- தமிழ்நாட்டில் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கும், விளைநிலங்கள் மீது தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் தொடர்ந்து சூறையாடல்கள் நடக்கின்றன. தொழில் வகைப்பாடு என்கிற பெயரில் கட்டுக்கடங்காத அளவில் விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதால் உணவு உற்பத்தியிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கான தேவையைவிடப் பல மடங்கு கூடுதலான வகையில் வீட்டுமனைகள் உருவாக்கப்படுகின்றன.
- இந்நிலை தொடருமேயானால், தமிழ்நாட்டில் விளைநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் அழிய நேரிடலாம். நாட்டின் மக்கள்தொகையில் 80% பேரின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியுள்ள நிலையில், நிலங்கள் இப்படிச் சூறையாடப்படுவதால், அடிப்படை வருவாயைக்கூடப் பெரும்பான்மை மக்கள் இழக்கும் நிலை ஏற்படும்.
நியாயமற்ற கட்டண உயர்வு
- தொழிற்புரட்சி என்கிற பெயரில் ஏராளமான விளைநிலங்கள் தேவையற்ற முறையில் வாங்கிக் குவிக்கப்படுகின்றன. நில மாஃபியாக்கள் நிறுவனங்களைப் பதிவுசெய்து, அதன் பெயரில் நில உச்சவரம்புச் சட்டத்தையே குழிதோண்டிப் புதைக்கும் அளவில் விளைநிலங்களைக் கைப்பற்றுகின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வாங்கிப் பதுக்கப்படுகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத் துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக, பத்திரப்பதிவுக்கான நில மதிப்பீட்டில் 10% முத்திரைக் கட்டணம் 7% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
- பத்திரப்பதிவுக் கட்டணம் 4%இல் இருந்து 2%ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கணினிக் கட்டணம் 10 பக்கங்களுக்கு 100 ரூபாயும், அதற்கு மேல் தலா ஒரு பக்கத்துக்கு 10 ரூபாயும் கூடுதலாக வசூல்செய்யப்பட்ட நிலையில், தற்போது 10 பக்கங்களுக்கு 200 ரூபாய், அதற்கு மேல் தலா ஒரு பக்கத்துக்கு 100 ரூபாய் எனக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, விவசாயிகளுக்கும் தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான் இதில் இருக்கும் முக்கியப் பிரச்சினை. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உணவுக்காகவும் நாட்டின் உணவுத் தேவைக்காகவும் பத்திரப்பதிவு செய்யும் சிறிய அளவிலான நிலங்களுக்கும், தொழில் வகைப்பாடு செய்வதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் வாங்கிக் குவிக்கப்படுகிற நிலக் குவியலுக்கும் ஒரே மாதிரியான பத்திரப்பதிவுக் கட்டணத்தையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு நிர்ணயம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.
பத்திரப்பதிவில் அத்துமீறல்கள்
- பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஊழல் முறைகேடுகள் எல்லை மீறிவிட்டன. உதாரணத்துக்கு, ஒருவரது சொத்துப் பத்திரம் காணவில்லை எனில், காவல் நிலையத்தில் புகாரளிப்பதன் மூலம் அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றிப் பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலமாக நகல் பத்திரங்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்பட்ட பத்திரங்கள் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து விற்பனைக்காகப் பத்திரப்பதிவுக்குக் கொண்டுசெல்லப்பட்டால், ரூ.2 லட்சம் மதிப்புள்ள நிலத்துக்கு ரூ.60 ஆயிரம் வரை கையூட்டு கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறது.
- மறுத்தால், காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனு நகல் மற்றும் சிஎஸ்ஆர் நகல் வாங்கி வந்தால்தான் பதிவுசெய்ய முடியும் என நடைமுறைக்குப் புறம்பாகக் கூறி, பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ளவர்கள் தட்டிக்கழிக்கின்றனர். அத்துடன், நிலத்தை வாங்குபவர்களும் விற்பனை செய்பவர்களும், தேவையான சான்றுகளுடன் பத்திரப்பதிவாளரை நேரில் சந்தித்து விண்ணப்பம் அளிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவதற்குக்கூடப் பதிவாளர்கள் அனுமதிப்பதில்லை. மேலும், கையூட்டு பெறுவதற்காகவே பத்திரப்பதிவு எழுத்தர்கள்தான் பதிவாளரிடம் விண்ணப்பம் அளிக்க முடியும் என்கிற நடைமுறை பெரும்பாலான பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறுகின்றன.
