- சென்னையின் பரப்பளவு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சுமார் 72 சதுர கி.மீ. மட்டுமே. மக்கள்தொகை 5 லட்சம்தான். ஆனால், இப்போது சென்னை எல்லா திசைகளிலும் பரந்துவிரிந்து 426 சதுர கி.மீ. என ஆகி இருக்கிறது. சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் தேடி மற்ற மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்.
- இதுபோன்ற நிலை சென்னைக்கு மட்டும்தான் என கருத வேண்டாம். நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வது எல்லா மாநகராட்சிகளிலும் உள்ளது. இனியும் இது தொடரும்.
- சென்னையை ஒப்பிடும்போது மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு உள்ள கோவையில் காந்திபுரம் (இரண்டு), சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனிஆகிய இடங்களில் பேருந்து நிலையங்கள் உள்ளன. மதுரையில் எம்ஜிஆர் (மாட்டுத்தாவணி), பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் பல்லாண்டுகளாக செயல்பாட்டில் உள்ளன.
- சென்னையில் பிராட்வே பேருந்து நிலையம் சிறியதாக இருந்ததால், கோயம்பேட்டில் 37 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பேருந்து முனையம் 2002-ஆம் ஆண்டில்தான் திறக்கப்பட்டது. இந்தப் பேருந்து முனையம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என கருதப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவுக்குப் பலன் கிடைக்கவில்லை.
- இதையடுத்து, திருப்பதி, நெல்லூர் போன்ற ஆந்திர பகுதிகளுக்குப் பேருந்துகளை இயக்க மாதவரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 2018-ஆம் ஆண்டில் பேருந்து முனையம் திறக்கப்பட்டது. இவற்றுடன் தாம்பரம் சானடோரியத்திலும் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
- வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து முனையம் 2012-இல் அறிவிக்கப்பட்டு, 2019-இல் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திலும் 25 ஏக்கர் பரப்பளவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.
- பேருந்து முனையங்கள் அமைத்தல், பேருந்துகள் கொள்முதல் என அரசு எவ்வளவு திட்டமிட்டாலும் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இல்லாததால் யானைப் பசிக்கு சோளப்பொரி என்பதுபோல ஆகிவிடுகிறது. நிதிநிலைமை காரணமாக, போதுமான அளவு புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதில்லை.
- அதனால், பண்டிகைக் காலங்களில் அறிவிக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இருப்பதில்லை.
- சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அவற்றின் முன்பதிவு, தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அரசுப் பேருந்துகள் போதுமானதாக இல்லாததால் ஆயிரக்கணக்கானோர் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். தனியார் ஆம்னி பேருந்துகளில் வார இறுதி நாள்களில் அதிக கட்டணமும், பண்டிகை காலங்களில் மிக அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
- அண்மையில் ஆயுத பூஜை சமயத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விதிமீறலில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ரூ.27 லட்சம் அபராதம் விதித்தனர். 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- இதையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கருடனான ஆலோசனைக்குப் பின்னர் தீபாவளிக்கு சென்னையில் இருந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கு குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது குறைக்கப்பட்ட 25% கட்டணத்துடன் மேலும் 5% சேர்த்து 30% குறைத்துக் கொள்வதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அது நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
- தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் தவிர, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நவம்பர் 9-ஆம் தேதி 550 பேருந்துகள், 10-ஆம் தேதி 600 பேருந்துகள், 11-ஆம் தேதி 700 பேருந்துகள் என மொத்தம் 1,850 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அறிவித்துள்ளார். இதேபோல, தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களில் மொத்தம் 900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். எல்லா ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
- அதிக அளவில் அரசு, தனியார்பேருந்துகள் இயக்கப்படுவதும், இரு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள், சிற்றுந்துகள் என மக்கள் தத்தம் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதும், பண்டிகைக் காலங்களில் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. இதற்குத் தீர்வு ஒன்று மட்டும்தான் - அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது.
- நமது நாட்டில் பொதுமக்கள் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்காததால், பண்டிகை நேரங்களில் பேருந்துகளில் இடம்பிடிப்பது மிகப் பெரிய சாதனையாகிவிடுகிறது. இதில் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் படும் பாடு சொல்லி மாளாது. பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் வாகனங்களால் நெடுஞ்சாலைகளில் நெரிசல் காரணமாக காலதாமதமும், ஆங்காங்கே விபத்துகளும் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.
- பண்டிகைகள் கொண்டாடப்படுவதே மக்கள் மகிழ்ச்சியாக இருக்கத்தான். ஊருக்குச் செல்வதே பெரும்பாடு என ஆகிவிடாமல் இருக்குமாறு, பயணங்கள் இனிமையாக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: தினமணி (10 – 11 – 2023)