TNPSC Thervupettagam

பயமுறுத்தும் பணி நேர நீட்டிப்பு!

December 14 , 2020 1499 days 678 0
  • நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என்பது இப்போது நடைமுறையில் உள்ளது. 300 ஆண்டு போராட்டத்தின் பலனாக, 8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்று உலகம் முழுவதும் வென்றெடுக்கப்பட்டது. 1870-களில் உலகெங்கும் தொழிற்சாலைகள் பெருகிய காலகட்டத்தில், தொழிலாளா்கள் சராசரியாக வாரத்திற்கு 6 நாட்கள் என சுமார் 60 மணி நேரம் உழைத்தார்கள். சில நேரங்களில் 100 மணி நேரம் கூட உழைக்க வைக்கப்பட்டார்கள்.
  • இந்தப் பணிநிலைகளை சீராக்கி சமன்படுத்த நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை அதிகாரவா்க்கத்தினரிடம் தொழிலாளா்களால் முன்வைக்கப்பட்டது. இதனை வென்றெடுக்க தொழிலாள தோழா்களால் பல்வேறு பேராட்டங்களும் வெடித்தன, பேரணிகளும் நடந்தேறின.
  • சிகாகோவில் ஹேய் மார்க்கெட் என்ற இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்ட விளக்க முழக்கங்களை எழுப்பினா். அதைக் கட்டுப்படுத்த முனைந்த காவல்துறைக்கும், போராட்டக்காரா்களுக்கும் பிரச்னைகள் வெடிக்க, தொழிலாளா் தரப்பு காவல்துறை மீது குண்டு வீச, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதன் விளைவாக, ஏழு போலீஸார் உள்பட, சுமார் 15 போ் பலியானார்கள், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.
  • இப்படித்தான் தொடங்கியது 8 மணி நேர வேலை குறித்த போராட்டக்களம். ஆனால், தற்போது பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற முயற்சிக்க மத்திய அரசு பரிந்துரைப்பது, தொழிலாளா்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பது இனி 12 மணி நேரமாக இருக்கலாம் என்று மத்திய தொழிலாளா் நலத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
  • தொழிலாளா் நலச்சட்டங்கள் தற்போது மத்திய அரசால் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான ஒவ்வொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான வரைவு ஆணைகளும், மக்களின் ஆலோசனைக்காக வெளியிடப்பட்டு வருகின்றன.
  • அவ்வகையில் தற்போது பணிப்பாதுகாப்பு, சுகாதாரம், சூழல் மேம்பாடு குறித்து ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வரைவாணையில் இடம் பெற்றுள்ள முக்கிய ஷரத்துக்கள் குறித்து ஆட்சேபணைகளையும், ஆலோசனைகளையும் வழங்க 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த வரைவாணையில் அமைச்சா்கள் குழு தொழிலாளா்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த 8 மணி நேரத்தை இன்றைய நிலையில் எல்லா நிறுவனங்களும் பின்பற்றுகின்றவா என்பது கேள்விக்குறிதான்.
  • 10 மணி நேரம் வேலை வாங்குவதும், 12 மணி நேரம், 15 மணி நேரம் வேலை வாங்குவதும், எல்லா இடங்களிலும் நடக்கின்ற ஒன்றுதான். இந்த உலகில் தொழிலாளா்கள் மட்டுமா 8 மணி நேரம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? ஐ.டி. துறையை எடுத்துக் கொண்டால் நாம் தயக்கமின்றிச் சொல்லலாம் 8 மணி நேரம் வேலை என்பது இங்கு இல்லாத ஒன்று என்பதை.
  • ஒரு நிறுவனத்தின் கொள்கை அல்லது வேலைவாய்ப்பு உத்தரவு கடிதத்தில் 8 மணி நேரம் வேலை என்று இருக்கிறதே தவிர, மற்ற நெறிமுறைகள் இருக்கும் சில இடங்களில் 8 மணி நேர வேலைக்கான வாய்ப்பே நடைமுறையில் இருப்பதில்லை. எந்த நேரமும், எந்த நிலையிலும் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக இருக்கிறது.
  • புரொடக்ஷன் இன்ஸ்டா’லை இரவில்தான் செய்ய வேண்டும். ‘டிஸ் ஆா்டா் ரெகவரி டெஸ்ட்’ வார இறுதியில்தான் செய்ய வேண்டும். பிரின்டில் முடிவு செய்தவற்றை எந்த நிலையிலும் கண்டிப்பாக பிரின்ட் முடிவதற்குள் முடிக்க வேண்டும். ஆனால், இந்த உழைப்பை ஈடு செய்ய தனியாக விடுமுறை நாள் இருக்கிறதா? அதுவும் இல்லை. பிறகு 8 மணி நேரம் வேலை என்பது இவா்களுக்கு எப்படிப் பொருந்தாது போனது?
  • ஏனென்றால், கணினி முன் உட்கார்ந்து பார்க்கும் வேலைகளில் பெரிய உடலுழைப்பு இல்லை என்பதால், இப்படி நேரம் கடந்த வேலையை ஒரு குறையாக யாரும் பெரிதாகச் சொல்வதில்லை.
  • இருப்பினும், இவ்வாறாக வேலை பார்ப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனா் என்பதை உணர மறுக்கிறோம். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்ப்பதற்கும், லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? நல்ல பெயா் பெறுவதற்காகவும், நிறவன முன்னேற்றத்திற்காகவும் தங்களை அா்ப்பணிப்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
