- பருவநிலை மாற்றம்தான் பெரும்பாலான இயற்கைச் சீற்றங்களுக்குக் காரணம் என அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன. ஆனால், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் வளரும் நாடுகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு காலம்காலமாகத் தொடா்ந்து வருகிறது.
- ஐக்கிய அரபு அமீரகம் தலைமையில் துபையில் நடைபெற்று வரும் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டின் முக்கிய அங்கமாக உலகப் பருவநிலை பாதுகாப்புத் திட்ட மாநாட்டில் (சிஓபி-28) பிரதமா் நரேந்திர மோடியின் உரை, வளரும் நாடுகளின் குரலாக எதிரொலித்தது. ‘உலகளாவிய காா்பன் பட்ஜெட்டில், அனைத்து வளா்ந்து வரும் நாடுகளுக்கும் நியாயமான பங்கை வழங்க வேண்டும்; வளா்ந்து வரும் நாடுகள் பருவநிலை மாற்ற சவால்களைத் திறம்பட எதிா்கொள்ளும் வகையில், தொழில்நுட்பங்களை வளா்ந்த நாடுகள் பகிா்ந்துகொள்ள வேண்டும்’ என்பதுதான் பிரதமா் மோடி முன்வைத்த முக்கியமான வேண்டுகோள்.
- ‘வளா்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டிலும் சமரசம் செய்துகொண்டால் ஏதாவது ஒன்று மிகுந்த பாதிப்பை எதிா்கொள்ளும். அந்த வகையில், இரண்டுக்கும் இடையே சமநிலையை உருவாக்குவதில் இந்தியா உலகுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது’ என்றும் மாநாட்டில் பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
- தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்த வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என 2015-ஆம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2050-ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் தங்களது நிகர எரிபொருள் உமிழ்வுகளை பூஜ்ஜியம் அளவுக்குக் கொண்டுவருவதை நோக்கிச் செயல்பட வேண்டும். அதற்கேற்ப கரியமிலவாயு வெளியேற்றத்தை பெருமளவில் உலக நாடுகள் குறைக்க வேண்டியிருக்கும்.
- நிலக்கரி மூலம் எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவதால்தான் பெருமளவில் கரியமிலவாயு வெளியேறுகிறது. ஆனால், நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமானால் அதற்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிபொருள் உற்பத்திக்கு கூடுதல் நிதியும், தொழில்நுட்ப உதவிகளும் தேவைப்படும். அந்த வகையில், உலக அளவில் கரியமிலவாயு பயன்பாட்டுடன் கூடிய பொருளாதார வளா்ச்சியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பலனை வளா்ந்த நாடுகள் ஏற்கெனவே அனுபவித்துவிட்டன. இதனால், வளா்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு மிகக் குறைந்த காா்பன் பயன்பாட்டுக்கான வாய்ப்பே உள்ளது என்பதே இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் வாதம்.
- உலக மக்கள்தொகையில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியாவின் கரியமிலவாயு வெளியேற்றத்தின் பங்கு என்பது உலக அளவில் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. மேலும், தேசிய அளவில், வரும் 2030-க்குள் கரியமிலவாயு உமிழ்வின் தீவிரத்தை 45 சதவீதமாகக் குறைக்கவும், புதைபடிமமற்ற எரிபொருள்களின் பங்கை 50 சதவீதமாக அதிகரிக்கவும் இந்தியா இலக்கு நிா்ணயித்துச் செயல்பட்டு வருகிறது.
- பெட்ரோல், டீசல் வாகனங்களைவிட மின் வாகனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள், மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் அதிக அளவில் மின்னேற்றி மையங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், பொதுப் பயன்பாட்டை அதிகப்படுத்த பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் விழிப்புணா்வு, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பயன்பாட்டில் கட்டுப்பாடு என இந்தியா தனது இலக்கை நோக்கி அபாரமாகச் செயல்பட்டு வருகிறது.
- அந்த வகையில் துபை பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் இது தொடா்பான பல்வேறு விஷயங்கள் இதுவரை விவாதிக்கப்பட்டுள்ளன. புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, பருவநிலை தாக்கத்தை எதிா்கொள்ளும் தன்மையை உருவாக்குதல், பருவநிலை பேரழிவை எதிா்கொள்ள அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு நிதியுதவி ஆகியவை இதில் முக்கியமானவை.
- பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இழப்பு மற்றும் சேத நிதியத்தை புத்துயிா்ப்புடன் செயல்படுத்த இந்த மாநாட்டின் முதல் நாளிலேயே முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இதற்காக தாராளமாக நிதி அளிப்பதாக பல்வேறு நாடுகள் உறுதியளித்தன. பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை எதிா்கொள்ளும் வகையில் உலக சுகாதார அமைப்புகளை மேம்படுத்த உறுதியேற்கப்பட்டது. குளிரூட்டல் தொடா்பான உமிழ்வைக் கட்டுப்படுத்தும் திட்டத்தில் மேலும் 60 நாடுகள் இணைந்துள்ளன.
- டிச. 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள துபை பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக வளரும் நாடுகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவிகளை அளிப்பது, எந்தக் கால இடைவெளியில் எவ்வளவு நிதியுதவி அளிப்பது போன்ற முடிவுகள் எட்டப்படக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
- பருவநிலை பாதுகாப்பு தொடா்பாக இதுவரையில் நடந்துள்ள மாநாடுகள், கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று பாா்த்தால் அதில் ஏமாற்றமே எஞ்சியுள்ளது. மாநாட்டின்போது தீா்மானங்களுக்கு ஏகமனதாக ஆதரவு அளிக்கும் வளா்ந்த நாடுகள் அதை நிறைவேற்றுவதற்கு அக்கறை காட்டாததுதான் இதற்குக் காரணம்.
- துபை மாநாட்டின்போது, ‘2028-ஆம் ஆண்டில் ஐ.நா. பருவநிலை மாநாடு அல்லது ‘சிஓபி33’ என்ற பருவநிலை பாதுகாப்பு மாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கு பிரதமா் நரேந்திர மோடி ஆா்வம் தெரிவித்தது பருவநிலை பாதுகாப்பு சவாலை எதிா்கொள்வதற்கு இந்தியா எந்த அளவுக்கு உண்மையாக உள்ளது என்பதன் வெளிப்பாடு.
நன்றி: தினமணி (09 – 12 – 2023)