பருவநிலை உச்சங்களும் வாழ முடியா நகரங்களும்
- வட இந்திய மக்கள் ஆண்டுதோறும் வானிலையின் இருமுனை உச்சங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். அதோடு, மழைக்காலத்தின் அபாயங்களையும் அவர்கள் சமாளித்தாக வேண்டும். கோடையைத் தாண்ட, குறைந்தபட்சம் வெப்பத் தணிப்பானின் (வாட்டர் கூலர்) தயவு வேண்டும்; குளிர்காலத்தைச் சமாளிக்க, சூடேற்றும் கருவி (ஹீட்டர்) வைத்தேயாக வேண்டும். கோடைக்கும் வாடைக்கும் இரண்டு வகையான உடைகள்; பள்ளிகளுக்கு இரண்டு வித நேர ஒழுங்குகள்.
- அதேநேரம், வீடற்றோரின் நிலைமையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. வெப்ப அலை, குளிர் அலையில் இறந்து போகிறவர்களின் புள்ளிவிவரம் பெரும்பாலும் இவர்களைப் பற்றியவை. புதுடெல்லியில் குடிசைவாழ் மக்களின் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பிடங்கள் பசுமைப் போர்வை அற்றவையாக இருக்கின்றன; விளையாட்டுத் திடல்களாக வழங்கப்பட்ட இடங்கள் குப்பைக் கிடங்குகள் ஆகியிருக்கின்றன.
- இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுவரும் தரவு உலர் குமிழ் வெப்பநிலை (Dry Bulb Temperature) மட்டுமே; ஈரக் குமிழ் வெப்பநிலை (Wet Bulb Temperature) குறித்து அது பேசுவதில்லை. சூழலின் வெப்பம் மனித உடலின்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்பது காற்றின் வெப்பநிலையும் ஈரப்பதமும் இணைந்து ஏற்படுத்துவது. இதை வெப்பக் குறியீடு (Heat Index) என்பார்கள். உயர் வெப்பநிலையைச் சமாளிக்கும் வழிகாட்டுதல்கள் ஈரக் குமிழ் வெப்பநிலையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும்.
புதுடெல்லி நகரம்:
- புவியியல் பேதமின்றி, உலகின் பல்வேறுபகுதிகளின் வெப்பநிலை உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கான தரவுகள் அதை மெய்ப்பிக்கின்றன: மரணப் பள்ளத்தாக்கு (அமெரிக்கா) 56.7 பாகை செல்சியஸ்; ஜெட்டா (சவுதி அரேபியா) 52; அஹ்வாஸ் (ஈரான்) 54; ஃபாலோதி (ராஜஸ்தான்) 51; ஓன்ஸ்லோ (ஆஸ்திரேலியா) 50.7; சிசிலி (இத்தாலி) 48.8; கொனிங்ஸ்பி (பிரிட்டன்) 40.3; குமகாயா (ஜப்பான்) 41.1 பாகை செல்சியஸ்.
- புதுடெல்லி நகரத்தின் வானிலைப் போக்குகளையும் அதன் புதிய சவால்களையும் ஜாஸ்மின் நிகலானி அலசியிருக்கிறார் (தி இந்து, 11.07.2024). இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தளத்திலிருந்து அவர் சேகரித்திருக்கும் 75 ஆண்டு (1951-2024) தரவுகளின் அடிப்படையில் புதுடெல்லி நகரத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 5.0 முதல் 29.6 பாகை செல்சியஸ் வரை; அதிகபட்ச வெப்பநிலை 45 பாகை செல்சியஸ்.
- 2024 ஜூன் மாதத்தில் டெல்லி நகரம் வரலாறு காணாத வெப்ப உச்சத்தைத் தொட்டது: 47.5 பாகை செல்சியஸ். பகல்தான் கடுமை யென்றால் இரவுகளிலும் நிவாரணமில்லை; குறைந்தபட்ச இரவு வெப்பநிலையே 30 பாகைதான். 2024 மே-ஜூன் மாதங்களில் தொடர்ந்து 38 நாள்களுக்கு டெல்லியின் வெப்பநிலை 40 பாகையைக் கடந்திருந்தது. ஜூன் 11 முதல் 19 வரை வீசிய வெப்ப அலையானது, வீடற்றோரில் 192 பேரைப் பலி கொண்டது.
- புதுடெல்லி நகரத்தின் 30% மக்கள் (இரண்டு கோடி) 1800க்கு மேற்பட்ட நெருக்கமான குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். மாநகராட்சியின் அங்கீகாரத்தைப் பெறாத இப்பகுதிகளுக்கு எவ்வகையான அடிப்படை வசதிகளும் வழங்கப்படுவதில்லை. பொருளாதாரத்தின் அடித்தட்டில் உழலும் இம்மக்களைப் பொறுத்தவரை கோடைக் காலமும் குளிர்காலமும் கொடுங்கனவுதான்.
