PREVIOUS
நாகாலாந்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த மாநிலத்தின் முதல்வர் நெய்பியு ரியோவுக்குக் கடுமையான கடிதம் ஒன்றை அம்மாநிலத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியிருப்பது நாகாலாந்து விவகாரம் மோசமான திசையில் செல்வதைச் சுட்டும் அறிகுறியாகி இருக்கிறது.
நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில், அம்மாநிலத்தில் உள்ள ஆயுதம் ஏந்திய குழுக்கள் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாகவும், மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதியை அவர்கள் சுருட்டிக்கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் ரவி குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சட்டம் ஒழுங்குக்குக் காரணமான, மாவட்ட அளவுக்கு மேலான பொறுப்புகளைக் கொண்ட அதிகாரிகளை இடம் மாற்றுதல், பணி நியமித்தல் போன்றவை சட்டக்கூறு 37ஏ(1)-ன் கீழ் இனி மேல் தனது ஒப்புதலுடன் செய்யப்படும் என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசாங்கத்துடன் கடந்த 23 ஆண்டுகளாகச் சண்டை நிறுத்தத்தை அனுசரித்துவரும் ‘என்.எஸ்.சி.என்.-ஐ.எம்’ கிளர்ச்சியாளர்கள் குழு, ஆளுநரின் கடிதத்துக்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறது.
‘வரி’களை மட்டுமே தாங்கள் வசூலித்ததாக அவர்கள் கூறியிருப்பது ஆளுநரின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது. ஆனால், அவருடைய கடிதம் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி தலைமையிலான அரசை இக்கட்டான நிலையில் தள்ளியிருக்கிறது.
நாகாலாந்தில் ஆயுதக் குழுக்கள் ‘வரி’ என்ற பெயரில் பணம் வசூலிப்பதோ, வளர்ச்சிப் பணிகளை அவை தீர்மானிப்பதோ நெடுங்காலமாக நடந்துவருவதாகும்; கிட்டத்தட்ட ஓர் இணை அரசுபோலவே ஆயுதக் குழுக்களின் இந்த நடைமுறை தொடர்கிறது.
இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவந்து, ஆயுதக் குழுக்களை முழுக்கத் தேர்தல் ஜனநாயகத்தை நோக்கி நகர்த்தும் முயற்சியாகவே பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.
கூட்டாட்சிப் பார்வையே தீர்வு
இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக 2015-ல் ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார்; அதை வெற்றிகரமாக முடிப்பதற்காகவே ஆகஸ்ட் 2019-ல் அம்மாநிலத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார் என்ற பேச்சும் உண்டு.
தொடக்கத்தில் நல்ல திசையில் சென்ற பேச்சுவார்த்தை, பின்னர் கரடுமுரடான பாதையில் சிக்கிக்கொண்டது. இரு தரப்புகளையுமே இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.
மாநிலத்தில் இணை நிர்வாகத்தையும் தனக்கென்று ஒரு ராணுவத்தையும் எதிர்த்தரப்பு கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், நாகாலாந்தில் மட்டும் அல்லாது, ஒட்டுமொத்த வடகிழக்கிலும் அமைதியையும் முன்னேற்றத்தையும் கொண்டுவருவதில் அது பெரும் பங்காற்றும்.
அதற்கு மாநில அரசை இதில் முக்கியக் கூட்டாளி ஆக்க வேண்டும். ‘மாபெரும் நாகாலாந்து’ என்ற நடைமுறை சாத்தியமற்ற முழக்கத்தையெல்லாம் அரசு ஏற்க முடியாது என்றாலும், மாநிலத்துக்கு என்று தனிக் கொடி வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளைத் தாராள மனதுடன் இந்திய அரசு பரிசீலிக்கலாம்.
இந்திய ஒன்றியம் எனும் குடைக்குக் கீழே எவ்வளவு அதிகாரங்களையும் மாநிலங்களுடனும், உள்ளூர் அமைப்புகளுடனும் டெல்லி பகிர்ந்துகொள்ளலாம்; பரந்த கூட்டாட்சிப் பார்வையைப் பெறுவதே அதற்கான தீர்வு.
நன்றி: தி இந்து (13-07-2020)