TNPSC Thervupettagam

பதிப்புரிமை விவகாரம்: இளையராஜா செய்வது சரியா?

May 30 , 2024 227 days 173 0
  • இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களைப் பிறர் பயன்படுத்துவது தொடர்பாகத் தொடர்ந்த வழக்குகளும், அனுப்பிய நோட்டீஸ்களும் இன்றைக்குப் பேசுபொருளாக இருக்கின்றன. இதுதொடர்பாகப் பலர் தவறான கருத்துகளைப் பரப்புவதால் மக்களிடம் குழப்பமே மிஞ்சுகிறது. உண்மை நிலவரம் என்ன?

பதிப்புரிமை என்றால் என்ன?

  • பதிப்புரிமையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. கதைகள், பாடல்கள், கட்டுரைகள், இசைக்கோவை, ஓவியங்கள், சிற்பங்கள் எனப் பல வகையில் படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை இந்தியப் பதிப்புரிமைச் சட்டம் 1957இன்படி பாதுகாக்கலாம்.
  • பதிப்புரிமை என்பது படைப்பாளியின் உயிர் இருக்கும் வரையும், அதற்குப் பின் 60 ஆண்டுகளுக்கும் இருக்கும். திரைப்படம் போன்றவற்றைப் பொறுத்தவரை, அவை வெளிவந்த ஆண்டிலிருந்து அடுத்துவரும் 60 ஆண்டுகளுக்கு இருக்கும். நடிகர், பாடகர் போன்ற செயலாக்குபவர்களைப் பொறுத்தவரை, படைப்புகள் வெளிவந்த ஆண்டிலிருந்து அடுத்துவரும் 50 ஆண்டுகளுக்குப் பதிப்புரிமை இருக்கும்.

எதிர்மறை உரிமை:

  • பதிப்புரிமை என்பது எதிர்மறை உரிமையாகும். அதாவது, ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு மட்டுமே பதிப்புரிமையைப் பயன்படுத்த முடியும். அதிலிருந்து வருமானம் ஈட்டுவது என்பது பதிப்புரிமையில் வராது. அது படைப்பாளியின் திறனையும் விருப்பத்தையும் சார்ந்தது.
  • தன் படைப்பை யாரோ ஒருவர் நகலெடுத்து வருமானம் ஈட்டுவதை அல்லது அதைத் தன்னுடையதாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே பதிப்புரிமைச் சட்டங்கள் உலகம் முழுவதும் இயற்றப்பட்டன. படைப்பு ஒன்றை உருவாக்கி வெளிப்படுத்தும் விதத்துக்கு, 1886இல் கையெழுத்தான பெர்ன் ஒப்பந்தத்தின்படி (Berne Convention for the Protection of Literary and Artistic Works) உலகில் உள்ள 177 நாடுகளில் நாம் பதிப்புரிமை பெறுகிறோம்.
  • தன் எண்ணத்தில் மட்டுமே உருவாகி உள்ள படைப்புக்கோ அல்லது அதை ஒருவரிடம் வாய்வழியே / சைகைவழியே தெரிவித்ததற்கோ பதிப்புரிமை கிடைக்காது. மாறாக, அதை ஒரு கையெழுத்துப் பிரதியாக, ஓவியமாக, சிற்பமாக, இசைக் குறிப்புகளாக, மூலக்குறியீடுகளாகச் செய்திருந்தால் அவை தனித்தனியே பதிப்புரிமை பெறும்.
  • திரைப்படங்கள் போன்ற படைப்புகள் பலரின் திறமையால் உருவாக்கப்படுகின்றன. தான் எழுதிய, உருவாக்கிய, வரைந்த, இயக்கிய, இசையமைத்த வேலைகளுக்காக அதன் படைப்பாளிக்கு முதல் பதிப்புரிமை இருக்கிறது.
  • பாடலாசிரியரின் பங்கு, இசையமைப்பாளரின் பங்கு, நடன இயக்குநரின் பங்கு ஆகியவை திரைப்பட வடிவில்லாமல் தனித்துச் செயல்பட முடியும் என்றால், அவை தனிப் படைப்புகளாகக் கருதப்பட்டு, அவற்றுக்குத் தனி உரிமைகள் கொடுக்கப்படுகின்றன.
  • எனவே, ஒரு திரைப்படத்தின் சிறு பகுதியான பாடலை மட்டுமே தனியே எழுத்தாக, ஒலியாக, காணொளியாக, வரைகலையாக வெளிப்படுத்திப் பதிப்புரிமை பெற முடியும். தயாரிப்பாளருடன் எவ்வித ஒப்பந்தமும் முன்கூட்டியே இல்லாவிடில், இவற்றை உருவாக்கிய நபர்களே பதிப்புரிமை பெறுவர். ஆனால், தயாரிப்பாளர் / சம்பளம் கொடுப்பவர் எல்லா உரிமைகளையும் தனக்கானதாக எடுத்துக்கொள்வதும் உண்டு.

