TNPSC Thervupettagam

பரந்து பட்டிருந்த பருவமழை அறிவு: கார் காலமும் கவினுறு வானும்

July 9 , 2023 552 days 540 0
  • பருவ காலங்கள் பற்றியும் பருவமழை பற்றியும் பழந்தமிழ் இலக்கியங்களில் பற்பல குறிப்புகள் உள்ளன. குறிப்பாக மழை பற்றியும், மழை வரும் காலங்கள் குறித்தும் மிகச் செறிவான அறிவு மரபு இருந்துள்ளது. நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாகக் கொண்ட பழந்தமிழர், பெரும் பொழுதாகிய பருவங்களையும் அவற்றின் தன்மைகளையும் ஆய்ந்தறிந்து இருந்தனர்.
  • தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என்கிற இரண்டு பருவமழைக் காலங்கள் நமக்கு உள்ளன. தமிழ்நாட்டிற்குச் சிறிதளவு மழை கொண்டு வரும் தென்றல், பெருமளவு மழை கொண்டு வரும் கொண்டல் ஆகிய இரண்டைப் பற்றிய செய்திகள் ஏராளமாக உள்ளன. கதிரவனின் வெப்பம், காற்றின் வீச்சு, மேகங்களின் உருவாக்கம், காடுகளின் அமைவு ஆகிய அனைத்து மழைக் கூறுகளையும், காலநிலை பற்றிய அறிவையும் செம்மையாகக் கொண்டு இருந்தவர்களாகப் பழந்தமிழர்களை அறிய முடிகிறது.
  • பின்வரும் பருவமழைச் செய்தியைப் பதிற்றுப் பத்தின் 24ஆம் பாடலில் ‘வயங்கு கதிர்' எனத் தொடங்கும் வரிகள் விளக்குகின்றன: “ஒளிக் கற்றைகளால் கதிரவன் வானத்தில் சுடரை விரிக்கின்றான், வட திசையில் சற்றே தாழ்ந்து சிறப்பிற்குரிய வெள்ளிக் கோள் மிளிர்கின்றது, நலந்தரும் பொழுதில் துளங்கொளி என்கிற கேட்டை நாள்மீன் (நட்சத்திரம்) ஒளிர்கின்றது, மின்னொடும் இடியொடும் பெருமழை உயிர்க்குலத்தைக் காக்க பொழிகின்றது, குளிர்ந்த நீர்த்துளிகளைக் கொண்ட கொண்டல் என்கிற மேகம் வலமாக எழுந்து மிகையளவாய் மழையைக் கொண்டு முழங்குகின்றது, இப்படியான பருவமே கார் காலம் என்று அழைக்கப்படுகிறது''.
  • மிக ஆழமான வானியல் அறிவும் சூழலியல் அறிவும் இருக்கும் ஒருவரால் மட்டுமே இந்தச் செய்தியை விளக்கியிருக்க முடியும். வெள்ளி எனப்படும் மழைக்கோள் வடக்கில் எழுந்தால் மழை பெய்யும், அதுவே தெற்கில் எழுந்தால் மழை பெய்யாமல் வறட்சி வரும் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
  • ஐப்பசி மாதம் அழுகைத் தூற்றல், கார்த்திகை மாதம் கனத்த மழை' என்கிற பழமொழி துளங்கொளி நாள்மீனாகிய கார்த்திகைக் கூட்டத்தின் அமைவினால் வரும் மழை பற்றிய அறிவைச் சுட்டுகிறது.

அரிய பகுப்பு

  • நட்சத்திரங்கள் எனப்படும் நாள்மீன்களும் கிரகங்கள் எனப்படும் கோள்மீன்களும் அமைந்துள்ள முறை பற்றியும், புவியின் சுழற்சியால் ஏற்படும் பருவ காலங்கள் பற்றியுமான அறிவு நிரம்ப இருந்ததை அறிய முடிகிறது.
  • தொல்காப்பியக் காலத்தில் பருவங்கள் ஆறு, அதாவது கார், கூதிர், பனி எதிர் பருவம் (முன்பனி), வேனில் (இளவேனில், முதுவேனில்), பின்பனி ஆகியவை பற்றிக் கூறப்பட்டுள்ளது. பருவங்களை பெரும்பொழுது என்று அழைத்தனர். அதாவது கதிரவனை பூமி சுற்றி வரும் முறையில் பெரும்பொழுதுகளையும், தன்னைச் தானே சுற்றிவரும் முறையில் மாலை, யாமம் (நள்ளிரவு), வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு (மாலை மறையும் நேரம், ‘எல்' என்கிற கதிரவன் ‘படும்' நேரம்) என்று ஆறு சிறுபொழுதுகளையும் பிரித்தார்கள். அதன் பின்னர் வந்த நம்பி அகப்பொருள் விளக்கம் தெளிவாகவே ஆறு பொழுதுகளையும் பட்டியல் இட்டுள்ளது.
  • மேற்கத்திய முறையிலும், வடஇந்திய மரபிலும் பருவங்கள் நான்காகவே பிரிக்கப்பட்டுள்ளன. அவை கோடை, குளிர், இலையுதிர், வசந்தம் என்பதாகும். ஆக, பருவங்கள் பற்றிய மிக நுட்பமான அறிவை தமிழ் மக்கள் கொண்டிருந்தார்கள் என்றால் இது மிகையாகாது. அத்துடன் பருவங்களில் பெய்யும் மழை பற்றியும், வறண்ட காலங்களின் தன்மை பற்றியும் அறியும் திறன் பெற்றிருந்தார்கள்.

