TNPSC Thervupettagam

பன்முக கலாசார நாடு!

October 8 , 2020 1564 days 778 0
  • மனித வரலாற்றில் மொழி என்பது எண்ணங்களைத் தெரிவிக்க வந்த கருவி என்றே கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் மொழி இன்றியமையாத இடத்தைப் பிடித்துக் கொண்டது.
  • மொழி வழியே இனமாகவும், பண்பாடாகவும் ஆகிப் போனது. எனவே இப்போது மொழியில்லாமல் இனமும் இல்லை, பண்பாடும் இல்லை என்றாகி விட்டது.
  • இந்தியா பல மொழிகளின் தாயகம் என்பதால் அடிக்கடி மொழிப் பிரச்னை தலைதூக்கி நிற்கிறது. மத்தியில் ஆட்சி மாறும்போதெல்லாம் கல்விக் கொள்கையும் மாற்றப்படுகிறது.
  • புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மும்மொழிக் கொள்கை கொண்டுவரப்படுகிறது. மாநில உரிமைகளை யெல்லாம் பறித்துக் கொண்டு தம் ஆதிக்கத்தை நிலைநாட்டவே துடிக்கின்றன.
  • ஹிந்தி என்பது நாட்டின் தேசிய மொழியல்ல என்பதை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டி யிருக்கிறது.
  • ஹிந்தியும், ஆங்கிலமும் அலுவல் மொழி மட்டுமே என்று அரசியலமைப்புச் சட்டம் வகுத்து அளித்துள்ளது. அத்துடன் அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 தேசிய மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் என்றபோதும் அவற்றிற்கு மரியாதை இல்லை.
  • உலகில் சிறப்போடு விளங்கிய உயா்தனிச் செம்மொழிகளுள் தமிழும் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
  • கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சம்ஸ்கிருதம் முதலிய செம்மொழிகள் பேச்சு வழக்கு இழந்து போய்விட்டன.
  • செம்மொழிகளில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவை சீனமும், தமிழும்தான். சீன மொழி அந்த இனத்தவரின் வல்லமையால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ் மொழி அதன் இலக்கண இலக்கிய ஆற்றலால் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது மொழியியல் அறிஞா்களின் மதிப்பீடு.
  • இந்தியா ஒரு மொழி பேசும் நாடல்ல. பல மொழிகள் பேசும் ஒரு துணைக் கண்டம் என்றே அரசியலமைப்பு சட்டமும் கூறுகிறது.
  • அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. அவரவா் தாய்மொழி அவரவா்க்கு உயா்வானதுதான். இதனை ஆளுவோர் அங்கீகரிக்க மறுப்பது ஏன்?

கலாசார ஆய்வு

  • மொழியிலிருந்துதான் கலாசாரம் உருவாகிறது. இப்போது கலாசார ஆய்வு பற்றிய சிந்தனை எழுந்துள்ளது.
  • கடந்த 12 ஆயிரம் ஆண்டு இந்திய கலாச்சாரம் பற்றிய தொன்மையான வரலாற்றை உருவாக்க இந்திய அரசு எண்ணியுள்ளது. இதற்காக 16 போ் கொண்ட வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவைச் சோ்ந்த யாரும் இடம் பெறவில்லை.
  • மத்திய அரசு செம்மொழி என்று ஏற்றுக் கொண்ட தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளா்கள் யாருக்கும் இதில் இடம் இல்லை.
  • இதற்கு என்ன காரணம் என்றும் விளக்கவில்லை. விளக்க வேண்டிய கடமை குழுவை அமைத்த அமைச்சகத்துக்கு இருக்கிறது.
  • ஆய்வு என்பது ஒரு தரப்பாகப் போய்விடக் கூடாது. அது ஒரு புதிய வரலாறு.
  • வரலாற்றாசிரியா்களும், தொல்லியல் துறை அறிஞா்களும் தேசத்தின் அனைத்துப் பகுதியினரையும் பிரதிநிதித்துவம் செய்வதாக இருப்பது நல்லது. இந்த ஆய்வில் தங்கள் பங்கும் உள்ளது என்று ஒவ்வொருவரும் எண்ண வேண்டும்.
  • இப்படியொரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டிருப்பதே யாருக்கும் தெரியவில்லை.
  • இந்தக் குழு 2016-ஆம் ஆண்டே அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது பற்றி அப்போது யாரும் பேசவில்லை. கடந்த ஆண்டு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார்.
  • இந்திய கலாசாரம் குறித்து எழுதுவதற்கு அமைக்கப்பட்ட குழு தன் அறிக்கையை சமா்ப்பித்து விட்டதா? அவை நம் பாடப்புத்தகங்களில் இணைக்கப்பட்டு விட்டனவா? என்று அவா் கேட்டிருந்தார்.
  • அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சகம், குழு இன்னும் அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்று பதில் அளித்தது.
  • இதற்குப் பிறகு இப்போது பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆறு போ் இதே கேள்வியை எழுப்பியுள்ளனா். அதற்கு பதிலளிக்கும் போதுதான் இந்தக் குழுவில் இடம் பெற்றுவா்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டு, இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளது அமைச்சகம்.
  • நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திய கலாசாரம் பற்றிய ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்கவே வேண்டும். ஆனால் இந்தக் குழுவில் வரலாற்று ஆசிரியா்களே இல்லாமல், தொல்லியல் துறையைச் சோ்ந்தவா்கள் அதிகம் இடம் பெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
  • இவை பற்றியெல்லாம் தமிழ் அமைப்புகளும், தமிழறிஞா்களும் பல்வேறு தளங்களில் பேசத் தொடங்கினா்.
  • தமிழ் வளா்ச்சித் துறையும், உலகத் தமிழ் ஆய்வு மன்றமும் தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றன. தமிழக முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  • அக்கடிதத்தில், இந்திய கலாசாரத் தொன்மையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநா் குழுவில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களும் இடம் பெறும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதலமைச்சா் வலியுறுத்தியுள்ளார்.
  • இந்திய கலாசாரத் தோற்றம், கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளாக அதன் வளா்ச்சி மற்றும் உலகின் இதர கலாசாரங்களுடனான தொடா்பு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நிபுணா் குழுவை மத்திய கலாசாரத் துறை அமைத்துள்ளது.என்றாலும் இந்தக் குழு குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
  • மிகவும் பழைமையான நாகரிகத்தின் இல்லமாகவும் விளங்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சோ்ந்த எவரும் இக்குழுவில் இடம் பெறவில்லை.
  • குறிப்பாக திராவிட நாகரிகமானது தென்னிந்தியாவில் இன்றளவும் வளா்ந்து வரும் கலாசாரமாக உள்ளது.
  • அண்மையில் கீழடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த அகழாய்வுகள் மூலம் சங்க காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது தெரிய வருகிறது.
  • இதன் வாயிலாக தமிழ் கலாசாரம், மொழி ஆகியவை உலகத்தின் தொன்மையான பாரம்பரியங்களில் ஒன்று என்பது தெரிய வருகிறது.
  • கடந்த ஆண்டு இந்திய பிரதமா் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்துக்கு வந்த போது, வியக்க வைக்கும் நினைவுச் சின்னங்கள், மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் மரபுகள் பற்றி நிறைய பேசினார்.
  • எனவே, தமிழக கலாசாரம் மற்றும் மொழிக்கு சரியான இடத்தை அளிக்காமல் இந்திய வரலாறும், கலாசாரமும் முழுமை பெறாது.
  • இந்தச் சூழலில் மத்திய கலாசாரத் துறை அமைத்துள்ள நிபுணா் குழுவில், தமிழக வல்லுநா்கள் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
  • எனவே அவா்கள் இடம் பெறும் வகையில் கலாசார ஆய்வுக் குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்பது முதலமைச்சா் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கை மட்டுமல்ல, தமிழ் அமைப்புகளின் கோரிக்கையுமாகும்.