என்னென்ன உரிமைகள்?

  • பதிப்புரிமைச் சட்டத்தில் தயாரிப்பாளர்களுக்குத் தனித்த உரிமைகளும், படைப்பாளிகளுக்குத் தனித்த உரிமைகளும் அவற்றைச் செய்விப்பவர்களுக்கு வேறு வகை உரிமைகளும் உண்டு. ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு அதன் தயாரிப்பாளர் பெரும் தொகையைச் செலவு செய்கிறார்.
  • எனவே, அந்தத் திரைப்படத்தின் முழு உரிமையும் அந்தத் தயாரிப்பாளருக்குச் சொந்தமாகிறது. ஒரு திரைப்படம் முழுமையாக அல்லது பகுதிகளாக வெளியிடப்படும்போது, அதன் தயாரிப்பாளரைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை.
  • ஒரு பாடலாசிரியரின் பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட, பாடல்களை வாசித்து வருமானம் ஈட்ட அவருடைய அனுமதி வேண்டும். பொதுவாக, இசையில்லாமல் பாடலை மக்கள் விரும்ப மாட்டார்கள். இசைக் கோவையை மட்டும் பயன்படுத்த இசையமைப்பாளரின் அனுமதி வேண்டும்.
  • அதாவது, மேடைக் கச்சேரி, பொதுக்கூட்டங்களில் பாடுதல், விருந்துகளில் பாடுதல் என இசைக் கோவையைப் பயன்படுத்த இசையமைப்பாளரின் அனுமதியும் பாடலுக்காகப் பாடலாசிரியரின் அனுமதியும் வேண்டும்.
  • ஒரு படைப்பாளியின் படைப்புகளை யாருமே இலவசமாகப் பயன்படுத்த முடியாதா என்ற கேள்வி எழுகிறது. பதிப்புரிமைச் சட்டத்தின்படி ஓரளவுக்குப் பயன்படுத்த சட்டம் அனுமதிக்கிறது. ஒரு திரைப்படத்தின் / பாடலின் சில காட்சிகளைக் காட்டுவது, ஒரு இசைக் கோவையின் சில துளிகளை வெளிப்படுத்துவது எனப் பல வகைகளில் ஒருவரின் படைப்புகளை அனுமதியின்றி வெளிப்படுத்தலாம். ஒருவரின் மொத்தப் படைப்புகளையும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக எடுத்துக்கொள்ளலாம். ஆராய்ச்சி சம்பந்தமான தேவைகளுக்கு ஒருவரின் முழுப் படைப்புகளையும் பயன்படுத்தலாம்.

யார் மீது வழக்குத் தொடர்வது?

