- தமிழகத்தின் மாநில மரமாக பனைமரம் விளங்குகிறது. இந்த மரம், இறைவன் பலராமனின் கொடியில் இடம் பிடித்தது. பலவான் பீமனின் கொடியிலும் இதற்கு இடம் கிடைத்தது.
- தொல்காப்பியர், பனை பற்றி விதிகளை வகுத்தார். புறநானூற்றில் பனைமரம் பற்றி ஆலத்தூர் கிழார் பாடினார். பனைமரத்தின் நுங்கு பற்றி, கள்ளில் ஆத்திரையனார் கூறினார்.
- திருக்குறளில் பனை என்ற சொல்லாட்சி உள்ளது. உத்தமர், ஓங்கு பனை போல்வர் என்று நீதிநெறி வெண்பா ஓதியது. பனம்பூ மாலையை சேர மன்னர் சூடி இருந்ததை வரலாறு கூறுகிறது.
- மறைந்த குமரிக் கண்டத்தில் பனை நாடு இருந்தது என்பதை தமிழ்நூல்கள் சொல்லும்.
- இன்றும் "பனையூர்', "திருப்பனந்தாள்', "திருப்பனங்காடு' முதலிய ஊர்களின் பெயர்கள் பனையின் சிறப்பை அறிவிக்கும். பனையின் நுங்கு அதிகமாக கிடைத்ததால் நுங்கம்பாக்கம் என்று சென்னையில் ஒரு பகுதி திகழ்கிறது.
- பனைமரம் வெப்ப நிலப்பரப்பில் வளரக்கூடிய மரம். இது 30 முதல் 40 அடிவரை வளரும். இது 120 ஆண்டுகள் வாழும். வறட்சியான பூமியிலும் இது தலை நிமிர்ந்து நிற்கும்.
- முளைத்து 20 ஆண்டுகள் சென்ற பிறகு இது பலன் கொடுக்கும். பனை, புல் வகையைச் சார்ந்தது. எனவே, இது "புல்', "புல்பதி', "புற்றாளி' என்றும் அழைக்கப்பட்டது.
ஆதி மரம்
- நீண்டகாலப் பயன்பாட்டுக்குரிய பொருள்களுக்கு காலப்போக்கில் பல்வேறு பெயர்கள் தோன்றும். நீரைக் கடக்கும் சாதனத்திற்கு, "படகு', "கலம்' முதலிய 28 சொற்கள் தமிழில் உள்ளன. இந்தச் சொல்வளம் வேறு எந்த மொழியிலும் இல்லை.
- பனைமரம் தமிழகத்தின் ஆதி மரம், கால நெடுமை காரணமாக, இதற்கும் பலப்பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. "பெண்ணை', "தாலம்', "தாளி', "போந்து', "போந்தை', "நீலம்', "கருந்தாள்', "கரும்புறம்', "ஓடகம்', "கருவிராகன்' முதலிய பெயர்களையும் பனை பெற்றுள்ளது.
- இவற்றில் "போந்தை' என்பது இளம் பனை மரத்தைச் சுட்டும். இப்படிப் பருவத்தின் அடிப்படையில் ஒரு பெயர் இருப்பதும் தமிழுக்கே உரிய சிறப்பு.
- பனையின் இலை, "ஓலை' எனப்பட்டது. பசுமையான ஓலை "சாரோலை' என்றும், காய்ந்த ஓலை "காவோலை' என்றும் கூறப்பட்டது.
- பனை ஓலையின் ஒரு பகுதி "இலக்கு' என்று பேச்சுவழக்கில் இருந்தது. பனம்பூ மாலை, "பனம் புடையல்' என்றும் குறிக்கப்பட்டது. பனங்காயின் மேல்தோல், "பனை முகிழ்', "பனையிதக்கை' எனவும் உரைக்கப்பட்டது.
