TNPSC Thervupettagam

பயிர்க் காப்பீடு: கிராம அளவில் மகசூல் கணக்கீடு தேவை!

July 10 , 2024 185 days 159 0
  • பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் காப்பீட்டுத் தொகை அதிகரித்தாலும், இழப்பீடு பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க, வருவாய் கிராம அளவில் நடத்தப்படும் மகசூல் இழப்பு கணக்கீட்டை, கிராம அளவில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
  • தமிழகத்தில் உணவு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள் என சுமார் 62 லட்சம் ஹெக்டேரில் வேளாண்மைப் பயிர்களும், தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. வேளாண் தொழிலில் சுமார் 80 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டு வந்தாலும்கூட, 93 சதவீத நிலங்களில் சிறு, குறு விவசாயிகள் மூலம் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள், பூச்சி நோய்த் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016}ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, கிராம அளவில் பயிர்கள் அறிவிக்கை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டது. பின்னர், 2020}ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவிக்கை செய்யப்பட்ட குறு வட்டங்களில், அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு மட்டுமே இந்தக் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
  • காரீப் பருவம், சிறப்புப் பருவம், ரபி பருவம் என 3 சாகுபடி காலங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் ரபி பருவ காலத்தில்தான் அதிக சாகுபடிப் பரப்பு காப்பீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 20}க்கும் மேற்பட்ட வேளாண் பயிர்கள், 100}க்கும் மேற்பட்ட தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
  • ஆனால், வருவாய்த் துறை மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்திரப் பயிர் பரப்பு ஒத்திசைவு அறிக்கையில் 56 வகையான பயிர்கள் மட்டுமே இடம்பெறுகின்றன.
  • அதே நேரத்தில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 32 வகையான பயிர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. காப்பீட்டுத் திட்டத்துக்கு விவசாயிகளின் பங்களிப்பு 2 முதல் 5 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு மாவட்டத்துக்கு மாவட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6 ஆண்டுகளில் பயிர்க் காப்பீடு செய்த 1.36 கோடி விவசாயிகள்:

  • பிரதமரின் காப்பீட்டுத் திட்டம் 2016}17 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது, 18.74 லட்சம் விவசாயிகள் 35.54 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பளவுக்கு காப்பீடு செய்தனர். 2017-18 ஆம் ஆண்டில் 15.70 லட்சமாகக் குறைந்த விவசாயிகளின் எண்ணிக்கை, அடுத்த நிதியாண்டில் 25.14 லட்சமாக அதிகரித்தது.
  • 2019-20 ஆம் ஆண்டில் 22.91 லட்சம் விவசாயிகள், 2020-21ஆம் ஆண்டில் 27.79 லட்சம் விவசாயிகள், 2021-22 ஆம் ஆண்டில் 26.06 லட்சம் விவசாயிகள் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை 1.36 கோடி விவசாயிகள், 2.22 கோடி ஏக்கர் பயிர் பரப்பளவுக்கு காப்பீடு செய்தனர்.

2020 க்கு பின்னர் குறைந்த இழப்பீட்டுத் தொகை:

  • 2016 ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் விவசாயிகள் ரூ.1,115 கோடி காப்பீட்டுத் தொகையாகச் செலுத்தினர். பயிர் இழப்பீட்டுத் தொகையாக சுமார் 13 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,643 கோடி வழங்கப்பட்டது.
  • இதேபோல, அடுத்தடுத்த 2 நிதி ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையாக முறையே ரூ.1,245 கோடி, ரூ.1,552 கோடி செலுத்தப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக முறையே ரூ.2,083 கோடி, ரூ.2,651 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 2019}20 நிதி ஆண்டில் ரூ.1,959 கோடி காப்பீட்டுத் தொகையாக செலுத்தப்பட்ட நிலையில், இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,244 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. இதேபோல, 2020}21, 2021}22ஆம் ஆண்டுகளிலும் காப்பீட்டுத் தொகையைவிட இழப்பீட்டுத் தொகை குறைந்தது.
  • மேலும், மாநில அரசின் பங்களிப்புக்கு இணையான மத்திய அரசின் பங்களிப்புத் தொகையும் (மானியம்), இந்த 2 ஆண்டுகளாக 40 சதவீதம் வரை குறைவாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இதே காலகட்டங்களில் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும்கூட, இழப்பீட்டுத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்தது. 2022}23ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.
  • ஆண்டுதோறும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் விகிதம் குறைந்து வரும் நிலையில், மகசூல் பாதிப்புகளை வருவாய் கிராம அளவில் கள ஆய்வு செய்யும் நடைமுறையை மாற்றி, கிராம அளவில் கணக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனிநபர்களின் மகசூல் கணக்கீடு தேவை:

  • இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் சாமி நடராஜன் கூறியதாவது: பயிர் காப்பீட்டுத் திட்டம் பெரும்பாலும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாகவே செயல்படுத்தப்படுகின்றன. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைப் பொருத்தவரை, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் செய்வதற்கான அனைத்துப் பணிகளையும் காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. குறிப்பாக, அறுவடை முடிந்த பின்னர் ஆய்வுக்கு வருகின்றனர்.
  • இதனால், காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கும், இழப்பீடாக வழங்கப்பட்ட தொகைக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் 40 சதவீதத்துக்கும் மேல் காப்பீட்டு நிறுவனங்கள்தான் பயனடைகின்றன. முதல் 3 ஆண்டுகள் காப்பீட்டுத் தொகையைவிட இழப்பீட்டுத் தொகை கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த 2 ஆண்டுகள் காப்பீடு செய்ய விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • மேலும், இழப்பீட்டுத் தொகை, குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைப்பதில்லை. அரசின் பணத்தையும் பெற்றுக் கொண்டு, அடுத்த பயிர் சாகுபடி வரை தாமதப்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள், இதன்மூலம் கிடைக்கும் வட்டியிலும் கணிசமான லாபம் ஈட்டுகின்றன.
  • வட்ட அளவில் நடத்தப்பட்ட மகசூல் இழப்பு கணக்கிடும் பணி, விவசாயிகள் போராட்டம் காரணமாக, வட்டாரம், குறுவட்டம், வருவாய் கிராமம் என மாறி இருக்கிறது. இந்த நடைமுறையை கிராம அளவில் மட்டுமன்றி, தனி விவசாயி வரையிலும் அமல்படுத்தினால் மட்டுமே பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயியும் பயன்பெற முடியும் என்றார் அவர்.

நன்றி: தினமணி (10 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்