- மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 60 பேரை தென்னிந்திய மாநிலங்களில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக, சுற்றுலா ரயில் பெட்டியை அம்மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஒன்று ஆகஸ்ட் 17 அன்று முன்பதிவு செய்திருந்தது.
- வெவ்வேறு ரயில்களில் இணைக்கப்படும் இந்தப் பெட்டியில் பயணித்த பயணிகள் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆன்மிகத் தலங்களைத் தரிசித்த பின்னர், தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்குச் சென்று திரும்பிச் செல்லும் வழியில் மதுரைக்கு 26ஆம் தேதி அதிகாலை வந்தனர்.
- அவர்கள் பயணித்த பெட்டி, புனலூர்-மதுரை விரைவு ரயிலிலிருந்து பிரிக்கப்பட்டுச் சற்றுத் தொலைவில் தனியே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தீ விபத்து நேரிட்டிருக்கிறது. அதிகாலை 5.15 மணிக்குத் தேநீர் தயாரிக்கச் சிலர் முயன்றபோது சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து ஏற்பட்ட கசிவு இந்த விபத்துக்கு வழிவகுத்துவிட்டது.
- துரித நடவடிக்கைகளின் காரணமாகத் தீ வேறு இடங்களுக்குப் பரவாமல் தடுக்கப் பட்டிருக்கிறது. ஒருவேளை இந்தப் பெட்டி இணைக்கப்பட்ட ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போது தீ விபத்து நிகழ்ந்திருந்தால், சேதங்கள் பன்மடங்கு அதிகரித்திருக்கும். அதேபோல், விபத்து நிகழ்வதற்கு முன்னர் அந்தப் பெட்டியிலிருந்த பலர் வெளியேறியிருந்ததால் அதிக அளவிலான உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
- பொதுவாகவே, ஆபத்துகளை உணராமல் விதிமீறல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். விபத்து நிகழ்ந்த பெட்டிக்குள் அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள், காய்கறிகள், உணவு தானியங்கள், பாத்திரங்கள் போன்றவை இருந்திருக்கின்றன. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை ரயிலுக்குள் கொண்டுசெல்லக் கூடாது என்னும் விதியைச் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீறியிருக்கிறார்கள்.
- கழிப்பறையின் ஒரு பகுதியைச் சமையல் கூடமாக்கிப் பயணம் முழுவதும் தேநீர் முதல் சிற்றுண்டி வரை தயாரித்திருக்கிறார்கள். பயணிகளில் சிலர் இது தொடர்பாக அவர்களிடம் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கன்னியாகுமரி பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டரை நிரப்பியதும் தெரியவந்திருக்கிறது.
- உயிரிழந்த 9 பேரில், சுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்த இருவரும் அடக்கம்; விபத்து நடந்ததையடுத்து, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே நேரம் ரயில் பெட்டிக்குள் எரிவாயு சிலிண்டர் இருப்பதைக் கண்டுபிடிக்கத் தவறிய ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விபத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- இப்படியான விபத்துகள் நேரும்போது, அடிப்படையற்ற ஊகங்களும் வதந்திகளும் பரவுவதைச் சமீபகாலமாகப் பார்த்துவருகிறோம். அப்படியான எதிர்மறை விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல், மீட்பு நடவடிக்கைகள், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை, இறந்தவர்களின் சடலங்கள் உடற்கூறாய்வு, விபத்திலிருந்து மீண்டவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல ஏற்பாடுகள் என மிகுந்த பொறுப்புடன் தமிழ்நாட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் செயல்பட்டது பாராட்டத்தக்கது.
- இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு உணர்வும் பொறுப்புணர்வும் அவசியம். விதிமீறல்களை இயல்பானதாக மாற்றிக்கொள்பவர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரத்தையும் பொறுப்பையும் கையில் வைத்திருப்பவர்கள் கூருணர்வோடு செயல்பட்டுப் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (30– 08 – 2023)