- தமிழகத்தில் முன்பு 30 வகையான பனைமரங்கள் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்று "தாளிப்பனை, "கூந்தப்பனை', "நாட்டுப்பனை' ஆகியவையே உள்ளன. பனையில் ஆண்பனை, பெண்பனை என்ற இருவகை உண்டு. ஆண்பனை பூ மட்டுமே பூக்கும்; பெண்பனை காயும் காய்க்கும்.
அடி முதல் நுனி வரை
- இந்தியாவில் உள்ள பனைமரங்களில் 50 விழுக்காட்டு மரங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. "பனை' எனும் சொல் நிலம் கடந்து, நீரிலும் வாழ்கின்றது.
- கடலில் வாழும் ஒரு வகை மீன் "பனையன்' என்றும் "பனை மீன்' என்றும் கூறப்படுகிறது.
- இச்சொல் வானத்திலும் வாழ்கிறது. கோடைக்காலத்தில் தெரியும் விண்மீன் குழுவான விருச்சிக ராசியிலுள்ள ஒரு நட்சத்திரம் "பனை' என்ற சொல்லால் சுட்டப்படுகிறது (இதன் மற்றொரு பெயர் அனுடம்).
- பனைமரத்தின் அடி முதல் நுனி வரை மனிதனுக்குப் பயன்படுகிறது.
- இதன் வேர், நீரைத் தேடி ஆழமாகச் செல்லும். இது மண் அரிப்பைத் தடை செய்யும். அடி நிலத்தைப் பாதுகாக்கும் அரிய அரணாகவும் அமையும்.
- உடையாதபடி ஏரியைக் காப்பாற்ற, அதன் கரைகளில் பனைமரம் நடுவது பண்டைய வழக்கம். கஜா புயல் வீசியபோது தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆனால், பனை மரங்கள் புயல் காற்றின் வேகத்தைச் சமாளித்தன.
- பனைமரத்தின் தண்டு பாகம், கருப்பு நிறமாக இருக்கும். செதிள் பெற்றிருக்கும். இது வலிமையுடனும் விளங்கும்.
- இதை நீளவாக்கில் அறுத்துப் பனங்கழி தயார் செய்வார்கள். முற்கால ஓட்டு வீடுகளில் இந்தப் பனங்கழிகள் மேற்பகுதியில் பொருத்தப்பட்டு, அவற்றின் மேல், குறுக்கு வாட்டில் மூங்கில்கள் இருத்தப்படும். அவற்றின்மேல் ஓடுகள் அழகாக அடுக்கப்படும்.
- பனங்கழிக்கு பதிலாக, மரக்கழி வைக்கப்படுமானால், ஓடுகளின் பாரம் அதிகமாகி, மரத்துண்டு முறிந்து கீழே விழும். ஆனால், பனங்கழி, வளையுமே தவிர ஒடியாது.
- பனையின் உச்சியில் ஓலை இருக்கும். மயிலின் விரிந்த தோகையைப் போல், பனை ஓலை விளங்கும்.
- பனை ஓலை குழந்தை முதல் கிழவன் வரை அனைவருக்கும் பயன்படும். முன்பு கிலுகிலுப்பை என்ற விளையாட்டுப் பொருள் இருந்தது. பனையால் பின்னப்பட்ட சிறு பெட்டி போன்ற அதனுள் சிறிய கற்கள் போடப்படும்.
- அதன் கைப்பிடிக் காம்பைப் பிடித்து ஆட்டும் போது மென்மையான ஒலி வரும். அந்த ஒலி அழும் குழந்தைக்கு மகிழ்ச்சி ஊட்டும்; மயங்க வைக்கும்; தூக்க இன்பத்துக்கும் அழைத்துச் செல்லும்.
- மின் விசிறி முகம் காட்டுவதற்கு முன்பு பனை ஓலை விசிறியே எங்கும் அரசாட்சி நடத்தியது. அது வெப்பத்தை விரட்டியது; தென்றலை அழைத்து வந்தது.
