- பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுப் பிரிவுகளில் 117 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்த முறை இந்தியா சார்பில் குறிப்பிட்ட விளையாட்டுப் பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடகளம்:
- பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்ற பிறகு, டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளம் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ஒரே வீரர் நீரஜ் சோப்ரா. 26 வயதான நீரஜ் மீது இந்த முறையும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, 2022 உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2023இல் தங்கம்; 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் என முக்கியப் போட்டிகளில் பதக்கங்களை வென்றிருக்கிறார் இவர்.
- தலைசிறந்த ஈட்டி எறியும் வீரர்களில் பலரும் இந்த ஆண்டு 87 - 89 மீ. வரையே ஈட்டி எறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் தோகாவில் இந்த ஆண்டு நடைபெற்ற டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா 88.36 மீ. வரை ஈட்டி எறிந்தது சிறந்த பதிவாக உள்ளது. இது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நீரஜ் சோப்ராவுக்கு அதிகப்படுத்தியுள்ளது.
பளுதூக்குதல்:
- டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் சாய்கோம் மீராபாய் சானு. பளுதூக்குதலில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெள்ளிப் பதக்கமும்கூட. 26 வயதான மீரா, இந்த முறையும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
- ஏனெனில் ‘ஸ்னாட்ச்’ மற்றும் ‘க்ளீன் அண்ட் ஜெர்க்’ வாய்ப்புகளில் 200 கிலோவுக்கு மேல் தூக்கினால் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். ஒலிம்பிக்கில் மீராவோடு பலப்பரீட்சை நடத்தும் 12 வீராங்கனைகளில் ஒருவர் மட்டுமே இந்த ஆண்டு 200 கிலோவுக்கு மேற்பட்ட எடையைத் தூக்கியவராக இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 202 கிலோ எடையை மீரா தூக்கினார். அதைவிட இன்னும் சற்றுக் கூடுதலாகத் தூக்கினால் பதக்கத்தை மீராவல் சாத்தியப்படுத்த முடியும்.
பாட்மிண்டன்:
- பாட்மிண்டன் தனி நபர் பிரிவில் ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் என இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர் பி.வி.சிந்து. இந்த முறையும் பதக்கம் பெற்று ஹாட்ரிக் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024இல் மலேசியன் மாஸ்டர்ஸ், சிங்கப்பூர் ஓபன் போன்ற பாட்மிண்டன் தொடர்களைச் சிந்துவால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை.
- என்றாலும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப், ஆசிய அணி சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் பதக்கங்களை குவித்திருக்கிறார். எனவே அவர் மீதான பதக்க நம்பிக்கையும் நீடிக்கிறது. ஆடவர்இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஆகியோர் இந்த முறை சாதிக்கக்கூடும்.
ஹாக்கி:
- டோக்கியோ ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்று ஆடவர் அணி சாதித்தது. ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதன் மூலம் பாரிஸ் செல்லத் தகுதிபெற்றது.
- அண்மைக் காலமாக ஆசியக் கோப்பை, புரோ லீக்,ஆசிய சாம்பியன்ஷிப் போன்றவற்றில் பதக்கங்களை ஆடவர் அணி வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவது முக்கியம். சுற்றுப் போட்டிகளில் நியூசிலாந்து, அர்ஜெண்டினா, அயர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தியாக வேண்டும். வலுவான ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அணிகளும் இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் உள்ளன. எனவே முதல் 3 போட்டிகள் இந்தியாவுக்கு முக்கியமானவை.
குத்துச்சண்டை:
- டோக்கியோ ஒலிம்பிக்கில் 75 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்று ஜொலித்தார் லோவ்லினா போர்கோஹைன். இந்த முறையும் 75 கிலோ எடைப் பிரிவில்தான் பங்கேற்க உள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் பாரிஸ் செல்லத் தகுதிபெற்றார். உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றதன் மூலம் உற்றுநோக்கப்படுகிறார்.
