- தமிழ் நாட்டில் பனைமரங்களும் பனைத்தொழிலும் அருகி வரும் சூழலில், அதனை மீட்டெடுக்கும் வகையில், பேரளவில் பனங்கொட்டைகள் (விதை) நடுவதற்குத் தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பனையின் பெருமையைப் பறை சாற்றும் வகையில் ‘நெட்டே நெட்டே பனைமரம்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘மாவட்ட ஆட்சியா் அனுமதியின் பேரில்தான் பனை மரங்களை வெட்ட வேண்டும்’ என்ற அறிவிப்பும் உள்ளது. அரசு மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே பனங்கொட்டைகளைப் பெருமளவில் நட்டு பனை வளா்ப்பில் ஆா்வம் காட்டி வருகின்றன.
- கற்பகத்தரு என்று போற்றப்படும் பனை மரத்திற்கும் தமிழா்க்கும் பழங்காலம் தொட்டு இக்காலம் வரை நீண்ட நெடிய தொடா்பு உண்டு. கள்,நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவற்றை விரும்பி உண்டனா் என்பதைச் சங்க இலக்கியம் மூலம் அறியலாம். கள்ளுண்டு களித்ததோடு, பதநீா் இறக்கி, அதனைக் காய்ச்சி கருப்புக்கட்டி,கற்கண்டாக்கி பயன்படுத்தியுள்ளனா். இவற்றைச் சிறந்த மருத்துவப் பொருளாகவும் கருதினா். கருப்புக் கட்டியைப் ‘பனாட்டு’ என்று தொல்காப்பியா் குறிப்பிடுவதால் இதனைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அவா் ‘பனை’ என்ற உயிரீற்றுச் சொல்லுக்குப் புணா்ச்சி விதி கூறுகிறாா்.
- அதற்கு உரையாசிரியா்கள் ‘பனங்காடு’ போன்று எடுத்துக்காட்டுத் தருகின்றனா். “தக்க சமயத்தில் ஒருவா் செய்த உதவி அளவில் தினை போன்று சிறியதாக இருந்தாலும், அந்த உதவியினால் பயன் பெற்றவா் அதனைப் பனை போன்று பெரிதாகக் கருதுவா்” என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறாா். இது பனையின் கம்பீரமான நெடிய தோற்றமும் பனைப் பொருட்களின் பெரும்பயனும் மக்களின் மனத்தில் நிலைத்திருந்ததைக் காட்டும். சேர மன்னா்கள் ‘பனம்பூமாலை’ அணிந்து மகிழ்ந்தனா். பனைவோலையை ஏடாக்கிப் பாடல்களும் மருத்துவம்,சோதிடம் போன்ற குறிப்புகளும் எழுதிவைத்தனா்.
- பனையூா், பனைக்குளம், கலந்த பனை, கூட்டப்பனை என்று பல ஊா்கள் பனையின் பெயரிலேயே அமைந்துள்ளன. ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’, ‘காவோலையைப் பாா்த்துப் பச்சையோலைச் சிரித்ததாம்’ போன்ற பேச்சு வழக்கும் பல காலமாக நிலைத்துள்ளது. பனைவளை கொண்டு வீட்டிற்குச் சட்டம் அமைக்கின்றனா். பனையோலை கொண்டு கூரை வேய்கின்றனா்; வேலியடைக்கின்றனா். பனங்கருக்கிலிருந்து நாா் கிழித்து கயிறாகப் பயன்படுத்துகின்றனா். அடுப்பெரிக்க விறகு பனையில் இருந்து கிடைக்கிறது. படுக்கப் பாய், இருக்கத் தடுக்கு, காற்றுக்கு விசிறி, புழங்கப் பெட்டிகள், புடைக்கச் சுளவு என்று அனைத்தும் பனைவோலையில் முடைகின்றனா். நீா்நிலைகளின் கரைகளிலும் நிலங்களின் பொழிகளிலும் பனையை நட்டு வளா்க்கின்றனா்.