- முதியவர்கள், தங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விசிறியை அசைத்துக் கொண்டே கலந்துரையாடி மகிழ்ந்து பொழுது போக்கிய காலம் முன்பு இருந்தது.
- பனை ஓலையால் பின்னப்பட்ட பாயை தரையில் விரித்து அதன் மேல் படுத்து நிம்மதியாகத் தூங்கிய காலமும் இருந்தது.
- பொன் அணியை கம்மலாக சூடிக்கொள்ள முடியாத பெண்களின் காதணியாகச் சிறு பனை ஓலைச் சுருள் அமர்ந்து ஆறுதல் அளித்த காலமும் தமிழகத்தில் இருந்தது.
- அல்வா சுவையான இனிப்பு. பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட சிறிய பெட்டிக்குள் அதை வைத்து விற்கும் செயல்முறை தென்னகத்தில் உண்டு.
- நெகிழி (பிளாஸ்டிக்) தமிழ் மண்ணில் வேர் ஊன்றுவதற்கு முன்னால், பனை ஓலை பரவலாக இருந்தது.
- பனை ஓலையைக் கொண்டு குடுவை - அகலமான வாய்ப்பகுதி, குடம் போன்ற நடுப்பகுதி, தட்டையான அடிப்பகுதி உடைய கொள்கலம் - தயாரிக்கப்படுகிறது. இதில் அரிசி, பருப்பு முதலியவற்றைச் சேமித்து வைக்கலாம்.
- பனை ஓலையால் கைப்பை உருவாக்கலாம். ஒரு முழுப் பனை ஓலையை விரித்து அதன் இரு முனைகளையும் இணைத்துவிட்டால், கிழிபடாமல் இருக்கும் அதனுள்ளே தண்ணீர் ஊற்றி எடுத்துச் செல்ல முடியும்.
- பனை மரத்துப் பதநீரை அதில் ஊற்றிக் குடிக்க முடியும். இது தோண்டி எனப்படும். இதன் குறுக்கே மூங்கில் துண்டு ஒன்றைக் கட்டினால் அது கைப்பிடி போல் அமையும்.
- பனை ஓலை, நம் தலைக்கு தொப்பியாகவும் வடிவம் எடுக்கும். சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். இது மழைக் காலத்திலும் மனிதனுக்கு உதவும்.
- பனை ஓலையால் நெய்யப்பட்ட, முக்காட்டுப் போர்வையை மேலே போட்டுக்கொண்டு, கொட்டும் மழையிலும் நனையாமல் மனிதர் முன்பு நடந்தார்கள்.
- பின்னப்பட்ட பனை ஓலை, புத்தகம் அல்லது துணி போன்றவற்றைக் கட்டும் பொதியின் மேலுறையாக கட்டு தாளாக பயன்படுத்தப்பட்டது.
- தட்பவெப்ப சமனியாக இது இருப்பதால் பொருள்கள் கட்டுமான விரிப்பாக அமைந்தது. முன்பு, தீபாவளியின்போது பேரொலி எழுப்பி வெடிக்கக்கூடிய பனைஓலைப் பட்டாசு அதிகமாக விற்பனையானது.
கற்பகத் தரு
- தமிழ் இலக்கிய வரலாற்றில் பனை ஓலை முக்கிய இடம் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியங்களை பனை ஓலைச் சுவடிகளே காப்பாற்றி வந்தன.
- தமிழகத்தில் தாள் (பேப்பர்) அறிமுகமாகும் காலம் வரை பனை ஓலையே ஆட்சி செய்து வந்தது. இந்தப் பனை ஓலை நூறு ஆண்டு வரை அழியாமல் இருக்கும்.
- பனம்பூவில் இதழ் இல்லை, மென்மையும் இல்லை. இது குட்டையான, தடித்த சிறு முருங்கைக்காய் போல் இருக்கும்.