- தற்போது குத்துச்சண்டையில் அவருடைய வேகம் குறைந்திருந்தாலும், முழுத் திறனையும் வெளிப்படுத்துவதில் முன்னேறியிருக்கிறார். ஒலிம்பிக்கில் வாய்ப்புகள் சரியாக அமைந்தால், பதக்கம் உறுதியாகும். இவரைப் போலவே நிகத் ஜரீன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர், ஏற்கெனவே இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றவர். முதல் முறையாக ஒலிம்பிக்கில் அடியெடுத்து வைக்கிறார்.
மல்யுத்தம்:
- 2012, 2016, 2020 எனத் தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் மல்யுத்தத்தில் இந்தியா பதக்கத்தை உறுதிசெய்தது. இந்த முறை ஓர் ஆடவர், 5 மகளிர் என 6 பேர் மல்யுத்தத்துக்குத் தகுதிபெற்றுள்ளனர். ஏற்கெனவே பதக்கம் வென்றவர்கள் இந்த முறை மல்யுத்த அணியில் இல்லை. எனவே இந்த முறை வினேஷ் போகத் மீது மட்டுமே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- 2024இல் மாட்ரிட்டில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் ஸ்பெயின் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் வெற்றி வாகை சூடினார். இந்த வெற்றியைத் தவிர சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வினேஷின் செயல்பாடுகள் அமையவில்லை. என்றாலும் மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்கக் கனவை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில் அமன் ஷெராவத் மீதும் பதக்க எதிர்பார்ப்பு உள்ளது.
துப்பாக்கிச் சுடுதல்:
- தடகளத்துக்குப் பிறகு இந்தியா சார்பில் அதிக வீரர், வீராங்கனைகள் (21 பேர்) பங்கேற்பது துப்பாக்கிச் சுடுதலில்தான். இதில் மகளிர் பிரிவில் களமிறங்கும் சிஃப்ட் கவுர் சாம்ரா மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2022 ஆசிய விளையாட்டுப் போட்டி 50 மீ. ஏர் ரைபிள் பிரிவில் தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்றவர். முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் சிஃப்ட், கடினமான வீராங்கனைகள் கொண்ட பிரிவில்தான் இடம்பெற்றுள்ளார்.
- என்றாலும் தேசிய அளவிலும் உலக அளவிலும் குறிப்பிட்ட சாதனைகளை சிஃப்ட் நிகழ்த்தியுள்ளதால், அவர் சாதிக்க வாய்ப்புள்ளது. மகளிர் பிரிவில் இளவேனில் வாலறிவன், மனு பாகர் ஆகியோரும் சாதிக்கும் கனவில் உள்ளனர். ஆடவர் டிராப் பிரிவில் தமிழ்நாட்டு வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் ஆச்சரியப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
கோல்ஃப்:
- ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கோல்ஃப் போட்டியில் பங்கேற்றவர்களைப் பார்க்கும் பாக்கியம் கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில்தான் கிடைத்தது. அந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் கோல்ஃப் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்காவிட்டாலும் அதிதி அசோக்கின் பெயர் பிரபலமானது. ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் 41ஆவது இடத்தையே அதிதியால் பிடிக்க முடிந்தது.
- ஆனால், டோக்கியோவில் 4ஆவது இடம்பிடித்து ஆச்சரியமூட்டினார். அவர் பாரிஸ் ஒலிம்பிக்குக்கும் தகுதி பெற்றுள்ளார். அண்மைக் காலத்தில் அவர் தரவரிசைப் பட்டியலில் 39ஆவது இடம்பிடித்தது சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த முறை பழைய தவறுகளைச் சரிசெய்து, பதக்கம் வென்று காட்டுவார் என்று நம்பலாம்.
- இவை மட்டுமல்ல டேபிள் டென்னிஸ், வில்வித்தை, டென்னிஸ் பிரிவுகளிலும் ஆச்சரியமூட்டும் வீரர், வீராங்கனைகள் உள்ளனர். அவர்களின் திட்டம் சரியாக அமைந்தால் மேலும் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 07 – 2024)