TNPSC Thervupettagam

பன்றியின் இதயம் மனிதருக்குப் பொருந்தியது எப்படி?

January 18 , 2022 930 days 450 0
  • கடந்த ஜனவரி 7-ல் நவீன மருத்துவம் உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி சாதனை செய்துள்ளது.
  • உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குத் தேவையான மனித உறுப்புகள் கிடைக்காமல், உலகெங்கும் இந்த அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், விலங்குகளின் உறுப்புகளையும் மனிதருக்குப் பயன்படுத்த முடியும் எனும் நம்பிக்கையை இது விதைத்துள்ளது.
  • அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்குப் பன்றியின் இதயத்தை மருத்துவர் கிரிஃபித் பொருத்தினார்.
  • இன்றுவரை அந்த இதயம் சீராக இயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் செயல்முறையைச் சொல்வது எளிது. நடைமுறையில் கடினம்.

உதவும் பன்றி உறுப்புகள்

  • மற்ற விலங்குகளைவிடப் பன்றியின் உறுப்புகள் கிட்டத்தட்ட மனிதர்களின் உறுப்புகளை ஒத்திருப்பதால், உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பொருத்தமானவையாக இவை தேர்வு செய்யப்படுகின்றன.
  • முதன்முதலில் 1838-ல் பன்றியின் ஒளிப்படலம் (Cornea) மனிதக் கண்ணில் பொருத்தப் பட்டது. 1964-ல் சிம்பன்சி குரங்கின் இதயம் மனிதருக்குப் பொருத்திப் பார்க்கப் பட்டது.
  • அது தோல்வியில் முடிந்தது. 1984-ல் ஆப்பிரிக்க/அரேபியக் குரங்கின் (Baboon) இதயம் ஃபாயி (Fae) எனும் குழந்தைக்குப் பொருத்தப்பட்டது. அது 21 நாட்களுக்கு உயிரோடு இருந்தது.
  • பொதுவாக, ‘மாற்றின உறுப்பு மாற்றுச் சிகிச்சை’யில் (Xenotransplantation) பொருத்தப்படும் உறுப்புகளை மனித உடல் நிராகரித்துவிடும்.
  • அப்படியே ஏற்றுக்கொண்டாலும் எதிர்கால நிராகரிப்பைத் தடுக்கத் தடுப்பாற்றல் எதிர் வினையை மட்டுப்படுத்தும் வீரியமான மருந்துகளைப் பயனாளி வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும்.
  • அதனால்தான் இம்மாதிரியான அறுவைச் சிகிச்சைகள் வேகம் பெறவில்லை. ஆனாலும், சோதனை முயற்சியாகச் சென்ற அக்டோபரில் நியூயார்க் மருத்துவமனை ஒன்றில் மூளை இறப்பு ஏற்பட்ட ஒருவருக்குப் பன்றியின் சிறுநீரகம் உடலுக்கு வெளியில் பொருத்தப்பட்ட அதிசயம் நடந்தது.
  • பன்றியின் சிறுநீரகச் செல்களில் சர்க்கரை வடிவில் ‘ஆல்பா-1’ நொதி இருக்கிறது. மனித உடலில் இது இல்லை.
  • பன்றியிடமிருந்து பெறப்படும் சிறுநீரகத்தில், இந்த நொதியைக் கண்டுகொள்ளும் மனித உடல், இதை அந்நியனாகக் கருதி, மேற்படி உறுப்பை நிராகரித்துவிடுகிறது. கலிபோர்னியாவில் இருக்கும் ‘சிந்தெடிக்ஸ் ஜீனாமிக்ஸ்’ நிறுவனம், மரபணு மாற்று உறுப்புகளை வளர்ப்பதில் புகழ்பெற்றது.
  • இந்த நிறுவனம் ‘ஆல்பா-1’ நொதி இல்லாத பன்றியை மரபணு மாற்று முறையில் வளர்த்துக் கொடுத்தது. அதன் சிறுநீரகத்தை மூளை இறப்பு நோயாளிக்கு நியூயார்க் மருத்துவர்கள் பொருத்தினார்கள்.
  • அதனால், அதில் பிரச்சினை எழவில்லை. இதை ஒரு மைல்கல் நிகழ்வாக மருத்துவ உலகம் பார்த்தது. இப்போது பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் மேரிலேண்ட் மருத்துவமனை மருத்துவர்கள்.

சாத்தியமானது எப்படி?