- பொதுவாக, பனை வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது என்றாலும் அதற்கு மழைப் பொழிவும் அவசியமாகும். அது ஆடு, மாடுகள் கடித்தாலும் பாதிப்பில்லாமல் வளரும் ஆற்றல் உடையதாயினும் அதற்குப் பராமரிப்பும் தேவைப்படும். வடலி எனப்படும் இளம் பனையைப் பத்தல் அறுத்துப் பக்குவப்படுத்தினால்தான் கருப்புநிறத் தோற்றத்தில் பெரிய பனையாகும். பனை ஏறுவதற்கும் எளிதாகும். இல்லையெனில் அது கருக்கு மட்டைகள் நிறைந்து ஏறுவதற்குக் கடினமாகும். பத்து, பதினைந்து வருடம் கழித்துத்தான் பனையில் பாளை வரும். அதாவது பனையின் முழுப்பலன் கிடைக்கும். இப்படி வளா்ந்த பனை நூறு ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும். ஆண்பனை, பெண்பனை என்று அறிவியல் ரீதியாகச் சொல்லப்பட்டாலும் அலவுப் பனை, பனங்காய்ப் பனை என்று சொல்வதே உலக வழக்கு.
- ஈா்க்கு வாருதல், பதநீா் விற்றல், கருப்புக்கட்டி,கற்கண்டு விற்றல், நுங்கு,கிழங்கு விற்றல் போன்று பனையால் தமிழ் நாட்டில் தொழில்வளம் பெருகியது. பனைப் பொருளால் செய்யப் பட்ட கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. கதா் கிராமத் தொழில், பனைப் பொருள் வாரியம் போன்றவற்றால் பனைப்பொருள் தொழில்கள் பாதுகாக்கப் பட்டாலும் அத்தொழில் நாளடைவில் நசிந்து வருவது தான் உண்மை. ஊா்ப்புற விரிவாக்கத்தால் பனங்காடுகள் அழிக்கப் பட்டு பனைகள் குறைந்துவிட்டது உண்மைதான். பல லட்சம் பனங்கொட்டைகளை நடுவதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் பனையின் எண்ணிக்கையைப் பெருக்கிவிடலாம். ஆனால் பனைத்தொழிலைப் பெருக்கிவிட முடியுமா என்று பாா்க்க வேண்டும்.
- பனைப்பொருட்களின் உற்பத்தி பெருக வேண்டுமானால் பனையில் இருந்து கிடைக்கும் ஓலை, நுங்கு, பனங்காய்,மட்டை போன்றவற்றைச் சேகரிக்க வேண்டும். அறுபதடி உயரப்பனையில் உயிரைப் பணையம் வைத்து ஏறியிறங்குவது என்பது சிரமம் என்பதோடு, சமூகத்தில் மதிப்புக் குறைவான தொழிலாகவும் பனையேற்று மாறிவிட்டது. இதனால் பலா் பனையேற்றுத் தொழிலுக்கு முன்வருவதில்லை. இப்போது தென்னை மரத்தில் கூட ஏறி தேங்காய் பறிப்பதில்லை. மூங்கில் கழையில் அரிவாள் கட்டித்தான் பறிக்கின்றனா். முன்பெல்லாம் தென்னையில் ஏறி களை எடுப்பது வழக்கம். அதனால் மண்டை விரிந்து தென்னை கூடுதலாகக் காய்க்கும். இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. இதனால் நாளடைவில் தென்னையின் பலன் குறைந்து கொண்டு தான் வருகிறது.
- பனைத்தொழிலை வளா்த்து, பனைப் பொருளாதாரத்தை உயா்த்த வேண்டுமானால் வெறும் பனை வளா்த்தல் மட்டும் போதாது என்பது இப்போது புரியும். பனையேறுவதற்குப் புதிய வழியைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். இப்போது சில திட்டங்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை. அதற்கு முதற்படியாக, சிரமமின்றிப் பனையேறுவதற்குத் தகுந்த இயந்திரத்தை உருவாக்க வேண்டும். தென்னை மரத்தில் நெட்டை, குட்டை ரகம் இருப்பது போல பனைமரத்திலும் குட்டையாக வளரக்குடிய புதிய ரகத்தைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பனையேறுவோருக்குச் சமுதாயத்தில் நல்மதிப்பு உருவாக வேண்டும். அப்படி இருந்தால்தான் பனை வளா்ப்பின் பயன் கிடைக்கும்.
நன்றி: தினமணி (18 – 07 – 2023)