- எகிப்தின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் 27-ஆவது சா்வதேச பருவநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் விடுத்த எச்சரிக்கை குறித்து உலக நாடுகள் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ‘‘உலக வெப்பநிலை தொடா்ந்து கூடி வருகிறது. இதன் காரணமாக, ‘பருவநிலை நரகத்தை’ நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் அதிவேகமான பயணத்தை நாம் மேற்கொண்டு வருகிறோம். தற்போது மனித குலத்தின் முன் இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன; பருவநிலை ஒத்துழைப்பு ஒப்பந்தம் அல்லது தற்கொலை ஒப்பந்தம் ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் உலக நாடுகள் தோ்ந்தெடுக்க முடியும்’’ என்பதுதான் குட்டெரெஸின் எச்சரிக்கை.
- பாரீஸ் பருவநிலை ஒப்பந்த இலக்கை எட்டுவதற்காக வளா்ச்சியடைந்த நாடுகளும், வளா்ந்து வரும் நாடுகளும் இந்த பருவநிலை மாநாட்டில் உறுதி மேற்கொள்ள வேண்டும் என்றும், உலகின் இருபெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் சீனாவும் இந்த விவகாரத்தில் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.
- பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி மட்டுமே அதிகமாக உலகின் வெப்பநிலையை வைத்திருக்கவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்தவும் அந்த மாநாட்டில் உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. எனினும், அந்த இலக்கை எட்டுவதற்கு உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்தவில்லை என்பதே குட்டெரெஸின் குற்றச்சாட்டு.
- பூமியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உருவாகி தழைத்திருப்பதற்குத் தேவையான வெப்பத்தை வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓஸோன் ஆகிய வாயுக்கள் சூரியனிடமிருந்து பெற்றுத் தருகின்றன. இதனால்தான் அந்த வாயுக்கள் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ என்றழைக்கப்படுகின்றன. ஆனால், தொழில்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகள், வாகனங்கள் பெருகி, அவற்றிலிருந்து வெளியாகும் கரியமிலவாயு வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாகக் கலந்துவருவதால் புவியின் வெப்பம் அதிகரித்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
- தொழில்புரட்சிக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் பூமியின் வெப்பநிலை ஏற்கெனவே 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. உலக வானிலையிலும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிகழாண்டு பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் அசாதாரண வெப்பம் உருவானது; சீனாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டது; அதேவேளையில், நைஜீரியா, பாகிஸ்தானில் பேரழிவு வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான உயிா்களையும், உடைமைகளையும் இழக்க நோ்ந்தது - இவையெல்லாம் புவி வெப்பமயமாதலின் வெளிப்பாடுகள்.
- வளா்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக, வளரும் நாடுகளுக்கும், ஏழ்மையான நாடுகளுக்கும் பருவநிலை கட்டுப்பாட்டு இலக்கு நிா்ணயிப்பதுதான் பருவநிலை விவகாரத்தில் ஒத்துழைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம். பாரீஸ் ஒப்பந்தப்படி வெப்பநிலை உயா்வைக் கட்டுக்குள் வைத்திருக்க, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து மரபுசாரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதனால் வளரும் நாடுகளும் ஏழ்மையான நாடுகளும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இழப்பைச் சந்திக்க நேரிடும். இதை ஈடுகட்ட இந்த நாடுகளுக்கு நிதியுதவி தேவைப்படுகிறது.
- இழப்பு, நிதியுதவி தொடா்பான கருத்துருவாக்கம் எகிப்து பருவநிலை மாநாட்டின் விவாதங்களில் சோ்க்கப்பட்டது. சில வளா்ச்சியடைந்த நாடுகளால் நிதி உறுதிமொழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ‘பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுப்பதற்காக, வளா்ந்து வரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ. 8 லட்சம் கோடியை வழங்குவதாக வளா்ச்சியடைந்த நாடுகள் 2009-ஆம் ஆண்டில் உறுதியேற்றன. இப்போதைய இலக்கின்படி இந்த நிதி குறைவென்றாலும், அந்த நிதியே இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, வளா்ச்சியடைந்த நாடுகள் 2024-ஆம் ஆண்டுக்குள் அந்த நிதியை வழங்க வேண்டும்’ என இந்த மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
- உலக அளவில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் சீனாவின் பங்கு சுமாா் 27%. இதற்கு அடுத்ததாக அமெரிக்காவின் பங்கு 11% ஆகும். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையிலும் இந்த இரு நாடுகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால், பருவநிலை மாற்றம் தொடா்பான இருதரப்பு பேச்சுவாா்த்தையை இருநாடுகளும் மேற்கொள்ளவில்லை. ஏழ்மையான நாடுகளுக்கு பருவநிலை மாற்ற நிதி வழங்குவது தொடா்பாகவும் இந்த இருநாடுகளும் இதுவரை மெளனம் காக்கின்றன.
- ‘கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் அதே வேளையில் வளா்ச்சியையும் அதிகரிக்க வேண்டும் என வளரும் நாடுகள் மீது நியாயமற்ற சுமையை சுமத்துவதற்குப் பதிலாக, தூய்மையான வளா்ச்சிக்காக அந்த நாடுகளுக்கு உதவ வேண்டும்’ என்கிற பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்கின் கருத்து வரவேற்புக்குரியது.
- வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள எகிப்து மாநாட்டில் அமெரிக்காவையும், சீனாவையும் ஓா் உறுதிப்பாடு எடுக்கச் செய்வதே பருவநிலை மாற்றத்தை உலகம் எதிா்கொள்வதற்கான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.
நன்றி: தினமணி (11 – 11 – 2022)