- புதுடெல்லி நகரத்தின் மற்றொரு துயரம், இயல்பை மீறிய மழை. கடந்த 75 ஆண்டுகளில் ஜூன் மாதங்களின் அதிகபட்ச அன்றாட மழைப்பொழிவு 20-40 மி.மீ. வரை பதிவாகியுள்ளது. 1981, 1998, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச அன்றாட மழைப்பொழிவு 83 முதல் 97 மி.மீ. வரை பதிவானது. 2024 ஜூன் 28 அன்று பதிவான மழைப்பொழிவு 150.7மி.மீ.! வீடுகளும் தெருக்களும் பெருவெள்ளத்தில் மூழ்கின; ஐந்து பேர் மாண்டனர்.
- நீண்ட கால அளவில் வெப்ப அலைகளைத் தணிப்பதற்கான வழி- சதுப்புநிலங்கள், காடுகள், ஈரநிலங்கள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை உள்கட்ட மைப்புகளை மீட்டெடுப்பதே. நகரங்களுக்கும் அது பொருந்தும்.
மெக்கா நகரம்:
- நகரங்கள் நெருக்கமான காங்கிரீட் கட்டுமானங்களைக் கொண்டிருக்கின்றன. பசுந்தாவரங்கள் ஏதுமற்ற நகர்ப் பகுதிகளில் கோடைக் காலத்தில் மற்ற பகுதிகளைவிட வெப்பநிலை மிக அதிகமாக உள்ளது. இதன் விளைவை வெப்பத் தீவு விளைவு என்றழைக்கிறார்கள்.
- பெரும்பாலான வளைகுடா நாடுகளில் 100 முதல் 150 நாள்களுக்கு 40 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலை நிலவுகிறது. ஒப்பீட்டளவில் புதுடெல்லியில் இந்த நெருக்கடி 24 நாள்கள் நீடிக்கின்றன.
- சவுதி அரேபியாவின் மெக்கா நகரத்தில் ஜூன் 2024 வெப்ப அலையில் 100 இந்தியர்கள் உள்பட 1,301 ஹஜ் பயணிகள் உயிர் நீத்தனர். அவர்களில் 83% பதிவு செய்யப்படாத பயணிகள் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, இறப்பதற்கு முன் புனிதக் கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்கிற தீவிரத்தோடு தங்கள் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் திரட்டி அங்கு போகிற இசுலாமியர்களில் பெரும்பான்மையினரும் முதியவர்கள். தங்கும் வசதிகள், வெப்பத்தைத் தணித்துக்கொள்ளும் வசதிகள் ஏதும் கிடைக்காத நிலையில் பெருந்திரள் மரணம் நேர்ந்ததாகத் தெரிகிறது. 2015 ஹஜ் பயணத்தின்போது நெரிசலில் சிக்கி 2000-த்துக்கும் மேற்பட்டோர் உயிர் நீத்தனர்.
- பழமையான கட்டிடங்கள் அமைந்த மெக்கா நகரம், ஹஜ் பயணிகளைக் குறிவைத்துஆண்டுதோறும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் காங்கிரீட் கட்டிடங்களால் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது. வெயில் காலத்தில் அப்பகுதிகள் வெப்பத்தீவுகளாக மாறிவிடுகின்றன.
- சவுதி அரேபியா அடிப்படையில் ஒரு பாலைநிலம். கடந்த நாற்பது ஆண்டுகளில் அதன் வெப்பநிலை பிற வடகோள நாடுகளைவிட 50% அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இனிமேல் குளிரூட்டும் வசதிகளில்லாமல் அங்கு வாழ இயலாது என்று 2021இல் அமெரிக்க வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. 2019இல் மற்றொரு முக்கியமான எச்சரிக்கையைப் புவி இயற்பியல் ஆய்வேடு வெளியிட்டிருந்தது. ‘நிகழ் நூற்றாண்டில் காலநிலைப் பிறழ்வு போகப்போகத் தீவிரப்பட்டு, ஹஜ் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான வெப்பநிலை உருவாகும்’ என்பதே அச்செய்தி. அந்தக் கணிப்பு மெய்யாகி வருகிறது.
- அரஃபாத் குன்றின் அருகே நமீரா மசூதியைச் சூழ்ந்திருக்கும் பரப்புகளில் வெள்ளை நிற அஸ்ஃபால்ட் வண்ணம் பூசி வெப்பநிலையை 20 பாகை செல்சியஸ் வரை குறைத்திருப்பதாக அரசுத் தரப்பு சொன்னது. அப்படிச் செய்வதால் காற்றின் வெப்பநிலை குறைய வாய்ப்பில்லை.
- உடலின் வெப்பத்தைத் தணித்துக்கொள்ள நிழல் வசதி, குடிநீர் வசதி, குடைகள் போன்றவை உதவலாம். முக்கியமாக, வழிநெடுக மரங்கள் இருந்தால் காற்றின் வெப்பநிலை சற்று தணியும். உயர் வெப்பநிலையில் பெருந்திரளான மனிதர்கள் ஓரிடத்தில் குவிவது வெப்ப மயக்கம் ஏற்படும் அபாயத்தை மேலும் அதிகரித்தது.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 09 – 2024)