தேர்ந்த அறிவியல் அறிவு

  • வாழ்க்கைக்கு அடிப்படை நீர். ‘நீர் இன்று அமையா உலகம்' என்பார் கபிலர் (நற்றிணை-1), நீரின்றி அமையா என்பார் குடபுலவியனார் (புறம்:18), ‘நீரின்றமையாது உலகு’ என்பார் வள்ளுவர். பண்டைத் தமிழ் மக்கள் நீரின் மீது வைத்திருந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் நமக்கு வியப்பைத் தருவன.
  • மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்பார் இளங்கோவடிகள். மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளைப் பண்டைத் தமிழர் முன்பே அறிந்துகொண்டு இருந்துள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது.

வான்முகந்த நீர் மலைப் பொழியவும்

  • மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்’ (பட்டினப்பாலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நீர் சுழற்சி (Water Cycle) பற்றிய அறிவைப் பெற்றிருந்தார்கள் என்றும் அறிய முடிகிறது. அது மட்டுமல்லாது இந்தப் பூவுலகில் உள்ள நீரின் அளவு மாறுபடாதது என்கிற அறிவியல் உண்மையை ‘கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி' (குறள் 701) என்கிற வரிகள் குறிப்பிடுகின்றன.
  • ஆனால், அந்தக் கால மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாக கிரேக்க நாட்டு ஞானிகளான தாலஸ், இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் அரிஸ்டாட்டில் போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் இப்படிக் கடல் நீரை உறிஞ்சும்போது அதன் உப்பு மண்ணில் கரைகிறது. வானத்தில் உள்ள காற்று குளிர்ந்ததும் அது மழையாகிறது என்றும் கூறியுள்ளனர். இதுதான் பொ.ஆ. (கி.பி.) 1500 வரை அவர்களிடம் இருந்த கருத்து.

கணியன்களும் மழையும்

  • அந்தக் காலத்தில் பருவ காலங்களைக் கணிக்கும் கணியர்கள் இருந்துள்ளனர். கணியன் பூங்குன்றன் என்ற புலவர் புகழ்பெற்றவர்.

மறுவில் செய்தி மூவகைக் காலமும்

  • நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்' (தொல்: பொருள்:16) என்கிற வரிகள் மூலம் மூன்று காலங்களையும் பருவங்களையும் ஆய்தறிந்து விளக்கக்கூடிய அறிவர்கள் இருந்ததைக் காண முடிகிறது.
  • மழை வரும் நேரத்தைத் தவளைகளின் ஒலிகளை வைத்து அறியலாயினர். ‘வரி நுணல் கறங்கத், தேரை தெவிட்டக், கார் தொடங்கின்றே' (ஐங்குறுநூறு 468) என்கிற வரிகளில் நுணல் (Frog) என்கிற தவளையையும், தேரையையும் (toad) நுட்பமாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. கார் காலமாகிய மழைக்காலம் தவளையின் குரலுடன் தொடங்குகிறது. ‘தவளை கத்தினால் தானே மழை' என்கிற பழமொழியை இது நினைவூட்டுகிறது.

முகில் குறித்த அறிவு

  • மேகங்களைப் பற்றிய அறிவும் பழந்தமிழர்களுக்கு மிக நுட்பமாகவே இருந்துள்ளது. முகில்களின் அமைப்பு, அவை இருக்கின்ற உயரம் ஆகியவற்றை வைத்து குறுந்தொகை 90:3 பாடலில் அவற்றை வகைப்படுத்தியுள்ளனர்: “மிளகுக் கொடி செழிந்து வளர்ந்துள்ள அடுக்கான மலைத் தொடர்களைக் கொண்ட கானகம். இரவு முழுவதும் மழை பெய்துகொண்டே இருந்தது. முழக்கமிட்டு முழக்கமிட்டு மங்குல் எனப்படும் மேகம் பெருமழையைக் கொடுத்துச் சென்றது. இதை அறியாத குரங்கு ஒன்று பலாப் பழத்தைப் பறிக்க முயன்றது. அந்தோ பழம் வழுக்கி இரவு கொட்டிய மழையால் பெருக்கெடுத்து வீழும் அருவியில் விழுந்து கீழே இருக்கும் மக்களுக்கு உணவாகப் போயிற்று” என்கிறது.
  • முகில்களைப் பல்வேறு வகையாகப் பண்டைத் தமிழர்கள் பிரித்தறிந்துள்ளனர். சீமுதம், மங்குல், சீதம், பயோதரம், தாராதாரம், குயின் மழை, எழிலி, மஞ்சு, கொண்டல், சீமுதம், கொண்மூ, முகில், விண், விசும்பு, மால், சலதரம், செல், புயல், கனம், கந்தரம், கார், மை, மாரி ஆகிய பெயர்களை சூடாமணி நிகண்டு குறிக்கின்றது.
  • உலக வான்பொருளியல் அமைவனம் முகில்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றது. குவிந்து அடர்த்தியாக உள்ள மேகத்தை குமுலஸ் என்றும், அடுக்கடுக்கான தட்டங்களாக உள்ள மேகத்தை ஸ்ட்ராடஸ் என்றும், இழைகளாக உள்ள மேகத்தை சிர்ரஸ் என்றும் பகுக்கின்றது. மழையும் மழையைக் கொணரும் முகிலும் மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாதவை. இவற்றைப் பற்றிய அறிவும் வெப்பமண்டலப் பகுதி மக்களாகிய நம் நாட்டுப் பண்டை மூதாதைகளுக்கு இருந்ததை மறுக்க முடியாது.

