வருவதைத் தடுப்பது.
    • பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவது
    • பாலியல் துன்புறுத்தலுக்கான தன்டனைகளின் விவரங்களைப் பணியாளர் காணும் வகையில் சுவரொட்டிகளையோ விளம்பரப் பலகையோ அலுவலக வளாகங்களில் வைப்பது
    • அலுவலகப் புகார்க் குழு பற்றியும் (புகார்க் குழு பற்றிய விவரங்கள் இந்தக் கட்டுரையின் பின்பகுதியில் அளிக்கப்பட்டிருக்கின்றன) நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய முறைகள் பற்றியும் அனைவரும் பார்க்கும்படி எழுதி வைக்க வேண்டும்
    • சட்டத்தின் நோக்கம் பற்றிய விழிப்புணர்வு பணியாளர்களிடம் ஏற்படும் வகையில் அவ்வப்போது பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும்
    • பாலியல் துன்புறுத்தல், பணிவிதிகளின் கீழ் ஒரு தவறான நடவடிக்கையாகக் கருதப்பட்டு அதற்கான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் புகார்க் குழு உருவாக்கம்

  • பத்துப் பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனமும் நிர்வாகத்தின் அங்கமாக “பாலியல் புகார்க் குழு என்னும் பெயரில் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அந்தக் குழுவில் தலைமை நிர்வாகியால் நியமிக்கப்பட்ட கீழ்க்கண்டவர்கள் உறுப்பினர்களாகச் செயல்படுவர்.
  • 1. நிர்வாகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்பதவி வகிக்கும் ஒரு பணியாளர்.
  • 2. பெண்கள் முன்னேற்றத்தில் ஈடுபட்டவரோ அல்லது சமூகநலனில் அக்கறை கொண்டவரோ அல்லது சட்டவிவரங்களை அறிந்த இரு பெண் பணியாளர்கள். 
  • 3. பெண் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அரசுசாரா அமைப்புகளிலிருந்தோ சங்கங்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது பாலியல் கொடுமைகளைப் பற்றிய விவரங்களை நன்கறிந்த ஒருவர்.
  • மேற்கூறியபடி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் குறைந்தது ஜம்பது சதவிகிதமாவது பெண்களாக இருத்தல் கட்டாயம்.

பாலியல் தொல்லை பற்றிய புகார்

  • பணியிடத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு வேதனைக்குள்ளான பெண் அத்துன்புறுத்தல் குறித்த புகாரை நிர்வாகத்தின் புகார்க் குழுவிற்கு சம்பவம் நடந்த மூன்று மாதத்திற்குள் அனுப்ப வேண்டும்.
  • புகார்க் குழு, முறையான விசாரணையைத் தொடங்குமுன், புகாரை அளித்த பெண் குற்றம்சாட்டப்பட்டவரோடு பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசமாகப் போக விருப்பம் தெரிவித்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கிடைக்குமாயின், புகாரக்குழு, தீர்வின் விவரங்களை விளக்கும் ஒரு ஒப்பந்த அறிக்கை தயாரித்து நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 
  • நிர்வாகம் புகார்க் குழுவின் பரிந்துரையை ஏற்று அதன்படி புகாரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். புகார்க்குழு ஒப்பந்த அறிக்கையின் நகல்களைப் புகாரைப் பதிவுசெய்த பெண்ணிற்கும் குற்றம்சாட்டப்பட்ட ஆண் பணியாளருக்கும் அளித்திடல் அவசியம்.
  • மேற்கண்டவாறு தீர்வு ஏற்படுமாயின் புகார் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும். 

முறையான விசாரணை-விவரங்கள்

  • பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற்றவுடன் குற்றம்சாட்டப்பட்ட பணியாளரைக் கட்டுப்படுத்தும் நிர்வாகப் பணி விதிகளுக்கு உட்பட்டு விசாரணையை நடத்த வேண்டும்.
  • நடந்ததை ஆவணப்படுத்தும் வகையில் புகார் அளித்தவரிடம் நேர்காணல் நடத்தப்பட வேண்டும். 
  • குற்றம்சாட்டப்பட்டவருக்குக் குற்றச்சாட்டுகள் முழுமையாகக் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • தன் தரப்பை எடுத்துச்சொல்லும் வாய்ப்பு குற்றம்சாட்டப்பட்டவருக்கு அளிக்கப்பட வேண்டும்.
  • புகார் சம்பந்தப்பட்ட விவரங்கள், வாக்குமூலங்கள், சாட்சிகள் அளித்த விவரங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் முதலியவைகளில் கருத்து வேறுபாடுகள் உள்ளனவா என்று ஆராய வேண்டும்.
  • விசாரணையின்போது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புகார் அளித்தவர், குற்றம்சாட்டப்பட்டவர் ஆகிய இரு தரப்பிற்கும் தெரிவிப்பதுடன் அவற்றிற்கு பதிலளிக்கும் வாய்ப்பினையும் அவர்களுக்கு நல்க வேண்டும். 
  • விசாரணை முடிந்த பத்து நாள்களுக்குள் புகார்க் குழு தனது முடிவுகள் குறித்த அறிக்கையை நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும். 
  • புகார்க் குழுவின் பரிந்துரை கீழ்கண்ட மூன்று விதங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்:
    • குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையெனில் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என புகார்க் குழு நிர்வாகத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்
    • குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பணி விதிகளின்படி தவறான நடத்தைக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுக்கும்படி புகார்க் குழு நிர்வாகத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். 
    • குற்றம்சாட்டப்பட்டவர் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய்யானது என்று நிரூபணமானால் புகாரை அளித்தவர் பணி விதிமுறைகளின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று புகார்க் குழு நிர்வாகத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்.
  • புகார்க் குழு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி நிர்வாகத்திற்குப் பரிந்துரை மட்டுமே செய்யும். பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுப்பதோ அல்லது செய்யப்பட்ட பரிந்துரைகளை மாற்றுவதையோ நிர்வாகம் தீர்மானிக்கலாம். ஆயின் பரிந்துரைகள்மேல் நிர்வாகம்குழுவிடமிருந்து அறிக்கை பெற்ற 60 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் பாலியல் தொல்லைப் பிரச்னைகளுக்குத்  தீர்வு காண சட்டத்தில் வழிவகைகள் இருக்கின்றன. முறைப்படி கையாண்டு குற்றமிழைப்பவர்களைத் தண்டிப்பதில்தான் இருக்கிறது சட்டத்தின் வெற்றி.

நன்றி: தினமணி (02 – 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்