TNPSC Thervupettagam

பரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்!

February 14 , 2020 1795 days 830 0
  • சீனாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது - கோவிட்-19.
  • மனித உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் இப்போதுதான் உள் நுழைகிறது. வெகு வேகமாகப் பரவுகிறது.
  • இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப் பாதித்திருக்கிறது. இதில் 99% பேர் சீனர்கள்தான். நோயின் கொடுங்கரங்களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
  • இந்த வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாடுபடுகிறது சீனா. இந்த வைரஸைக் காட்டிலும் வேகமாகப் பரவும் விஷயங்கள் இரண்டு: வதந்தியும் சீனாவின் மீதான வன்மமும்.

வதந்தியும் வன்மமும்

  • ஜனவரி தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட பதிவு இது: ‘இந்த கரோனா வைரஸின் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும்.
  • ஏனெனில், இது சீனாவில் தயாரிக்கப்பட்டது.’ கூடவே, பொங்கிச் சிரிக்கிற மஞ்சள்நிற வட்ட முகச் சித்திரங்கள் இரண்டு. அதாவது, இது நகைச்சுவை என்றறிக என்கிறார்கள் இதை எழுதியவர்களும் அனுப்பியவர்களும்.
  • இதேரீதியிலான இன்னொரு பதிவு: ‘சீனர்கள் கண்டதையும் தின்றதால்தான் அங்கே கரோனா வைரஸ் பரவியது என்கிறார்கள். சீனர்கள் கண்டதையும் தின்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் நான்கு கால்கள் உள்ளவற்றில் ஒன்றையும் பறப்பனவற்றில் ஒன்றையும் தின்பதில்லை. அவை முறையே நாற்காலி, விமானம்.’ இதற்குக் கீழேயும் நகைக்கும் சித்திரங்கள்.

தமிழர்களும் விதிவிலக்கு அல்ல

  • மேலே சொன்ன பகடிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அயல் நாடுகளில் உருவானவை. தமிழ்ப் பதிவர்களும் இவர்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர். ஒரு பதிவு இப்படி ஆரம்பிக்கிறது: ‘சீனா இதற்கு முன் பல முறை இதே போன்ற கொடிய நோய்த்தொற்றால் அவதிப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் தமிழ்ச் சித்தர்களான போகரும் போதிதர்மரும் நம் நாட்டிலிருந்து அங்கு சென்று மூலிகை வைத்தியம் செய்து சீன தேசத்தையே உயிர்ப்பித்தனர்.’
  • பதிவரின் உத்தேசம் பகடியல்ல என்பது தொடர்ந்து வரும் வரிகளால் தெரிகிறது. ‘இந்த வைரஸுக்கு மருந்தே இல்லை என்று சொல்கிறது உலகம்.
  • ஆனால், நமது சித்த வைத்தியம் எப்பேர்ப்பட்ட வைரஸையும் குணமாக்கும். பீர்க்கங்காய் பிஞ்சு ஒன்றைச் சிறு துண்டுகளாக்கி, எலுமிச்சைச் சாறு கலந்து தேவைக்கேற்ப உப்பும் ஒரு டம்ளர் தண்ணீரும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகவும். பத்தியமெல்லாம் கிடையாது.’
  • அமெரிக்க விஞ்ஞானிகள் கோவிட்-19-ன் மரபுக் கட்டமைப்பைக் கண்டறிந்து, முறிவைக் கண்டுபிடிக்க மூன்று மாத காலத்தை இலக்காக நிர்ணயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
  • 2003-ல் இதேபோன்ற ‘ஸார்ஸ்’ எனும் தொற்றுநோய் தாக்கியபோது முறிவைக் கண்டடைய 20 மாதங்கள் வேண்டியிருந்தன.
  • இதோடு ஒப்பிடும்போது, விஞ்ஞானிகள் இப்போது நிர்ணயித்துக்கொண்டுள்ள இலக்கு எத்தனை சவாலானது என்று ஊகிக்கலாம்.
  • டிசம்பர் மத்தியில் சீனாவின் வூகான் நகரின் மீன்களும் விலங்கு இறைச்சியும் விற்கிற பிரதானச் சந்தையிலிருந்து நோய்த் தொற்று தொடங்கியிருக்க வேண்டும் என்று கணித்திருக்கிறார்கள்.
  • தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சந்தைக்கு வந்துபோகிறவர்களாக இருந்தார்கள். விரைவில், இந்த வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றக் கற்றுக்கொண்டிருந்தது.
  • ஜனவரி முதல் வாரத்தில் நேர்ந்த மரணங்களுக்கு இந்த வைரஸே காரணம் என்று கண்டறியப்பட்டது. ஜனவரி மூன்றாம் வாரத்தில் வூகான், புறவுலகிலிருந்து துண்டிக்கப்பட்டது.
  • விரைவில், வூகானைச் சுற்றியுள்ள பல நகரங்களுக்கான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சுமார் 6 கோடி மக்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
  • இது வரலாற்றில் முன்மாதிரி இல்லாதது. 2003-ல் ‘ஸார்ஸ்’ ஹாங்காங்கின் அமாய் தோட்டம் என்கிற அடுக்குமாடிக் குடியிருப்பில் பரவியது.
  • இது கண்டறியப்பட்டபோது, ஹாங்காங் அரசு அந்தக் குடியிருப்பில் வசித்தவர்கள் அனைவரையும் நகருக்கு வெளியே அழைத்துச் சென்றுத் தனிமைப்படுத்தியது. தனிமைப்படுத்துவது என்பது அப்படித்தான் நடக்கும். இப்படி ஒரு மாநிலத்தின் பெருவாரி மக்களை மொத்தமாகத் தனிமைப்படுத்துகிற துணிவும் சக்தியும் உலகில் வேறு எங்கும் சாத்தியப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.
  • இரண்டு வாரக் கெடு விதித்துக்கொண்டு 2,300 படுக்கைகள் கொண்ட இரண்டு பெரிய மருத்துவமனைகளை வூகான் நகரில் கட்டி முடித்திருக்கிறது சீன அரசு. என்றாலும், அவையும் போதுமானதாக இல்லை என்கின்றன அங்கிருந்து வெளியாகும் செய்திகள். இந்த யுத்தத்தில் எதிரியோடு முகங்கொடுத்துப் போராடும் மருத்துவர்களும் தாதியர்களும் களப்பலி ஆகிறார்கள்.
  • இது தெரிந்தும் வைரஸின் கொடுங்கரம் நீண்டிருக்கும் இடங்களுக்கு மருத்துவர்கள் அழைக்கப்படுகிறார்கள்; வருகிறார்கள் லியூ யூ மருத்துவர் ஷாங் சி நகரிலிருந்து வூகான் வந்திருக்கும் 137 மருத்துவர்களில் ஒருவர். லியூ பேரிடர் பணிகளுக்குப் புதியவர் அல்லர்.
  • 2003-ல் ‘ஸார்ஸ்’ தாக்குதலின்போதும், 2008 வென்சுவான் நிலநடுக்கத்தின்போதும், 2010 யுஷூ நிலநடுக்கத்தின்போதும் மீட்புப்பணி ஆற்றியவர்.

