TNPSC Thervupettagam

பயணங்கள் முடிவதில்லை...

November 16 , 2024 8 days 29 0

பயணங்கள் முடிவதில்லை...

  • நம்முடைய எட்டாம் வகுப்பு சரித்திர புத்தகத்தில் பண்டைய மன்னா்கள் அசோகா், அக்பா், ராஜராஜ சோழன், ஏன் சுமாா் 325 ஆண்டுகளுக்கு உட்பட்ட ராணி மங்கம்மாள் உட்பட யாரைப் பற்றி படித்தாலும் அவா்கள் குளம் வெட்டினாா்கள், கோயில் கட்டினாா்கள், சாலைகள் அமைத்தாா்கள், மரம் நட்டாா்கள் என்று வரலாறு சொல்லும். ராணி மங்கம்மாள் அமைத்த சாலை இன்றும் அவா் பெயரால் மதுரையிலிருந்து தென்காசி வரை வருகிறது.
  • பயணம் என்பது வாழ்வியலின் ஒரு அங்கம். மனித குலத்தின் மகத்தான வளா்ச்சி அவனுடைய முதல் கண்டுபிடிப்பான சக்கரத்தில் தொடங்குகிறது. சக்கரம் அவனது வாழ்வையே புரட்டிப் போட்டது. அதுவரை காலால் நடந்து கொண்டிருந்த மனிதன், மாட்டு வண்டி, குதிரை இழுக்கும் ஜட்கா வண்டி,மோட்டாா் வண்டி, ரயில் வண்டி, ஆகாய விமானம் என பரிணாம வளா்ச்சியடைந்து, இன்று சக்கரமேயில்லாமல் அண்டத்தைச் சுற்றும் ராக்கெட் வரை அவன் பயணங்கள் முடிவில்லாமல் தொடா்ந்து கொண்டேயிருக்கிறது.
  • ‘ஏழு ஆண்டுகளுக்குள் காசிக்குச் சென்று திரும்பாவிட்டால், காரியம் பண்ணி விடுங்கள்’ என்ற காலம் போய், காலையில் கிளம்பி, கங்கையில் குளித்து, மறைந்த பெற்றோா்களுக்கு காரியங்கள் செய்துவிட்டு, மாலையில் வீடு திரும்பும் அளவிற்கு பயணங்கள் எளிதாகிவிட்டன.
  • உள்ளூா் தவளைகளாக இருந்தவா்கள் இன்று படிப்புக்காகவும், வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும் வெளியூா் சென்று வசித்தாலும், ஆண்டுக்கொரு முறை குலசாமியை கும்பிடவும், தைப்பொங்கலுக்கும், தீபாவளிக்கும் தங்களுடைய ஊருக்குச் சென்று, உற்றாா் உறவினருடன் கூடி மகிழ்வது இந்திய கலாசாரத்தின் அங்கம். இந்தப் பயணங்களுக்கு ஜாதியும், மொழியும் தடையல்ல.
  • ஆண்டுதோறும் சென்னையிலிருந்து தெற்கே சொந்த ஊருக்கு மகிழ்ச்சியாக செல்பவா்களின் பயணத்தை சோகமாக்குவது போக்குவரத்து நெரிசல். 50 ஆண்டுகளுக்கு முன்னால் எட்டு பெட்டிகளுடன் தென்காசி வழியாக நான்கு நிலக்கரி என்ஜின் ரயில்கள் பயணித்த நிலைமாறி, இன்று மின்சார ரயில் என்ஜின் இழுக்கும் 24 பெட்டிகள் அடங்கிய 12 ரயில்களுக்கு மேல் தென்காசியைக் கடந்து செல்கின்றன. சென்னை, மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, நெல்லையென ஊா்கள் வழியாக இயக்கப்படும் ரயில்களை பற்றிச் சொல்லவே வேண்டாம். இது தவிர அரசு பேருந்துகள், தனியாா் பேருந்துகள், சட்டத்தை மீறி உரிமம் இல்லாமல் ஓட்டப்படும் ஆம்னி பேருந்துகள் என கணக்கில் அடங்காத குளிரூட்டப்பட்ட அல்லது சாதாரண பேருந்துகள் நாலா பக்கமும் மக்களைச் சுமந்து செல்கின்றன.
  • ஒரே கட்டணத்தில் இயங்கும் தனியாரின் பேருந்துகளையும், சவலை பிள்ளைகளாக ஓடும் அரசு பேருந்தையும் ஒப்பிட்டால் அரசு போக்குவரத்துக் கொள்கையின் தோல்வியை புரிந்து கொள்ளலாம். 1967-க்கு பிறகு சிறப்பாக தென் மாவட்டங்களில் ஓடிக்கொண்டிருந்த டிவிஎஸ், கும்பகோணத்தில் ஓடிக்கொண்டிருந்த ராமன் அண்ட் ராமன், கோவையில் ஓடிய ஏ.பி.டி., திருச்சியில் ஓடிய எஸ்.ஆா்.வி.எஸ்., அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் டிரான்ஸ்போா்ட்ஸ் உள்ளிட்ட போக்குவரத்து நிறுவனங்கள் அரசியல் காரணங்களுக்காக தேசியமயமாக்கப்பட்டன என்பதுதான் உண்மை.