- இந்தப் பூவைக் கருக்கிப் பந்து போலாக்கி கார்த்திகை மாதத்தில் "மாவளி' சுற்றுவார்கள். அதிலிருந்து தீப்பொறிகள் பறக்கும். அவை ஒளி வீசும் மின்மினிப் பூச்சிகள் போன்று அழகாகக் காட்சி தரும்.
- பனம்பூத் தண்டைச் சீவி அதன் அடிப்புறத்தில் சிறிய பானையைத் தொங்கவிடுவார்கள்.
- சீவப்பட்ட பாகத்திலிருந்து சாறு ஒழுகும் அந்தப் பானையின் உட்புறத்தில் சுண்ணாம்பு தடவி இருந்தால், அது பதநீராகும். சுண்ணாம்பு தடவாமல் இருந்தால் அது பனங்கள் ஆகும்.
- பனஞ்சாற்றிலிருந்து, பனை வெல்லம் தயாரிக்கப்படும். இது "கருப்பட்டி' எனப்படும். பனஞ்சாற்றிலிருந்து பனங்கற்கண்டும் கிடைக்கும்.
- பனங்காய் அற்புதமான பொருள். அதில் மூன்று நுங்குகள் இருக்கும். வழுவழுப்பும் இன்சுவை நீரும் கொண்ட அது அனைவராலும் விரும்பி உண்ணப்படும்.
- பனங்காய் பழுத்துப் பனம்பழமாகும். இதனை வேகவைத்து உண்பார்கள். பனைவிதையை மண்ணில் புதைத்தால் அதிலிருந்து பனங்கிழங்கு தோன்றும். இதுனையும் வேகவைத்து உண்பார்கள்.
- இன்றும் இந்தக் கிழங்கைப் பக்குவமாகக் காய வைத்து, ஒடித்து ஈழத்தமிழர் சாப்பிடுகிறார்கள், இதற்குப் புழுக்கொடியல் என்று பெயர்.
- பனஞ்சாறு உடல் சூட்டைத் தணிக்கும். பனம்பழம் வயிற்றுப்புழுவைக் கொல்லும். பனங்கிழங்கு காமாலையை வெல்லும். பனை ஓலையைச் சுட்டுத் தேனில் குழைத்து உண்டால் விக்கல் நிற்கும், வாந்தி போகும். பனைமரம் பறவைகளின் வாழிடமாகவும் அமைகிறது. பனங்கிளி, பனங்காடை ஆகிய பறவைகள் அதில் தங்கி வாழ்கின்றன.
- பனைமரங்கள் இன்று வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
- முன்பு 50 கோடி பனைமரங்கள் இருந்தன என்றும், இன்று 4 கோடி மரங்களே இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் அறிவிக்கிறார்கள். செங்கல் சூளையின் எரிபொருளாதல், பனைமரங்கள் நிறைந்த இடத்தை வீடு கட்டும் மனையாக மாற்றுதல், பனம் பழம் தின்று, அதன் விதைகளைப் பரப்பும் குள்ள நரிகள் அழிக்கப்படுதல் முதலிய காரணங்களால் பனை மரங்களின் வளர்ச்சி அழிந்தது.
- தற்போது சில அமைப்புகள் பனைமரங்களின் பெருக்கத்திற்குத் தொண்டு செய்ய முற்பட்டுள்ளன.
- தமிழக அரசும் 2.5 கோடி பனைவிதை மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
- பனைபடு பொருள் நெகிழிக்கு மாற்றாவது மட்டும்மன்றி அந்நியச் செலாவணி ஈட்டவும் உதவும். இதன் மூலம் 200 கோடி ரூபாய் வரவு கிடைக்கும். கற்பகத் தருவான பனைமரத்தைப் பெருக்க பனைவாரியம் மீண்டும் செயற்பட வேண்டும்.
- பனைமரம் தமிழ் மண்ணில் அழிவதை நிறுத்துவோம்.
நன்றி: தினமணி (24 – 03 - 2021)