  • ஒருவேளை, படைப்பாளி தன்னுடைய படைப்பைப் பொதுவெளியில் பதிப்பு செய்யாமலும் அல்லது பிறரை மறுபதிப்பு செய்ய விடாமலும் இருந்தால், அதுகுறித்துப் பதிப்புரிமை அலுவலகத்தில் புகார் செய்யலாம். பதிப்புரிமை அலுவலகம் அதைப் பரிசீலனை செய்து, குறிப்பிட்ட காலம் கொடுத்து, அதற்குள் வெளியிட வேண்டுமென்று உத்தரவிட முடியும்.
  • இருப்பினும், அந்தப் படைப்பாளி வெளியிடவில்லை என்றால், அதற்கான உரிமத்தை வேறு ஒருவருக்கு வழங்கும் அதிகாரம் பதிப்புரிமை அலுவலகத்துக்கு உள்ளது. அதேபோல, பொதுச் சொத்தாகக் கருதும் ஒன்றை அரசு நாட்டுடைமை ஆக்கலாம்.
  • பதிப்புரிமையை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து நஷ்டஈடு கேட்கலாம். ஆனால், அவ்வாறு கேட்கும்முன் அவர்களுடைய பொருளாதார நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறர் பதிப்புரிமையை வருமானத்துக்குப் பயன்படுத்தும் பெரிய நிறுவனம், சமூகத்தில் பணக்காரர் போன்றோர் மீதுதான் வழக்குத் தொடர வேண்டும்.
  • நஷ்டஈடும் கிடைக்கும். நீதிமன்றத்துக்குப் போவதற்கு முன் இவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்ப வேண்டும். அதற்குப் பின்னும் அத்துமீறினால் மட்டுமே நீதிமன்றம் வழக்கை விசாரணை செய்யும்.
  • ஒரு படைப்பு உருவானவுடன் அதற்கான பதிப்புரிமையை அந்தப் படைப்பாளி தானாகவே பெறுகிறார். பதிப்புரிமை அலுவலகத்தில் பதிந்தால் இது ஒரு தனித்துவமான சான்றாக அமையும். ஒரு பாடலை வானொலியில் ஒலிபரப்பப் பாடலாசிரியர், இசையமைப்பாளருக்குப் பதிப்புரிமைத் தொகை கொடுக்க வேண்டும். இசையை மட்டுமே வெளிப்படுத்திக் கச்சேரி நடத்த முடியும் எனில், இசையமைப்பாளருக்குக் கொடுக்க வேண்டும்.
  • ஒரு படைப்பாளிக்குத் தன்னுடைய படைப்புகளை உருவாக்குவதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. அதேவேளை, தன் படைப்புகளை பிறர் திருடாமல் அல்லது நகல் எடுக்காமல் காப்பது என்பது அவருடைய அடுத்தடுத்த படைப்புகளை அப்படிச் செய்யவிடாமல் தடுக்கும்.
  • அவற்றைக் காப்பதற்கான வேலையைச் செய்வதற்குப் பதிப்புரிமை நிறுவனங்கள் உள்ளன. அவை படைப்புகளைப் பதிவுசெய்வது, பிறருக்கு உரிமைகள் கொடுப்பது, அனுமதி இல்லாமல் நகல் எடுக்கிறார்களா என்று கண்காணிப்பது, கிடைக்கும் வருமானத்தைப் பெற்றுத் தருவது என்பது போன்ற வேலைகளைச் சேவைக் கட்டணத்துடன் செய்கின்றன.

இசையமைப்பாளரின் முக்கியத்துவம்:

  • ஒரு பாடலை இசையுடன் கேட்கவே மக்கள் விரும்புவர். அதனால்தான் இசையமைப்பாளரின் சம்பளம் பாடலாசிரியரைவிட மிக அதிகம். அது போலவே, இந்தப் பதிப்புரிமை நிறுவனங்கள் பாடலுக்கான பதிப்புரிமையைப் படைப்பாளிகளுக்குப் பல விகிதங்களில் கொடுக்கின்றன.
  • அதில் தங்களுக்கான சேவைக் கட்டணத்தை எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தைப் படைப்பாளிகளுக்கு அந்நிறுவனங்கள் கொடுக்கும். ஆனால், சேவைக் கட்டணம் போக படைப்பாளிக்குச் சொற்ப வருமானமே கிடைக்கும்.
  • மேலும், ஒப்படைக்கப்படும் பாடல்களைப் பதிப்புரிமை நிறுவனங்கள் தமது விருப்பத்துக்குக் கொடுக்கவோ விற்கவோ முடியாது. மேடைக் கச்சேரியில் ஒரு பாடலைப் பாட உரிமம் பெற்ற பதிப்புரிமை நிறுவனத்துக்குக் கட்டணம் செலுத்திவிட்டால் போதும். பாடலாசிரியரோ இசையமைப்பாளரோ அதைத் தடுக்க முடியாது.
  • மாறாக ஒரு படைப்பாளி, தனது பதிப்புரிமைகளைத் தானே நிர்வகித்தால் அதை விற்க, இலவசமாகக் கொடுக்க அல்லது சிலர் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும். மேலும், படைப்பாளி தனது படைப்புக்கான விலையை, அதைப் பயன்படுத்தும் கால அளவை, எந்தவித நிகழ்ச்சியில் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்