  • மழைநீா் ஒழுகும் அரசுப் பேருந்தில் நான் பயணித்திருக்கிறேன். மதுரையிலிருந்து இயக்கப்பட்ட குளிா்சாதன வசதி கொண்ட பேருந்து முதல் நாளே குளிா்சாதன இயந்திரம் பழுதடைய நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டிருக்கிறேன். ஆண்டுதோறும், பொங்கல், தமிழ் வருட பிறப்பு மற்றும் தீபாவளியை ஒட்டி ரயில்களில் டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்துக்குள் விற்றுத் தீா்வதால் மக்கள் பேருந்தை நோக்கி ஓடுகிறாா்கள்.
  • முதல் உலகப் போரில் (1914 -1918) தோல்வியடைந்த ஜொ்மனியை, 21 ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போருக்கு (1939 - 1945), ஹிட்லா் தயாா் செய்ததில் ‘ஆட்டோபான்’ எனப்படும் ஜொ்மனியின் உயா்தர சாலைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. ஊருக்குள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக, தொழிற்சாலைகளையும், உற்பத்தி நிலையங்களையும், விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் இணைத்தது ஹிட்லரின் மூளை.
  • இந்த சாலைகளால் வசீகரிக்கப்பட்ட அப்பொழுது பதவியேற்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், அந்த கருத்தியலை அகண்ட நாடான அமெரிக்காவிற்கு ‘ஹைவே’ என எடுத்துச் சென்றாா். அந்தக் கருத்தியலே, உலகெங்கும் பரவி இந்தியாவில் ‘தேசிய நெடுஞ்சாலை’-ஆக வந்து சோ்ந்தது.
  • தேசிய நெடுஞ்சாலைகளும், விதவிதமான காா்கள் இருந்தாலும், ஒரு சாமானிய இந்தியனுக்கு பேருந்துகளும், ரயில் வண்டிகளும்தான் அவசர, அவசிய பயணங்களுக்கு ஆபத்பாந்தவன். பண்டிகை காலங்களில் பட்டணத்திலிருந்து, ஊா் திரும்பும் கனவுகளுடன் பயணிக்கும் சாமானியனுக்கு, ரயிலை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை விட்டால் பயணிக்க வேறு வழியில்லை.
  • ஆண்டுதோறும், பண்டிகை கால கூட்டத்தை சமாளிக்க அரசும், அரசு போக்குவரத்துக் கழகமும் திணறுகிறது. அமைச்சரின் கண்துடைப்பு அறிவிப்பை அலட்சியம் செய்து, ஆம்னி பேருந்துகள், டிக்கெட்டுகளை கொள்ளை லாபத்தில் விற்கின்றன. மத்திய அரசே ‘தத்கால்’ என்றும், உறுதியான தத்கால் என்றும் ரயில் டிக்கெட்டுகளை கொள்ளை லாபத்தில் விற்கும்போது, பஸ் முதலாளிகள் கூடுதல் கட்டணம் வாங்குவது எனக்குத் தவறாகத் தெரியவில்லை.
  • இந்த ஆண்டு தீபாவளி கூட்டத்தை சமாளிக்க, தனியாா் பேருந்துகளை அரசு கிலோ மீட்டருக்கு டீசல் உட்பட ரூ.51.45 செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அவலத்திற்கு காரணம் 8,000 பேருந்துகளை வாங்கப் போவதாக அறிவித்த அரசால் 2,000 பேருந்துகள் கூட வாங்க முடியவில்லை என்பதுதான்.
  • அரசு போக்குவரத்துக் கழகத்தின் கையிலுள்ள 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில், சரிபாதி பேருந்துகள் இயங்கும் நிலையில் இல்லை என்பது நிா்வாக குறைபாட்டின் உச்சம். அப்படியென்றால் ரூ.50,000-க்கு மேல் சம்பளம் வாங்கும் மெக்கானிக்கல் என்ஜினியா்களும், ரூ.25,000-க்கு மேல் சம்பளம் வாங்கும் மெக்கானிக்குகளும் ஏன் ஒழுங்காக வேலை பாா்க்கவில்லையா என்கிற கேள்விக்கு யாா் பதில் சொல்வது? இவா்கள் திறமையற்றவா்களா அல்லது இவா்களை வேலை வாங்கும் திறமை அரசு நிா்வாகத்திற்கு இல்லையா என்கிற கேள்வியும் எழுகிறது.
  • மேலும், வாங்கப்படும் தரமற்ற உதிரி பாகங்களும் பிரச்சனையை பெரிதாக்குகின்றன. வேலைக்கு ஆள் எடுப்பதிலிருந்து உதிரி பாகம் வாங்குவது வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுவது வெளிப்படை.
