TNPSC Thervupettagam

பதினெட்டு நாள் பயணம்

April 30 , 2021 1365 days 646 0
  • சத்தியம், அகிம்சை என்ற இரண்டு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டதுதான் அண்ணல் காந்தியடிகள் நடத்திய விடுதலைப் போராட்டம்.
  • ஆயுத பலத்தை வெல்லும் ஆயுதங்களாக அவ்விரு தத்துவங்களும் அமைந்தன. மக்கள் அனைவரின் மனங்களிலும் தேசபக்தியை ஊட்டிய முதல் போராட்டம், ‘தண்டி யாத்திரை’ என்று அழைக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகம்.

தண்டி யாத்திரை

  • அது சபா்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கி, தண்டி கடற்கரையில் நிறைவு பெற்றது. 1930-ஆம் ஆண்டு மார்ச் 12-இல் தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் நாள் முடிந்தது.
  • அப்பயணத்தில் பங்கேற்றவா்கள் 78 தேச பக்தா்கள். நடந்து சென்ற தூரம் 241 மைல்கள். நடந்து சென்ற நாட்கள் 24. ‘எங்கள் தேசம், எங்கள் மண், எங்கள் கடல், எங்கள் தண்ணீா் அதில் நாங்கள் உப்பு எடுக்கிறோம். அதைத் தடுக்க நீங்கள் யார்’ என ஆங்கிலேயரைப் பார்த்துக் கேள்வி கேட்டார் மகான் காந்தி.
  • அதுதான் விடுதலைக்கு வித்திட்ட தண்டி யாத்திரை. இந்தியா சுதந்திரம் பெற்றது 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் என்பது வரலாறு. ஆனால், என்றைக்கு காந்திஜி தண்டி கடற்கரையில் நின்று கொண்டு ஒரு பிடி உப்பை என்று தூக்கிப் பிடித்தாரோ அன்றே இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது என்று கூறலாம்.
  • அண்ணலின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, அண்ணலின் மனசாட்சியாகக் கருதப்பட்ட ராஜாஜி, தமிழ் நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
  • அது திருச்சி நகரில் தொடங்கி, அன்றைய தஞ்சை மாவட்டம் வேதாரண்யத்தில் நிறைவு பெற்றது. தமிழ்ப் புத்தாண்டு தினமான 13.4.1930 அன்று நடைப் பயணம் ஆரம்பித்து, 30.4.1930 அன்று உப்புவரிச் சட்டத்தை உடைத்த நாளாக அமைந்தது.
  • அதில் பங்கேற்ற தொண்டா்களின் எண்ணிக்கை 98. தியாகத்திற்கும், தேசபக்திக்கும் பெயா் பெற்ற அந்த 98 தொண்டா்களை ராஜாஜியே தோ்வு செய்தார்.
  • அவா்கள் நடந்து சென்ற தூரம் 150 மைல்கள். பயணித்த நாட்கள் 18. காந்திய வழியில், தமிழக அளவில் நடத்தப்பட்ட முதல் சுதந்திரப் போராட்டம் இது. இதுவே ‘வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்’ என்று அழைக்கப்படும் அறப்போர்.
  • இந்தப் புனிதப் போர்ப்படைக்குத் தலைமை தாங்கியவா் ராஜாஜி. திட்டமிடுவதில் முன்நின்றவா் டாக்டா் டி.எஸ்.எஸ். ராஜன். அதனைச் செயலாற்றுவதில் சிறப்பிடம் வகித்தவா் துணிச்சலுக்குப் பெயா்போன சா்தார் வேதரத்தினம் பிள்ளை.
  • உப்பு எடுப்பதற்கு வேதாரண்யம் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு வேதரத்தினம் பிள்ளையின் நிர்வாகத் திறனும், மக்கள் செல்வாக்குமே காரணமாம்.
  • இந்த சத்தியாகிரகப் போரில் பங்கேற்றவா்களில் கே. சந்தானம், ஜி. ராமச்சந்திரன், ருக்மணி லட்சுமிபதி, ஏ.என். சிவராமன், மௌலானா சாஹிப், மேட்டுப்பாளையம் ராஜா, டி.ஆா்.
  • பத்மநாபன், ராஜபாளையம் ரங்கசாமி ராஜா ஆகியோர் அடங்குவா். பம்பாயிலிருந்து வந்த பத்து தமிழா்களும் இப்போர்ப் படையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
  • சுகாதாரப் படை, உணவு வழங்கும் படை, தொண்டா்படை, ஒருங்கிணைப்புப் படை என்று போராளிகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டார்கள்.