மாற்றங்களுக்கான தருணம்
- இவற்றையெல்லாம் தடுக்கப் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகங்களில், நிலத்தை வாங்குபவர்களும் விற்பவர்களும் காலை அலுவலகம் திறந்தவுடன் விண்ணப்பங்களை நேரடியாகப் பத்திரப்பதிவு அலுவலர்களிடம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு, பத்திரப்பதிவு அலுவலர்களே சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் விளக்கம் கேட்க வேண்டும். மேற்கொண்டு சான்றுகளுக்கான தேவை ஏற்பட்டால், அவற்றைப் பெற்றுவருவதற்கான கால அவகாசத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க பதிவாளர்கள் முன்வர வேண்டும். அவ்வாறு கேட்கப்படும் சந்தேகங்கள் தொடர்பாக, பதிவாளரின்கீழ் நிலையில் உள்ள அலுவலகப் பணியாளர்கள் மூலம் ‘சந்தேகக் குறிப்புகள் விண்ணப்ப’த்தில் பதிவிட்டு விளக்கங்களைக் கேட்டுப் பெறலாம்.
- இப்படிச் செய்தால், எழுத்துபூர்வமாக அல்லாமல் வாய்மொழியாகத் தேவையற்ற சான்றுகளை - சட்டத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பாக - கேட்பதைத் தடைசெய்ய முடியும். இதன் மூலம் பெருமளவிலான முறைகேடுகளைத் தடுக்க முடியும். லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும் சோதனையிலிருந்து தப்பிப்பதற்கான செலவுகளையும் இணைத்து, தற்போது கையூட்டுத்தொகையை உயர்த்திக்கொள்கிற பாணி பல பதிவாளர்களிடம் நிலவுவதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். நில வகைப்பாட்டில் மாற்றம்: தற்போதைய நிலையில், 7% முத்திரைக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது; இது மாற்றப்பட வேண்டும். அதாவது, விவசாயப் பயன்பாட்டுக்கென வாங்கப்படும் நிலங்களுக்கு 2% முத்திரைக் கட்டணம், தொழில் நிறுவனப் பயன்பாட்டுக்காக வாங்கப்படும் நிலங்களுக்கு 10% முத்திரைக் கட்டணம் என நிர்ணயிக்கலாம். இவ்வாறு பத்திரப்பதிவு செய்யும்போது அது வேளாண்மைக்கான விளைநிலமா தொழில் நிறுவனங்களுக்கான பயன்பாட்டு நிலமா என்பதைப் பத்திரப்பதிவில் உறுதிசெய்துவிடலாம். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட நிலங்களை மட்டுமே தொழில் நிறுவனங்கள் பயன்படுத்த முடியும் என்னும் நிலையை ஏற்படுத்துவது அவசியம்.
- இதற்கான நில வகைப்பாடு மாற்றங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே, சந்தை மதிப்பில் 67%ஆக இருந்த முத்திரைக் கட்டணத்தை, தற்போதைய நிலையில் 100%ஆக மாற்றியுள்ளனர். இந்த மாற்றத்தால் பதிவுக் கட்டணக் குறைப்பின் பயனை விவசாயிகள் பெற முடியவில்லை என்பதை அரசு உணர வேண்டும். ‘குடும்ப செட்டில்மென்ட்’ பத்திரங்களுக்கு ரூ.4,000 கட்டணம் என்பது தற்போது ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முத்திரைக் கட்டணம் ரூ.25,000 என்பது ரூ.40,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை அரசு ரத்து செய்ய வேண்டும்.
அரசு செய்ய வேண்டியவை
- தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு/வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு எனக் கூறி வாங்கப்படும் நிலங்கள் பல ஆண்டுகளாகத் தரிசாகப் போட்டு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படாமல் வீணாவதைப் பார்க்க முடிகிறது. இதனால் உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான மாற்றங்கள் செய்யப்பட்டால், விவசாயிகளுக்கும் நன்மை விளையும். எதிர்காலத்தில் ஏற்படப்போகிற உணவுத் தட்டுப்பாட்டையும் போக்க முடியும். மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும். பத்திரப்பதிவு முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தால்தான் லஞ்ச–ஊழல் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். நடைமுறைப் பிரச்சினைகள் சார்ந்து மாற்றங்களைக் கொண்டுவரும்போது, அரசுக்கு உரிய வருவாய் கிடைப்பதற்கான வழிவகையும் ஏற்படும்.
நன்றி: தி இந்து (15 – 12 – 2023)