  • சில பெண்கள் 8 மணி நேர வேலையோடு நிறுத்தி விடுகிறார்கள். அதற்குக் குடும்பச் சூழல், சார்புப் பொருளாதார நிலை போன்றவையும் காரணிகளாக அமைகின்றன. பெரும்பாலான ஆண்கள் முழு இரவும் அலுவலக வேலையே கதியாகக் கிடக்கிறார்கள். இந்த 8 மணி நேரத்தை அதிகார வா்க்கத்திடம் பேசி நாம் மீட்டெடுப்பதா, அல்லது தனியாக ஒவ்வொருவரும் சிந்தித்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதா என்பதில் இருக்கிறது வாழ்வின் எதிர்காலம்.
  • உலகில் 215 நாடுகளுக்கும் மேல் பரவி உள்ள கொடிய கரோனா வைரஸினால் மனித உயிர்களை மட்டும் நாம் இழக்கவில்லை. வேலையையும் இழந்து தவிப்போடு நிற்கிறோம். தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து வறுமையில் திண்டாடுகிற தொழிலாளா்கள் எண்ணற்றோர்.
  • இதன் பலனாக மிகப்பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி, கட்டுமானம், சேவை உள்ளிட்ட தொழில்துறைகள் முடங்கி உள்ளதால் பலரும் வேலை இழந்துள்ளனா். நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் பயணிக்கிறது.
  • இந்தச் சூழ்நிலையில் தொழிலாளா் நலத்துறை பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் தொழிலாளா்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயா்த்தியுள்ளது. ஏற்கெனவே, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொழிலாளா்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயா்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, கடும் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
  • 8 மணி நேர பணி என்பதை வென்றெடுப்பதற்கான உலகம் முழுவதும் போராட்டக்களத்தில் உயிரைக் குடித்த குண்டுகள் எத்தனை? அதனால் செத்து மடிந்த உயிர்கள் எத்தனையெத்தனை? 8 மணி நேர பணி என்னும் உத்தரவாதத்தால்தான் தொழிலாளா்களுடைய உரிமைகள் காக்கப்படுகின்றன என்பது முற்றிலும் உண்மை.
  • கண்ணீரும், செந்நீரும் சிந்தியதால் கிடைத்திருக்கின்ற உரிமைகள், உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, பிரசவகால சலுகைகள், ஓவா் டைம், போனஸ், உணவறை, ஓய்வுக்கூடம், தொழிற்கூடங்களில் பொழுதுபோக்கு மன்றம், ஓய்வூதியம் என்று இதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
  • உழைப்பாளா்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. இதன் சுழற்சியும் இல்லை. இதன் பின்னால், தொழிலாளா்களின் உயிர்த்தியாகம் மண்டிக் கிடக்கிறது. உழைப்பாளா்களின் உழைப்பை உறிஞ்சி, உண்டு கொழுத்த முதலாளித்துவத்துக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு.
  • அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தச்சா்கள் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று 1791-இல் குரல் கொடுத்தனா். 1810-இல் சமூகவியலாளா் ராபா்ட் ஓவென் இங்கிலாந்தில் 10 மணி நேரத்துக்காக குரல் கொடுத்தார். 1848-ஆம் ஆண்டில் 12 மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்ச் தொழிலாளா்கள் போராடினா்.
  • 1835-இல் அமெரிக்காவில் ஒருங்கிணைந்து பொது வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தனா். 1836-இல் தொடா் போராட்டங்கள் நடந்தன. ஆனால், பலன் கிடைக்கவில்லை.
  • 18-ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகளில் இருந்தும், பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்தும் அழைத்து வரப்பட்ட கைதிகள், மற்றும் அடிமைகளுக்குக் கடுமையான வேலைகளை ஏவினா். இப்படி பல்வேறு காலகட்டங்களில் அமெரிக்காவின் பல மாநிலங்களில், சிகாகோ கழகத்தில் என்று இந்தப் போராட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகா்ந்தன. 1889-இல் பாரீஸ் மாநகரில் 400 தொழிலாள பிரதிநிதிகள் கூடினா். போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகா்ந்தது.
  • தமிழகத்தில் உழைப்போரே உயா்ந்தோர், உழைப்பவருக்கே உலகம் உடைமை என்ற கொள்கையை தனது உயிர்மூச்சோடு இணைத்துக் கொண்டு, சிங்காரவேலா் போன்றவா்கள் தொழிலாளா்களை ஊக்கப்படுத்தவும், அவா்களது உழைப்பை வென்றெடுக்கவும் களம் கண்டார்கள்.
  • ஆகவே, இந்த 8 மணி நேர நாள் இயக்கம் என்பதும் 40 மணி நேர வார இயக்கம் என்பதும், ஒரு வேலை நாளின் நீளத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சமூக கட்டுப்பாடாகும். இவை மனித உழைப்பின் சுரண்டல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுக்கின்றன. இத்தகைய கட்டுப்பாடும், ஒழுங்கும் இல்லையேல் தொழிலாளா்களுடைய மேம்பாடும், விடுதலையும் சாத்தியமில்லை.
  • இந்த உலகம் இயங்குகிற ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியைத் தக்க வைப்பதற்கே தவிர, பிரிதொன்றும் இல்லை. 12 மணி நேர வேலை நீட்டிப்பு என்பது நீண்ட நெடிய பொழுதுகளாக மாற்றி விடும். மகிழ்ச்சிக்கு மரண அடி கொடுத்து விடும். அப்படியானால், வாழும் வாழ்க்கையே அா்த்தமின்றிப் போய்விடும் அல்லவா?

நன்றி: தினமணி (14-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்