TNPSC Thervupettagam

பயணப் பாதுகாப்பு தேவை

November 7 , 2022 642 days 378 0
  • அண்மையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று, ஊரப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அதன் பின்பக்க சக்கரம் கழண்டு தனியாக சாலையில் ஓடியது. அதனால் அந்த பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. அதிருஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.
  • அதே போன்று பத்து நாட்களுக்கு முன்னர், புதுச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியே அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. மிக கனமழையில், பேருந்தில் "வைப்பர்' வேலை செய்யாததால் பேருந்தை இயக்குவதற்கு ஓட்டுனர் மிகவும் சிரமப்பட்டார். கையில் காகிதத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது கண்ணாடியை துடைத்தவாறு பேருந்தை இயக்கியுள்ளார்.
  • இதனைக் கண்ட பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். பேருந்து நடத்துநரும் அவ்வப்போது கண்ணாடியை துடைத்தபடியே இருந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள், அரசு உடனடியாகஇதில் கவனம் செலுத்தி பேருந்துகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான நிகழ்வு மாநிலத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருவது பொதுமக்களுக்கு பேருந்து  பயணம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.
  • தமிழக அரசு, 1967-இல் தனியார் பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கிய திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கிராமப்புறங்களுக்குப் பேருந்து வசதி, வேலைவாய்ப்பு, தொழிலாளருக்கு தரமான பணிச் சூழல், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி, அரசுக்கு நிதிச்சுமை இல்லாமை என பல நன்மைகள் இத்திட்டத்தால் விளைந்தன. அதிக வருவாயும் கிடைத்ததால், முதல் 20 ஆண்டுகளில் ஆராய்ச்சிப் பணிகளுக்கு கணிசமாக தொகை செலவிடும் அளவுக்கு, போக்குவரத்துத் துறை லாபம் ஈட்டியது. இந்த வருவாயைக் கொண்டு, ஒரு பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மூன்று பாலிடெக்னிக்குகள் உருவாக்கப்பட்டன.
  • 1997 வரை அரசிடம் இருந்து நிதி எதையும் பெறாமல், சொந்த வருமானத்தைக் கொண்டுதான் போக்குவரத்துத் துறை செயல்பட்டு வந்தது. இப்போதும் கூட ஏராளமான பேருந்துகள், பணிமனை இடங்கள், அலுவலகக் கட்டடங்கள், வழித்தடங்களில் பேருந்து இயக்கும் உரிமை என அதிக அளவிலான அரசின் சொத்து போக்குவரத்துத் துறையில் இருக்கிறது. ஆனாலும், சரியான நிதி நிர்வாகம் இல்லாமையால், இத்துறை தற்போது ரூ.35 ஆயிரம் கோடி கடனில் இருக்கிறது.
  • தமிழகம் முழுவதும் இயங்கும் சுமார் 24 ஆயிரம் பேருந்துகளில், 15 ஆயிரம் பேருந்துகள் காலாவதி ஆனவை. ஆயினும் அவையும் இயக்கப்படுகின்றன. காரணம், புதிய பேருந்துகளை வாங்கவோ, பழைய பேருந்துகளைச் சீரமைக்கவோ போக்குவரத்துத் துறையிடம் நிதி இல்லை. காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பேருந்து இயக்குவதற்கான செலவுகள் அதிகரிக்கும்போது, கட்டணத்தை ஓரளவாவது உயர்த்துவது நியாயமே.
  • ஆனால், "மக்கள் நலனுக்காக' என்று கூறி, கட்டண உயர்வை அரசுகள் தொடர்ந்து தள்ளிப்போடுவதும் மக்களுக்குத் தேவையற்ற இலவசங்களை அளிப்பதும்  நஷ்டத்தை அதிகமாக்குகின்றன. போதிய நிதி ஒதுக்கப்படாததால், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய ரூ.2,500 கோடி நிலுவையில் இருக்கிறது. இது மட்டுமின்றி, தற்போது பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பணம் ரூ.5 ஆயிரம் கோடியை எடுத்து பேருந்து இயக்க செலவுகளுக்குப் பயன்படுத்தியுள்ளது போக்குவரத்துத் துறை.
  • எரிபொருள் விலை உயர்வு, சுங்கச் சாவடிகள் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. சுங்கச் சாவடி கட்டணத்தால் மட்டுமே ரூ.900 கோடி கூடுதல் செலவாகிறது.
  • மொத்தம் உள்ள வழித்தடங்களில் 40% வழித்தடங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. ஆனால், தமிழக அரசு எரிபொருள் மானியத்துக்கு ரூ.800 கோடி, மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகை கட்டண மானியத்துக்கு ரூ.564 கோடி என வாரி வழங்குகிறது. இதனால், போக்குவரத்துத் துறையின் நிதி நெருக்கடி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலைதொடர்ந்தால், சாமான்ய மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்துத் துறைஅதிக பாதிப்புக்கு உள்ளாகும். எனவே விரைவில் இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும்.
  • முறையான பராமரிப்பு இன்மையால், மழை பெய்யும்போது உள்ளே தண்ணீர் ஒழுகும் அவல நிலை, அடிக்கடி பயண வழிகளில்  பழுதடைந்து நின்று விடுதல் ஆகியவை அரசுப் பேருந்துகளில் வாடிக்கையாகி விட்டன. பண்டிகைக் கால போக்குவரத்து நெரிசலில் இவ்வாறு பேருந்துகள் பழுதாகும்போது பொதுமக்களின் நிலைமை மிகவும் மோசமாகின்றது.
  • மக்களின் அன்றாடத் தேவையான போக்குவரத்துத் துறையை  பொருளாதார நலிவிலிருந்து மீட்க, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைக எடுக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு விலக்கு அளிக்கலாம். சாலைகள் அருகே இருக்கும் வாகன நிறுத்தங்களில் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை தனியாரிடம் விடாமல், போக்குவரத்துத் துறையே மேற்கொள்ளலாம்.
  • இதுபோன்ற திட்டங்களை, தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் நடைமுறைப்படுத்தினால், நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். மனமுண்டானால் மார்க்கமுண்டு. இனியாவது, பாதுகாப்பான பயணத்திற்கு வழி பிறக்கட்டும்.

நன்றி: தினமணி (07 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்