காற்றும் பருவமழையும்

  • காற்றுகளின் தன்மை பற்றிய அறிவும் மிகுந்து இருந்ததைக் காண முடிகிறது. தெற்கில் இருந்து வரும் காற்று தென்றல், வடக்கில் இருந்து வரும் காற்று வாடை, கிழக்கில் இருந்து வரும் காற்று கொண்டல், மேற்கில் இருந்து வரும் காற்று கோடை என்று பிரித்தறியப்பட்டது. மழை வரும் அறிகுறிகளைக் குறிப்பிடும் முக்கூடற்பள்ளு,
  • ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி-மலை
  • யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
  • நேற்று மின்றுங் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
  • நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே
  • சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே - மழை
  • தேடியொரு கோடி வானம் பாடியாடுதேஎன்கிறது.
  • கிழக்குக் கடலில் முகந்து மேற்கே எழுந்து மழையைப் பொழியும் வடகிழக்குப் பருவமழையை நற்றிணை இப்படிச் சொல்லி விளக்குகிறது.
  • குண கடல் முகந்து குடக்கேர்பு இருளி
  • மண் திணி ஞாலம் விளங்க” - நற்: 153:1

பழமொழிகளில் மழை...

  • இது தவிர பழமொழியாக, முதுமொழியாக அறிவு மரபின் தொடர்ச்சி நம்மிடம் காணப்படுகிறது. ‘அகல வட்டம் பகல் மழை' என்பது ஒரு பழமொழி. நிலாவைச் சுற்றிக் காணப்படும் முகில்களின் வட்ட வடிவத்தை வைத்து இதைக் கணிக்கிறார்கள். அகலமாக நிலாவைச் சுற்றி வட்டம் காணப்படுமானால், அப்போது பகலில் மழை வருமாம். அதேபோல ‘கிட்டத்தில் கட்டினால் எட்டத்தில் மழை, எட்டத்தில் கட்டினால் கிட்டத்தில் மழை' என்றொரு மொழி உண்டு. இதன்படி நிலா வட்டம் நெருக்கமாக இருந்தால் மழைக்காலத்தில் அருகே மழை பெய்யுமாம். விரிவாக வட்டம் இருந்தால் சற்றுத் தொலைவில் மழை உண்டாகும் என்று கணிக்கின்றனர்.
  • மற்றொரு பழமொழி, ‘அந்தி மழை அழுதாலும் விடாது'. மாலை நேரத்தில் பெய்யத் தொடங்கும் மழை கடுமையாகப் பெய்யும். அது அழுதாலும் நிற்காது என்று கூறுவர். மழையைப் பொருத்த அளவில், கார்த்திகை மாதத்துடன் முடிந்துவிடும், அதற்குப் பின்னர் மழை வருவது கிடையாது. எனவே, அதை வலியுறுத்துமாறு வந்த பழமொழி, ‘கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை'.
  • பருவத்தில் பயிர் செய்ய வேண்டும் என்பது வழக்கு. அதாவது உரிய பருவத்தில் பயிர் செய்யும்போதுதான் சரியான மழை கிடைக்கும். பருவம் மாறும்போது, ஈரப்பதம் மாறும், காற்று வீசி பயிரை நாசப்படுத்தலாம். கடும் வெயிலில் பயிர் கருகலாம். பூச்சித் தாக்குதல் இருக்கும். சில விதைகள் பருவம் மாற்றி விதைத்தால் முளைப்பதில்லை. எனவே, உரிய பருவத்தில் செய்வதே வேளாண்மைக்குச் சிறப்பு. அந்த வகையில் மழை குறித்த புரிதலும் அறிவும் நம் மூதாதையர்களிடம் அளப்பரிய அளவில் இருந்துள்ளது.

நன்றி: தி இந்து (09 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்