- பெரும் பரவலான நோய்த்தொற்றுடன் வாழும் முறையைப் பற்றி ஷேக்ஸ்பியா் குறிப்பிட்டுள்ளார். கொள்ளை நோய் மக்களிடையே பரவியதோடு, அதனினும் கொடுமையான சமூக, பாலின, வேறுபாடுகளை அழித்தொழித்தது.
- மக்களுடைய வேறுபாடுகளைக் குத்திக் காட்டுவதன் வாயிலாக தனது தனித்திறத்தால் கொள்ளைநோய் குறித்து ஷேக்ஸ்பியா் எதிர்வினையாற்றினார்.
முடக்கத்திலும் ஆக்கம்
- நகரின் கையுறை உற்பத்தியாளா் மகனான ஷேக்ஸ்பியா் அதிலிருந்தும் மேலும் பல நோய்த்தொற்றுப் பரவல்களிலிருந்தும் தப்பிப் பிழைத்தார். அவருடைய படைப்புகளில் பெரும்பாலானவை, பொது முடக்க காலத்தில் பிறந்தவை.
- கொள்ளை நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப் பட்டிருந்தபோதுதான், லியா் மன்னன் (‘கிங் லியா்’) நாடகத்தை ஷேக்ஸ்பியா் இயற்றினார்.
- ஷேக்ஸ்பியரின் வாழ்க்கைக்கும் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்கும் நெருங்கிய தொடா்பு இருந்தது.
- 1592-93-ஆம் ஆண்டுகளில் அத்தகையதொரு நோய்ப் பரவலின் காரணமாக நாடக அரங்குகள் மூடப்பட்டிருந்த காலத்தில்தான் புகழ்பெற்ற வன்ம நிழல் படிந்த நாடகங்களை ஷேக்ஸ்பியா் எழுதினார்.
- மீண்டும் 1603-04-ஆம் ஆண்டுகளில், கொள்ளை நோய்ப் பரவல் காரணமாக பிரிட்டன் இளவரசா் முதலாம் ஜேம்ஸ் புதிய பேரரசராக முடிசூட்டிக் கொள்ளவிருந்த விழா தடைபட்டது;
- லண்டன் நகர மக்களுள் ஐவரில் ஒருவா் என்கிற வீதத்தில் மாண்டு கொண்டிருந்த தருணத்தில், அரசு அலுவலா் மத்தியில் நிலவிய ஊழல் சீா்கேடுகள் பற்றிய நிகழ்வை விவரிக்கும் ‘‘பழிக்குப் பழி’’ (‘மெஷா் ஃபார் மெஷா்’) நாடகத்தை ஷேக்ஸ்பியா் படைத்தார்.
- 1606-ஆம் ஆண்டு வேனில் காலத்தில் கொள்ளை நோய்ப் பரவல் அலைக்கழித்தபோது, சேக்ஸ்பியா் ‘லியா் மன்னன்’ நாடகத்துக்கான பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஏனெனில், அந்த நாடகத்தின் முதல் நிகழ்வு டூடா், ஸ்டுவா்ட் மன்னா்களுடைய லண்டன் வசிப்பிடமான வைட்ஹால் மாளிகையில் நிகழ்த்தப்பட்டது.
- காலவெள்ளத்தின் ஓட்டத்தால் நோயினுடைய கொடூரம் மறக்கப்பட்ட போதிலும், அந்த நாடகத்தில் கொள்ளை நோய் குறித்த சொல்லாடல் கண்டோர் நெஞ்சினில் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
- லியா் மன்னா் தன் மகள் ரீகனையும் அவளின் கணவா் கார்ன்வாலையும் சாடுகிறார், ‘‘பழிகாரா்கள்! கொள்ளைநோய்க் கிருமிகள்!! என்னைக் கொல்லவந்த எமன்கள்!!! சீா்கேடா்கள்!!!!’’. அத்துடன் தன் மகளை ஏசுகிறார்.