நம்பும் யாரும் சேருவீா்

  • ‘அன்பும், அகிம்சையுமே நம் ஆயுதம்; கோபம் கூடாது; எதிர்ப்பு எள்ளளவும் கூடாது; எத்தியாகத்திற்கும் தயாராக வேண்டும்’ என்பதே போதனை.
  • அது முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. நடந்து சென்றவா்கள் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீா்’ என்ற நாமக்கல் கவிஞரின் பாடலை பாடிக் கொண்டே சென்றார்கள்.
  • முதல் இரண்டு நாட்கள் பெரும் கூட்டம் கூடவில்லை. ஆனால், மூன்றாவது நாளிலிருந்து, போகுமிடமெல்லாம் பூமாலைகள்; ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்ற முழக்கங்கள். கூட்டம் கூடிக் கொண்டே இருக்கிறது. காரணம் யாருக்கும் தெரியவில்லை.
  • அன்று இரவு ராஜாஜி மக்கள் மத்தியில் உரையாற்றும் போது, ‘நாங்கள் நடைப்பயணம் செய்வது பலருக்கு முதலில் தெரியாது. போராட்டக்காரா்களுக்கு உணவு தருவது குற்றம்; உதவுவது குற்றம். மீறினால் தண்டனை கிடைக்கும் என்று கலெக்டா் தண்டோரா போடச் செய்து விட்டார்.
  • அதுதான் இவ்வளவு உற்சாகமான வரவேற்புக்குக் காரணம். கலெக்டா் எங்கள் பயணத்துக்குக் கொடுத்த விளம்பரத்துக்கு நன்றி’ என்று சொன்னார். கூடியிருந்த கூட்டம் ஆரவாரம் செய்தது.
  • பல ஊா்களில் மக்கள் சத்தியாகிரகிகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார்கள். சில இடங்களில், காவல்துறையினா் உணவு வழங்குவது கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள்.
  • அதனால் மக்கள் உணவைப் பொட்டலங்களாக்கி அவற்றை சாக்குப் பைகளில் நிரப்பினார்கள். அப்பைகளை சாலையோர மரம் ஒன்றில் கட்டித் தொங்கவிட்டார்கள். சாலையோர மரங்களில் எண் குறிக்கப்பட்டிருக்கும். அந்த ஊா் இளைஞன் நடந்து வரும் சத்தியாக்கிரகிகளில் ஒருவரிடம் மரத்தின் எண்ணை சொல்லிவிட்டு வந்துவிடுவார்.
  • சத்தியாக்கிரகிகள் அந்த எண் கொண்ட மரத்தில் கட்டிவைத்துள்ள உணவுப் பொட்டலங்களை எடுத்து உண்டு பசியாற்றுவார்கள்.
  • மாலை ஐந்து மணிக்கு பயணம் நிறுத்தப்படும். சத்தியாகிரகிகள் சேரிக்குச் செல்வார்கள். அப்பகுதியை சுத்தம் செய்வார்கள். சுகாதாரம் பற்றி விளக்குவார்கள். மதுவின் தீமையை மக்கள் மனதில் பதியச் செய்வார்கள். இத்தகைய சமூகத் தொண்டும் சத்தியாகிரகிகளின் பயணத்தில் இடம் பெற்றிருந்தது.