  • பன்றிகளில் மரபணு வரிசையைத் துல்லியமாக மாற்றியமைக்கும் ஆராய்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கும் மற்றொரு அமெரிக்க நிறுவனம் ‘ரெவிவிகார்’ (Revivicor).
  • இந்த நிறுவனத்தினர், பன்றி செல்களில் உறுப்பு நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கும் 4 வகை மரபணுக்களை ‘கிரிஸ்பர்’ (CRISPR/Cas9) எனும் மரபணுச் செதுக்கியால் செதுக்கி, அவற்றைச் செயலிழக்கச் செய்கின்றனர்.
  • அடுத்து, பன்றி செல்லின் மரபணு வரிசையில் புதிதாக 6 மரபணுக்களைப் புகுத்தி விடுகின்றனர்.
  • பிறகு, பன்றியின் கருமுட்டையிலிருந்து மரபணுவை நீக்கிவிட்டு, அதனுள் மேற்சொன்ன மாற்றியமைக்கப்பட்ட மரபணு உள்ள பன்றி செல்லைக் கலந்துவிடுகின்றனர்.
  • இப்போது இது கருக்கோளமாகிறது (Zygote). அதை ‘வாடகைத் தாய்’ பன்றியின் கருப்பையில் பதித்துவிடுகின்றனர். அதில் வளர்கருவாக (Embryo) வளர்ந்து சிசுவாகி 114 நாட்களில் மரபணு மாற்றமுள்ள பன்றிக்குட்டி பிறக்கிறது. படியாக்கம் (Cloning) மூலம் டோலி ஆடு பிறந்ததுபோல்தான் இது.
  • இதன் பலனாக, மனித உடல் இந்த உறுப்புகளை அந்நியனாகக் கருதும் வாய்ப்பு குறைந்துவிட, உறுப்பு நிராகரிப்பு தவிர்க்கப்படுகிறது.
  • சாதாரணமாகவே பன்றிகளின் மரபணுக்களில் ரீட்ரோ வைரஸ்கள் வசிப்பதுண்டு. இவை உறுப்பு மாற்றத்துக்குப் பிறகு பயனாளிக்குத் தொற்றை உண்டாக்கி, உறுப்பு நிராகரிப்பைப் பூதாகரமாக்கும்.
  • பன்றியின் மரபணுக்களிலிருந்து 12 வகையான ரீட்ரோ வைரஸ்களை நீக்கியதன் மூலம் இது சரி செய்யப்படுகிறது.
  • இப்படி, ‘ரெவிவிகார்’ நிறுவனம் தயாரித்தளித்த மரபணு மாற்றுப் பன்றியின் இதயத்தையே பென்னட்டுக்கு மேரிலேண்ட் மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.
  • உறுப்பு நிராகரிப்பைத் தடுக்கும் புதிய மருந்து ஒன்றை பென்னட் இப்போது பயன்படுத்துகிறார். இதுவரை அந்த இதயத்தை அவரது உடல் நிராகரிக்கவில்லை.
  • அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள பன்றியின் இதயம் மனித உடலுக்கு அந்நியமாகத் தெரியாத அளவுக்கு மரபணு மாற்றமுறையில் வளர்க்கப்பட்டது என்பதால், இந்த மருந்து இனியும் அவருக்குத் தேவைப்படுமா என்பது போகப்போகவே தெரியும்.

இந்திய மருத்துவரின் சாதனையும் வேதனையும்

  • பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பயன்படுத்த முடியும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பே அசாம் மாநில மருத்துவர் ராம் பருவா நிரூபித்திருக்கிறார். 1997, ஜனவரி 1-ல் 32 வயதான ஒருவருக்குப் பன்றியின் இதயத்தை அவர் பொருத்தினார்.
  • அந்த நோயாளி 7 நாட்களுக்கு உயிருடன் இருந்தார். அவருக்குப் பல தொற்றுகள் இருந்ததால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அரசிடம் இந்த சிகிச்சைக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்ற காரணத்துக்காக உறுப்பு மாற்றுச் சட்டம், 1994-ன் கீழ் பருவா கைதுசெய்யப்பட்டார்.

வரலாறு படைக்குமா?

  • இன்றைக்கு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். இந்தியாவில் இதயச் செயலிழப்பால் 50 ஆயிரம் பேர் அவதிப்படுகின்றனர்.
  • இவர்களில் அதிகபட்சம் 15 பேருக்குத்தான் இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் 1.8 லட்சம் பேருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நிலையில், 6 ஆயிரம் பேருக்குத்தான் மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கிறது.
  • வருடத்துக்கு 30 ஆயிரம் பேருக்குக் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 1,500 பேருக்கு மட்டுமே இது சாத்தியப்படுகிறது.
  • இந்த நிலையில் மரபணு மாற்றுப் பன்றிகளின் உள் உறுப்புகளை மனிதருக்கும் பயன்படுத்துவது சாத்தியமானால், அனுதினமும் உயிருக்குப் போராடிவரும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் காக்கப்படும். நவீன மருத்துவத்தில் புதிய வரலாறு படைக்கப் படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்