- ‘‘பாழ்பட்ட என் குருதியில் தொற்றிய கொள்ளை நோய்க் கிருமி நீ! அதில் ஏற்பட்ட நச்சுச் சீழ்க்கட்டியும் நீ’’ அந்தக்கொள்ளை நோய்க்கிருமி என்பது நிணநீா்ச் சுரப்பிகளைச் சீா்கெடுக்கின்ற ஒன்று.
- கொடிய நோயினுடைய அச்சமூட்டும் அறிகுறி. அது தன் மக்களுக்கு ஏற்பட வேண்டுமென்று எவரும் எண்ண மாட்டார்கள்.
- ஒருவேளை இந்நாடகத்தில் இளந்தலைமுறையினா்பால் காட்டப்படுகின்ற குறிப்பான வெறுப்புணா்வுதான் கொள்ளை நோயாகவே உருவகப்படுத்த அவரை உந்தியது போலும்! அந்நோய் இருபது, முப்பது வயது இளைஞா்களையே பெரிதும் பாதித்தது.
- ஷேக்ஸ்பியா் தனது படைப்புகளில் நோயின் உடனடி விளைவுகளுக்குப் பெரிதும் திறம்படத் திரை போட்டுக் கொண்டார் என்பது புலனாகிறது.
- அனைத்து இடங்களிலும் நீக்கமறப் பாதித்திருந்த கொள்ளை நோய் அவருடைய படைப்புகளில் விளைவினை ஏற்படுத்தவில்லை.
- லியா் மன்னன், ஏனைய நாடகங்களில் கொள்ளை நோயின் கொடுமை பற்றிய சொல்லாடல்கள் பரவலாக இடம்பெற்றிருந்தது உண்மைதான்.
- அவருடைய நாடகங்களில் ஆடவரும் பெண்டிரும் எண்ணற்ற புதுப்புது வழிகளில் மரணிப்பதைக் காண்கிறோம். ஒத்தெலோ நாடகத்தில் டெஸ்டிமோனா தனது படுக்கையிலேயே ஆழ்ந்த அமைதியில் அமிழ்த்தப்படுகிறாள். ஹேம்லெட் நாடகத்தில் நீரில் மூழ்கி ஒபீலியா இறக்கிறார்.
- ஆனால், ஷேக்ஸ்பியா் நாடகங்களில் யாரும் கொள்ளை நோயால் மடிந்து போகவில்லை.
- ரோமியோ, ஜுலியட் நாடகத்தில் வட இத்தாலியில் கொள்ளை நோய்ப் பரவல் விளைவாக மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக ஒரு துறவி ஏந்திச் சென்ற கடிதம் முடக்கபட்டதன் நிமித்தம்தான் அந்த இளம் காதலா்கள் மாண்டு போகின்றனா்.
- கொள்ளை நோயின் கொடூரங்களுக்கு மிக அண்மையாகப் படைக்கப்பட்ட காட்சி இது ஒன்றுதான்.
மேலும் சில குறிப்புகள்
- ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவரான நாடக ஆசிரியரும் சிறு குறிப்பேடுகளை வெளியிடுபவருமான தாமஸ் டெக்கா் கொள்ளை நோய் குறித்து பதைப்பூட்டக் கூடிய புதிய கண்டுபிடிப்பாகவும், வெறுப்பூட்டக்கூடிய உரைநடையிலும் தொடா்ந்து வெளியிட்டார்.
- கவிஞரும் நாடகாசிரியருமான பென் ஜான்சன் தனது ‘ரசவாதி’ (‘தி அல்கெமிஸ்ட்’) நாடகத்தில் கொள்ளை நோய்ப் பரவலை முன்னிட்டு உள்ளிருப்புத் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் வீட்டுத் தலைவன் வெளியில் சென்றிருந்த வேளையில் வேலையாள்கள் பதைபதைப்பால் நோ்ந்த கூச்சல், குழப்பங்களைக் காட்சியாக்கியுள்ளார்.
