TNPSC Thervupettagam

பத்திரிகைத் துறை செழிக்க ஆஸ்திரேலியாவின் முயற்சியை இந்தியாவும் பின்பற்றட்டும்!

February 25 , 2021 1230 days 492 0
  • செய்தி ஊடகங்களின் செய்திகள், கட்டுரைகள் போன்ற உள்ளடக்கங்களை கூகுள், ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்பத் தளங்கள் பயன்படுத்திக்கொள்வதற்குச் சம்பந்தப்பட்ட செய்தி ஊடகங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா முன்னெடுத்துவரும் சட்டபூர்வ நடவடிக்கை இந்தியா கவனிக்கத்தக்க உதாரணம் ஆகும்.
  • சமூக வலைதளங்கள் இன்று செய்தி உள்ளடக்கங்களைப் பகிர்வதில் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தாலும், உள்ளடக்கத்தை உருவாக்கும் பணியைப் பாரம்பரிய ஊடகங்களே பெருமளவில் ஆற்றுகின்றன.
  • ஒவ்வொரு செய்தியும் ஏராளமானோர் உழைப்பு, பணச் செலவின் விளைவாகவே உருவாகிறது. மக்களிடம் தங்களின் தளங்கள் வழியே அதைக் கொண்டுசெல்லும்போது, அதன் வாயிலாக ஏராளமாக விளம்பர வருமானத்தை ஈட்டும் கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்கள் தாங்கள் பகிரும் உள்ளடக்கத்தை உருவாக்கும் ஊடக நிறுவனங்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. ஆஸ்திரேலிய அரசு இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படுகிறது.
  • இணையத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் செய்தி ஊடகங்களுக்கும் இடையிலான அதிகாரச் சமனின்மை என்பது உலகெங்கும் காணப்படும் யதார்த்தம் ஆகும். இது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகிக்கொண்டே வந்தது; இந்தக் காலகட்டத்தில் மேற்குறிப்பிட்ட இணையத் தொழில்நுட்பத் தளங்கள் இணைய உலகில் ஏகபோகம் செலுத்திவந்திருக்கின்றன.
  • இணையத்தின் வரவுக்குப் பிறகு செய்தி ஊடகங்களின் வருமானம் கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது. நீண்ட காலம் வெற்றிகரமாக நடந்துவந்த பல்வேறு செய்தி நிறுவனங்களின் அச்சு இதழ்கள் பொருளாதாரரீதியில் பெரும் இழப்பைச் சந்தித்ததால் உலகெங்கும் ஆயிரக்கணக்கான இதழாளர்கள் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள். இது ஒவ்வொரு நாட்டின் ஜனநாயகச் சூழலிலும், அறிவுச் சூழலிலும் பாதிப்பை உண்டாக்கிவருகிறது.
  • ஆஸ்திரேலிய அரசின் முயற்சி சுதந்திர இணையத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கிறது என்ற கருத்து பல்வேறு வல்லுநர்களால் சொல்லப்பட்டாலும், இந்த முயற்சியின் நோக்கம் கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.
  • சமனற்ற இந்தப் போரில் தலையிடாமல் இருப்பதால் கொடுக்கும் விலை மிகவும் அதிகம் என்று இந்தச் சட்ட முன்மொழிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது ஆஸ்திரேலிய அரசு குறிப்பிட்டது இங்கே நினைவுகூரப்பட வேண்டியதாகும்.
  • ஆஸ்திரேலியாவின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஃபேஸ்புக் ஆஸ்திரேலியச் செய்திகளைச் சில நாட்களுக்குத் தன் தளத்தில் காட்டாமல் இருட்டடித்தது. கூகுளும் தனது தேடுபொறியை ஆஸ்திரேலியாவிலிருந்து விலக்கிக்கொள்வதாக அச்சுறுத்தியது.
  • ஆனால், ஆஸ்திரேலிய அரசு இந்தப் பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படப்போவதில்லை என்று உறுதிகாட்டியதும், மேற்கண்ட இரு நிறுவனங்களும் இறங்கிவரத் தொடங்கியிருக்கின்றன.
  • செய்தி நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களின் சேவையைப் பயன்படுத்திக்கொள்வதாக அவை ஒப்புக்கொண்டுள்ளது ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. உலகெங்கிலும் உள்ள செய்தி ஊடகங்களுக்குக் கிடைத்திருக்கும் நீதியும் ஆகும்.
  • இந்தியப் பிரதமர் மோடி, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடவ் போன்றோரிடம் தங்கள் முயற்சியை ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸான் பகிர்ந்துகொண்டிருக்கிறார். நல்லது. இந்தியாவும் ஆஸ்திரேலியப் பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (25-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்