TNPSC Thervupettagam

பத்தாண்டு வீழ்ச்சி தமிழ்நாட்டின் தொழில் மயமாதல் எதிர்கொண்டிருக்கும் சவால்கள்

January 21 , 2022 926 days 446 0
  • இந்தியாவில் மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி மனித வளர்ச்சிக் குறியீடுகளிலும் சிறந்து விளங்குகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் வருமானப் பகிர்வு சீராக உள்ளது.
  • தமிழ்நாடு எட்டியிருக்கும் இத்தகைய வளர்ச்சியின் காரணமாக, சமூக அறிவியலாளர்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்துவருகிறது.
  • தமிழ்நாட்டின் தொழில்மயமாதலைப் பற்றி, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎஸ்எஸ்ஆர்) இம்ப்ரஸ் ஆய்வுத் திட்டத்தின் கீழ் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அனிஷ் குப்தா, மொசுமி பிஸ்வாஸ் உள்ளிட்டோர் வெளியிட்டிருக்கும் சமீபத்திய கட்டுரை ஒன்று தொழில் துறையின் கவலைக்குரிய சில போக்குகளைச் சுட்டிக்காட்டியிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
  • தொழில்துறையில் வளர்ச்சியடைந்த மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், உற்பத்தித் தொழில்முறையில் 2000-01 தொடங்கி 2010-11 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் முன்னிலையில் இருந்தது.
  • 8.73% ஆக இருந்த இந்த வளர்ச்சி விகிதம் 2011-12க்கும் 2020-21க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 7.13% ஆகக் குறைந்துள்ளது.
  • தொழில் துறையில் மட்டுமின்றி, சேவைப் பணித் துறையிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிவுகளைச் சந்தித்துவருகிறது. 1993-94 தொடங்கி 1999-2000 வரையிலான காலகட்டத்தில் 9.34% ஆக இருந்த வளர்ச்சி விகிதம் 2000-01 தொடங்கி 2010-11 வரையிலான காலகட்டத்தில் 9.20% ஆகக் குறைந்தது.
  • கடந்த பத்தாண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெறும் 6.25% என்ற அளவுக்கு சேவைப் பணித் துறையின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
  • உற்பத்தித் தொழில் துறையின் வளர்ச்சி விகிதம் என்பது வேலைவாய்ப்புடன் நேரடித் தொடர்பு கொண்டது.
  • ஆனால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் உற்பத்தித் தொழில் துறையின் பங்களிப்பு குறைந்துகொண்டே இருக்கிறது. இத்துறையில் 1993-94ல் 60.2 லட்சமாக இருந்த வேலைவாய்ப்புகள் 2018-19ல் 22.6 ஆகக் குறைந்துள்ளது என்ற ஒப்பீடு அதிர்ச்சியளிக்கிறது.
  • தமிழ்நாட்டின் தொழில் துறை சந்தித்துள்ள இந்தச் சரிவுக்குத் தொழிற்சச்சரவுகள் உடனுக்குடன் தீர்க்கப்படாததும் முக்கியமான காரணம் என்று டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • 2010-ல் இந்தியா முழுவதும் இருந்த தொழில்துறைச் சச்சரவுகளில் தமிழ்நாட்டின் விகிதம் 23%. அதே ஆண்டின் நிலவரப்படி, தொழில் துறையில் வளர்ச்சியடைந்த ஏழு மாநிலங்களுக்கு இடையில் தமிழ்நாட்டின் விகிதம் 56.86%.
  • முப்பதுகளின் இறுதியில் சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி பொறுப்பில் இருந்த போது, மதுரை ஹார்வி மில் தொழிலாளர் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, அதைத் தீர்த்துவைத்து முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார்.
  • தொழிலாளர் போராட்டங்களின்போது மாநில அரசே முன்னின்று அவற்றைத் தீர்த்து வைத்த உதாரணங்கள் நிறைய உண்டு.
  • அப்படியொரு நடைமுறையைத் தமிழ்நாட்டில் இன்னும் தீவிரப்படுத்த வேண்டியிருப்பதைத் தான் இத்தகைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
  • வேலைவாய்ப்புடன் நேரடித் தொடர்புடைய உற்பத்தித் தொழில் மற்றும் சேவைப் பணித் துறையில் ஏற்படும் தொழிற்சச்சரவுகளில் மாநில அரசு இனிவரும் காலத்திலாவது தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்