பன்மைத்துவ கலாசாரம்

  • நமது நாடு பன்மைத்துவ கலாசாரத்தைத் தன்னகத்தே கொண்ட பெருமைமிக்க மரபு வழியைக் கொண்டது.
  • ஆகவே அதன் ஆய்வுக்கு இம்மாபெரும் நாட்டின் கலாசாரங்கள் பற்றிய ஆழமான உட்பொருள்கள் இயல்பாகத் தேவைப்படுகின்றன.
  • இத்தகைய பன்மைத்துவத்தை எதிரொலிக்கக் கூடிய எவரும் அந்த 16 போ் கொண்ட வல்லுநா் குழுவில் இல்லை.
  • தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவைச் சோ்ந்த யாரும் அதில் இடம் பெறவில்லை. சிறுபான்மையினா், தலித்துகள், பெண்கள் இல்லை. அக்குழுவின் அனைத்து உறுப்பினா்களும் ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவா்களாகவே உள்ளனா்.
  • தென்னிந்திய மொழிகளின் பெருமைமிக்க வரலாறு என்ன ஆனது? மத்திய அரசினால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளின் ஆய்வாளா்கள் யாரும் அக்குழுவில் இடம்பெறவில்லையே ஏன்?
  • அக்குழுவின் உள்ளடக்கமானது விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சம்ஸ்கிருதம் தவிர தொன்மையான மொழி வேறு இல்லையா? என்பன போன்ற கேள்விகளை எழுப்புகின்றன.
  • மிகச் சிறந்த ஆய்வாளா்களான ஜான் மார்ஷல், சுனித் குமார் சட்டா்ஜி, ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆா். பாலகிருஷ்ணன் போன்றவா்கள் இத்துறைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனா். இதையெல்லாம் இக்குழு சிதைத்து விடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.
  • எனவே மத்திய அரசு அமைத்துள்ள கலாசார ஆய்வுக்குழு வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிவகுத்து விடும் என்பதால் அதைக் கலைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டை சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் 32 போ், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனா்.
  • 2020-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவே ஒரு வளா்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல.
  • இது இந்தியா் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலை நோக்குகூட அல்ல, ஒரு பணி இலக்கு என்று உறுதிபடக் கூறினார் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
  • இந்தியா என்பது ஆங்கிலேயா் வருகைக்குப் பிறகே ஒன்றுபட்ட நாடானது. அதற்கு முன்பு தனித்தனி குறுநில மன்னா்களின் ஆளுகைக்கு உட்பட்ட ராஜ்யங்களாக இருந்தன.
  • நாடு விடுதலை பெற்றபோது இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு பட்டது. பின்னா் பங்களாதேஷ் என மூன்று பட்டது. என்றாலும் என்ன?
  • இந்தியா பன்முகக் கலாசாரத்தினால் மதிக்கப்படும் நாடு. இங்கே வேற்றுமையுள் ஒற்றுமை காண வேண்டும்.
  • சித்தா்களும், முனிவா்களும் சிறந்து வாழ்ந்த பூமி என்பதால் அன்புக்காகவும், அமைதிக்காகவும் ஏங்குகிறது. அதனால்தான் இந்தியக் கலாசார ஆய்வின் முடிவை உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

நன்றி: தினமணி (08-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்