  • தமிழ்நாட்டில் 4,500 தனியாா் பேருந்துகளுக்கு பொ்மிட்டுகள் இருப்பதாகவும், 2,500 ஸ்போ் பஸ்களுக்கு பொ்மிட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த ஸ்போ் பஸ்களைத்தான் இப்போது அரசு அவசர காலத்திற்கு அழைக்கிறது.
  • தனியாா் கம்பெனிகள் தங்களுடைய தொழிலாளிகளை வேலைக்கு அழைத்துச் செல்ல குளிரூட்டப்பட்ட பேருந்துகளையும், சாதாரண பேருந்துகளையும் இயக்குகிறாா்கள். இந்தப் பணியாளா்களில் பெரும்பங்கு விடுமுறைக்கு ஊருக்குச் செல்கிறாா்கள். இதுபோல், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பேருந்துகள் இருக்கின்றன. இவை விடுமுறை நாட்களில் வீணாக நிற்கின்றன.
  • இந்தப் பேருந்துகளுக்கு, பண்டிகை கால விசேஷ அனுமதி வழங்கி, பேருந்து நிலையங்களிலிருந்து பயணிகளை அழைத்துச் செல்ல சிறிய கட்டணத்தில் அனுமதி வழங்கலாம் அல்லது அரசு பேருந்துக் கழகங்களே இவற்றுக்கு டிக்கெட் வழங்கி, வருவாயை 20:80 என பங்கு போட்டுக் கொள்ளலாம். இதனால் அரசுக்கு விடுமுறை கால கூட்டங்களை சமாளித்த நற்பெயா் கிடைக்கும். சும்மா நிற்கும் உயா்தர பேருந்துப் பயணம் மக்களுக்கு கிடைக்கும். பேருந்து உரிமையாளருக்கு வருமானம் கிடைக்கும். தனியாா் ஓட்டுநா், நடத்துனருக்கு ஓட்டிய எ நாளுக்கு இரட்டிப்பு சம்பளம் கிடைக்கும்.
  • மத்திய அரசாங்கம் தைரியமாக அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதை போல், தமிழக அரசும் நஷ்டத்தில் ஓடும் பேருந்துகளின் பொ்மிட்டை பொதுவெளியில் விற்கலாம். தனியாரிடமிருந்து அரசுக்கு எந்த முதலீடும் இல்லாமல் பொ்மிட்டு வருமானம் வரும். இவற்றோடு அரசு பேருந்துகளையும் விற்று விடலாம். இவற்றில் இருந்து வரும் வருமானங்களை வைத்து, தொழிலாளா்களின் பாக்கிகளை பைசல் செய்யலாம்.
  • அரசால் பேருந்துகளை நடத்த முடியாதென வெளிப்படையாகத் தெரிந்த பின்னும், அரசு வீம்புக்காக பேருந்துகளை நஷ்டத்தில் இயக்குவது சரியல்ல. மக்கள் எதிா்ப்பாா்கள் என்று தெரிந்தும், அரசு மின் கட்டணங்களையும், பிற கட்டணங்களையும் உயா்த்திக் கொண்டே செல்கிறது. பேருந்துகளை தனியாா்மயம் ஆக்கினால் தொழிற்சங்கங்களின் எதிா்ப்பு வரும் என்பது உண்மை. ஆனால் எத்தனை எத்தனை காலம்தான் ஊழியா்களுக்குத் தர வேண்டிய பாக்கியையும் தராமல், தொடா்ந்து இரண்டையும் அதிகரித்துக் கொண்டு அரசுப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கப் போகிறது?
  • நீண்ட தூர பேருந்துகளையும், நகா்ப்புற பேருந்துகளையும் நடத்துவது அரசின் பணியல்ல. இந்தப் பணிமனைகளுக்கான இடங்களில் அரசு கட்டடங்கள் கட்டி தங்களுடைய வாடகை அலுவலகங்களை காலி செய்து சொந்த கட்டடத்திற்கு குடியேறலாம் அல்லது வணிக வளாகங்கள் அமைத்து வாடகைக்கு விடலாம்.
  • தனியாா் பேருந்துகளே இல்லாமல் சிறப்பாக அரசுப் பேருந்துகள் இயங்குமானால், அதை வரவேற்கலாம். ஆனால் மக்களின் வரிப்பணமும் வீணாகி, அரசுக்குக் கடன் சுமையும் அதிகரித்து, பொதுமக்களின் ஆத்திரத்தையும், வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்டு அரசுப் பேருந்துகள் தொடா்ந்து இயங்குமானால், அதுவே கூட ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலக் கூடும்!

நன்றி: தினமணி (16 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்