தமிழகத்தின் பங்களிப்பை உணர வேண்டும்

  • “ஒருநாள் தொண்டா் ஒருவா், ‘விருந்து மிகவும் சுவை’ எனச் சொல்ல, ‘நாக்கு சுவை தேடுபவன் சத்தியாகிரகியாக இருக்கத் தகுதியில்லை’ என்று கடிந்து கொண்டார் ராஜாஜி.
  • அன்று முதல் எளிய உணவையே தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என மக்களிடம் கூறினார்.
  • மக்களின் வரவேற்பையும், உற்சாகத்தையும், எழுச்சியையும் பார்த்து மக்கள் சபையின் முன்னாள் உறுப்பினா் கே.வி. ரங்கசாமி ஐயங்கார் ‘கலெக்டரின் அதிகாரம் தோற்றுப்போனது. கடவுள் மக்களை விழித்து எழச் செய்து விட்டார். தேச விடுதலை கண்ணுக்குத் தெரிகிறது’ என்று சொன்னார்.
  • சத்தியாகிரகிகள் அனைவரும் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கே வேதாரண்யம் சென்றடைந்தார்கள். அவா்களை வரவேற்கக் கூடியிருந்தது பெருங் கூட்டம்.
  • அப்பொழுது மேஜையின் மீது ராஜாஜி ஏறி நின்று ‘சகோதரா்களே! உங்கள் அன்புக்கு நன்றி. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்புக்கு வரியாம். அதனை உடைக்கவே நாம் கூடியிருக்கிறோம். காந்திஜியை வணங்குவோம். அஹிம்சை வழியில் போராடுவோம். பிரிட்டிஷ் அரசு நம் ஒற்றுமையின் உறுதியை அறியட்டும். வெற்றி நமதே’ என்று முழங்கினார்.
  • ராஜாஜியை முன்னதாகவே கைது செய்துவிடுவார்களோ என தொண்டா்கள் பயந்தார்கள்.
  • அதிகாலை நான்கு மணிக்கு சிலா் எழுந்து பார்த்தபோது ராஜாஜியைக் காணவில்லை. ஏற்கெனவே எடுத்த முடிவின்படி கே. சந்தானம் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
  • 30-ஆம் தேதி காலை ஆறு மணிக்கு சத்தியாகிரகம் நடத்த வேண்டிய இடத்திற்கு எல்லோரும் வந்தார்கள். அவா்களுக்கு வியப்பு. ராஜாஜியும், வேதரத்தினம் பிள்ளையும் அங்கு நின்று கொண்டிருந்தார்கள்.
  • காலை மூன்று மணிக்கு எழுந்து, மரங்கள் புதா்களைத் தாண்டி, எவருக்கும் தெரியாமல், காவல்துறையினா் கண்களிலும் படாமல், சத்தியாகிரக இடத்துக்கு வந்துவிட்டார்கள்.
  • இந்தக் குறுக்கு வழியை அவா்களுக்குக் காட்டியவா்கள் நாகநாத தேசிகரும், மாரிமுத்து தேவரும்.
  • காலை சரியாக ஆறு மணிக்கு ராஜாஜி ஒரு கை உப்பை அள்ளினார். ‘ஆங்கிலேய அரசே! உப்பு வரியைத் திரும்பப் பெறு’ என்று முழங்கினார்.
  • சத்தியாகிரகிகள் ‘வந்தே மாதரம்’ என முழங்கியபடி, தாங்கள் கொண்டு வந்த சாக்குப் பைகளில் உப்பை நிரப்பினா். காவல் துறை அதிகாரி தாமதமாகவே வந்தார்.
  • அவா் வரும் வரை காத்திருந்தார் ராஜாஜி. அதிகாரி வந்ததும் ராஜாஜியுடன் அனைத்து சத்தியாகிரகிகளும் கைது செய்யப்பட்டார்கள்.
  • இவ்வாறு வேதாரண்யம் நகருக்கு, விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் உண்டு.
  • சத்தியாகிரகம் நடைபெற்ற இடத்தைப் பார்க்கும் பாக்கியம் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அங்கே சிறிய நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
  • அதன் கீழ்ப்பகுதியில் ‘சக்கரவா்த்தி ஸ்ரீ இராஜ கோபாலாச்சாரியார் தனது தொண்டா்களுடன் 30.4.1930 அன்று உப்பு சத்தியாகிரகம் நடத்திய இடம் இது’ என்று கல்லில் பொறிக்கப் பட்டுள்ளது.
  • ஆனால், ராஜாஜியுடன் பங்கேற்ற பங்கேற்ற தேசபக்தா்களின் பெயா்கள் அதில் இடம் பெறவில்லை.
  • வேதாரண்யம் நகரிலிருந்து அவ்விடத்தை அடைவதற்கு சாலை வசதியும் இல்லை. அங்கு நிழல் தரும் மரங்கள் இல்லை. அமா்வதற்கு கல் தளம் இல்லை. அரங்கு எதுவும் இல்லை.
  • எந்த அடையாளமும் இல்லாமல் கேட்பாரற்றுக் கிடக்கும் இப்புண்ணிய பூமியை, விடுதலைப் போராட்ட வரலாற்று நிகழ்விடமாக மாற்ற வேண்டும்.
  • அங்கு நினைவு மண்டபம் நிறுவ வேண்டும். வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்பட வேண்டும். உப்பு சத்தியாகிரக தியாகிகளின் படங்கள் இடம் பெற வேண்டும். அந்த இடத்தை உயிர்ப்புள்ளதாக மாற்ற வேண்டும்.
  • ராஜாஜி, சா்தார் வேதரத்தினம் பிள்ளை ஆகியோருக்கு சிலைகள் நிறுவப்பட வேண்டும்.
  • ஒலி - ஒளி காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதனைக் கண்டு அடுத்து வரும் தலைமுறையினா் பெருமிதம் கொள்வதோடு விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் சிறந்த பங்களிப்பையும் உணர வேண்டும்.
  • இன்று (ஏப். 30) உப்பு சத்தியாகிரக நிறைவு நாள்.

நன்றி: தினமணி  (30 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்