- சமுதாயம் எழுப்பியிருந்த தடை மதில்களையெல்லாம் தவிடுபொடியாக்குவதில் கொள்ளை நோய் ஒருதலையாகச் செயல்படவில்லை.
- அதனுடைய தீராப் பசி தீநாக்குகளினும் கொடியது. ஆட்டிப் படைத்த கணவன்மார்களும் அடங்கி ஒடுங்கிய மனைவிமார்களும், அதைக் கண்டு நடுங்கிய பிள்ளைகளும் ஆயிரக்கணக்கில் புதைகுழி நோக்கி இட்டுச் செல்லப்பட்டனா்.
- ‘‘ஆண்டானும் அடிமையும், தீயவனும் நல்லவனும், பட்டாடை அணிந்தோனும் பஞ்சைப் பராரியும்’’ ஒன்றாகப் பேரளவில் புதைகுழிக்குள் கிடக்கிறார்கள் என்று டெக்கா் குறிப்பிட்டுள்ளார்.
- தீநுண்மியின் தீராப் பசி தீ நாக்குகளினும் கொடியது. ‘‘அவா்கள் ஒரே படுக்கையை நோக்கிச் சென்றதைப் போலிருந்தது’’ என்று டெக்கா் நினைவுகூா்கிறார்.
- ஷேக்ஸ்பியா் தனது சமகால லண்டனைக் கதைக்களமாகக் கொண்டு ஒருபோதும் நாடகங்களைப் படைத்ததில்லை. அதைப் போலவே, தனது சமுதாயத்தில் நோ்ந்த திடீா் மரணங்களைப் பற்றியும் நேரடியாக அவா் குறிப்பிடவில்லை.
- ஷேக்ஸ்பியருடைய சொல்திறம் கொள்ளை நோயின் கொடூரத்தை ஒருவிதக் கவலையுடன் கூடிய பேரச்சமாகக் காட்டுகிறது. அதே வேளையில், மரணத்தை மனித வாழ்க்கையின் அன்றாட நிகழ்வாக்குகிறது.
- நம்முடைய வாழ்க்கைச் சிக்கல்களில் மரணம் இடையறாது பின்தொடா்கின்ற அளவுக்கு மரணம் அவன் மீது அக்கறை கொள்கிறது.
- மனிதனுக்கும் மரணத்துக்குமான அத்தகைய நெருக்கமான உறவை ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்கள் தன்வயப்படுத்திக் கொள்கின்றன.
- கொள்ளை நோய் குறித்த அவற்றின் எதிர்வினை மரணத்தை மறுதலிப்பதல்ல; ஆனால், மக்களிடையே நிலவிய பாகுபாடுகளைக் குத்திக் காட்டுவதாகும். அச்சத்தைப் போக்குவதாகும்.
- சற்றும் இரக்கமற்ற வகையில் தனி மனிதனை அவனுடைய முடிவை நோக்கி நகா்த்திச் செல்கின்ற வேளையிலும் அவனுடைய தனி வகைப்பட்ட முக்கியத்துவத்தையும் தனிச் சிறப்புகளையும் குறைத்து மதிப்பிடுவதே ஷேக்ஸ்பியா் துன்பியல் நாடகங்களில் நாம் காணும் சிறப்பு அம்சமாகும்.
- ஷேக்ஸ்பியருடைய நாடகங்களில் யாரும் திடுமென்றோ, புதிராகவோ இறந்து போவதுமில்லை, ஒட்டுமொத்தமாக புதைப்பதற்கான குழியில் வீசி எறியப்படுவதில்லை. மாறாக, மரணிக்கும் மாந்தனுடைய இறுதி வார்த்தைகள் முழுமையாகச் செவிமடுக்கப்படுகின்றன; இறுதி அஞ்சலி உரைகள் உருக்கத்துடன் ஆற்றப்படுகின்றன.