நாடு முழுவதும் ஓரணியில்

  • நோயாளிகளும் அவர்தம் குடும்பத்தினரும் துப்புரவுப் பணியாளர்களும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் ராணுவ வீரர்களும் விஞ்ஞானிகளும் பத்திரிகையாளர்களும் மருத்துவர்களும் தாதியர்களும் அரசு ஊழியர்களும் ஒற்றைக் கட்டாக நின்று போரிடுகிறார்கள். இந்த வேளையில்தான் சீனாவுக்கு எதிரான வன்மமும் வதந்தியும் பரப்பப்படுகிறது.
  • சீனா உயிர்க்கொல்லி வைரஸ்களைச் சோதனைச்சாலைகளில் உற்பத்திசெய்கிறது என்றொரு வதந்தி காற்றில் பரவியபடி இருக்கிறது. சீனர்களின் உணவுப் பழக்கத்தைக் கிண்டலடிக்கும் பதிவுகளுக்கும் குறைவில்லை.
  • நம்மிடையே சைவ உணவு சாப்பிடுகிற சிலர், தாங்கள் அசைவ உணவுக்காரர்களைவிட மேலானவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆட்டுக்கறி சாப்பிடுகிற சிலர் மாட்டுக்கறி சாப்பிடுகிறவரைக் கீழானவராகக் கருதிக்கொள்கிறார்கள்.
  • இரண்டும் சாப்பிடக்கூடிய ஒருவருக்குப் பன்றியிறைச்சி தாழ்வானதாக இருக்கிறது. உணவு என்பது அவரவர் தேர்வு. அவரவர் பண்பாட்டையும் நிதி நிலையையும் சூழலையும் பொறுத்து அமைவது. இதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் சரியாகுமா?

சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

  • அதுபோலவேதான் சீனத் தயாரிப்புகள் விரைவில் காலாவதியாகும் என்கிற நையாண்டியும். இப்படிப் பகடிசெய்கிறவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். சீனா உலகின் தொழிற்சாலையாக விளங்குகிறது.
  • உலகெங்கிலும் உள்ள வணிகர்கள்தான் இன்ன தரத்தில் பொருட்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது, பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கிறார்கள்.
  • வணிகர்கள் கேட்கிற தரத்தில் அதற்கேற்ற விலையில் பொருட்களை உற்பத்திசெய்கிறது சீனா.
  • அவற்றுள் தரமான பொருட்களும் இருக்கும். தரம் தாழ்ந்தவையும் இருக்கும். இரண்டுக்கும் வெளிநாட்டு வணிகர்களே பொறுப்பு.
  • இந்தியா போன்ற மனிதவளம் மிக்க நாடுகள் தொழில் துறையில் சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மாறாக, நையாண்டி செய்வது, அதுவும் சீனா புண்பட்டு நிற்கிற இந்த வேளையில், நாகரிகமாகாது.
  • சீனா முகம் தெரியாத அரக்கனோடு போரிடுகிறது. அரக்கனின் கரங்கள் சீனாவுக்கு வெளியேயும் நீள்கின்றன. நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
  • அதேவேளையில், நமது நல்லெண்ணத்தையும் சீனர்கள்பால் அருள வேண்டும். அதன் முதல் படி வன்மத்தையும் வதந்தியையும் பரப்புவதை நிறுத்திக்கொள்வதுதான்.

 

நன்றி : இந்து தமிழ் திசை (14-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்