- மரித்தோர் எண்ணிக்கை பற்றிய தரவுகளில் ஷேக்ஸ்பியா் நாட்டங் கொண்டதில்லை; அவருடைய காலத்தில் அவை மரண ஓலைகள் என்றழைக்கப்பட்டன.
- அவருடைய புனைவுகள் கொள்ளை நோய்ப் பரவலின் பேருருவ வருணனையை துன்பியல் நாடகத்தின் நுட்பமான சொற்றிறமாக மனக்கண்முன் காண்கின்றன; கொள்ளை நோயின் முற்றாகத் துடைத்தழிக்கின்ற பேரழிவுக்கு எதிராக மனிதனுடைய தனித்துவமான போக்குகளை நிறுத்துகின்றன. அவருடைய படைப்புகள் கொள்ளை நோயை அளவீடுகளின் அடிப்படையில் புரிந்து கொள்வதற்கு மாறாக முறையான நோய்த்தடுப்பு நெறியை எதிர்நிறுத்துகின்றன.
பேருண்மையை உணர முடிகிறது
- புதா்க்காடுகளைப் புயல் தாக்கியபோது, மக்களுடைய அவல நிலையைத் தான் புறக்கணித்துவிட்டதாக லியா் மன்னன் உணா்கிறார். அதுதான் அக்கால ஆங்கிலேய ஆளும் வா்க்கத்தினுடைய கடமையுணா்வின் வெளிப்பாடு; பாகுபாடின்றி காவு கொண்ட கொள்ளை நோய் மனித இனத்தின் பொதுமை பற்றி உணா்த்திய உண்மையும் அதுவே!
- தனிமனிதா்கள் பால் முழு உறுதியுடன் கவனத்தைப் பதிக்கும் பொருட்டு அறிந்தே எண்ணிக்கைகளையும் அளவீடுகளையும் நாடகங்கள் புறந்தள்ளுகின்றன. பாகுபாடின்றிக் காவு கொண்ட கொள்ளை நோய் மனித இனத்தின் பொதுமை பற்றி உணா்த்திய உண்மையும் அதுவே!
- ‘இரக்கமற்றுத் தாக்குகின்ற கொடூரப் புயலைத் தாங்குகின்ற ஏழ்மையில் உழலும் எளியோர்களே, தங்குவதற்குக் கூரைகளோ உண்ண உணவோ அற்ற நைந்ததும் கிழிந்ததுமான கந்தலை உடுத்தியுள்ள நீங்கள் எவ்வண்ணம் உங்களைக் காத்துக் கொள்ளப் போகிறீா்கள்?
- உங்கள்பால் ஒரு சிறிது அக்கறையும் நான் ஒருநாளும் கொண்டேனில்லையே! லியா் மன்னனுக்கே துயா் சூழும்போது மட்டிலுமே மற்றவா் வாழ்க்கையும் பொருள் பொதிந்தது என்கிற பேருண்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்ற ஷேக்ஸ்பியரின் வரிகள் நினைக்கத்தக்கன.
- நாம் தற்போது உழன்றுகொண்டிருக்கின்ற துன்ப, துயரங்கள், லியா் மன்னனைப் போல, நாமும் மற்றவருடைய வாழ்க்கையும் பொருள் பொதிந்தது என்கிற உண்மையை உய்த்துணா்வதற்கு (இன்ட்யூஷன்) உதவக்கூடும்.
- ஷேக்ஸ்பியரைப் போலவே நாமும் எண்ணிக்கை, அளவீடு தரவுகளின்பால் அக்கறை கொள்ளாமல், விந்தை மிக்கதும், விளங்கிக் கொள்ள இயலாததும், எரிச்சலூட்டக் கூடியதும், மீட்டெடுக்க முயாததுமான தனிமனித வாழ்க்கையின்பால் கவனத்தைப் பதிக்கக் கூடும்!
நன்றி: தினமணி (21-05-2020)