TNPSC Thervupettagam

பருவமழை தரும் ஆறுதல்

June 30 , 2023 518 days 348 0
  • இப்போது அப்போது என்று கடந்த இரண்டு வாரங்களாக வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த தென்மேற்குப் பருவமழை ஒருவழியாக இந்தியாவின் பல பாகங்களிலும் ஆரம்பித்துவிட்டது. முதல் இரண்டு வாரங்களில் வழக்கத்தைவிட 53% குறைவாக இருந்த மழைப்பொழிவு வேகமெடுத்திருக்கிறது. ஜூன் 1 முதல் 26 வரையிலான மழைப்பொழிவின் பற்றாக்குறை 18.9%-ஆகக் குறைந்திருப்பது மிகப் பெரிய ஆறுதல்.
  • ஜூன் 14-ஆம் தேதி வரை வடகிழக்கு மாநிலங்களிலும், தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மட்டுமே காணப்பட்ட தென்மேற்குப் பருவமழை, இப்போது இந்தியாவின் 95% பகுதிகளிலும் பொழிந்திருக்கிறது. நெல், சிறுதானியங்கள், சோளம், பருத்தி, சோயாபீன்ஸ், நிலக்கடலை, பருப்பு வகைகள் உள்ளிட்ட காரிஃப் பயிா்களின் நடவுக்கு இந்தப் பருவமழை உதவும். பயிரிடல் தாமதத்தால் சாகுபடிக் குறைவு ஏற்படுமோ என்கிற அச்சத்திற்கு இப்போது பெய்திருக்கும் மழை முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பலாம்.
  • ஆனாலும்கூட, எல்லா பகுதிகளிலும் வழக்கமான மழைப்பொழிவு காணப்பட்டதாக கூற முடியாது. கா்நாடகம் (58%), கேரளம் (64%), மத்திய மகாராஷ்டிரம் (68% - 82%), பிகாா் (78%) பகுதிகளில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவு. ராஜஸ்தான், குஜராத்தின் சௌராஷ்டிரம் - கட்ச் பகுதிகளில் அதிகரித்த மழைப்பொழிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
  • கடந்த ஆண்டைவிட நெல் சாகுபடி பரப்பு 5.6% குறையும். சோளம், பருத்தி ஆகியவற்றின் சாகுபடி பரப்பிலும் தலா 2%, 4.6% குறைவு காணப்படும். இதனால், கவலையடையத் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை தாமதமாக தொடங்குவதும், மிக முக்கியமான நடவு மாதங்களான ஜூலை, ஆகஸ்டில் நன்றாகப் பொழிவதும், நீண்டு நிற்பதும் வழக்கமாக இருக்கிறது. பயிா்களுக்கு விதை தூவும் பருவத்தைவிட, நாற்று நடவைத் தொடா்ந்து வோ் பிடித்து வளரும் பருவத்தில்தான் அதிகம் தண்ணீா் தேவைப்படும். அதனால், ஜூன் மாதத்தைவிட ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெறப்படும் பருவமழைதான் செப்டம்பா் இறுதியிலான அறுவடைக்கு மிகவும் முக்கியம்.
  • இந்த ஆண்டின் பருவமழை தாமதமாக வந்தாலும், இரண்டு நாள்களில் 25 மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவைத் தந்திருக்கிறது. வழக்கமாக ஜூன் 11-ஆம் தேதி மும்பையிலும், ஜூன் 29-ஆம் தேதி தில்லயிலும் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு ஒரே நாளில் இரண்டு நகரங்களிலும் தொடங்கியிருக்கிறது. பருவமழையின் நகா்விலும் பொழிவிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறி என்றுதான் இதைக் கருத வேண்டும்.
  • பருவமழைப் பொழிவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் சில பிரச்னைகளை ஏற்படுத்தினாலும்கூட, விவசாயத்துக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. மாறிவரும் பருவநிலையைக் கருத்தில்கொண்டு மாற்றுப் பயிா்கள் குறித்தும் நாம் கையாளும் விவசாய முறைகள் குறித்தும் யோசிக்க வைத்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிக்கும் குறைந்த தண்ணீா் தேவையுள்ள பயிா்களான சிறுதானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றின் மீது விவசாயிகளின் கவனம் திரும்பியிருக்கிறது.
  • அதிகமான பாசன நீா் தேவைப்படும் நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிா்கள் நதிநீா் பாசன வசதியில்லாத இடங்களில், குறைந்த அளவு நிலப்பரப்பில் சாகுபடி செய்யும் நிலைமைக்கு மாற இது வழிகோலும். தேவைக்கு அதிகமாக நெல், கோதுமை, கரும்பு போன்றவை உற்பத்தியாவதால் விவசாயிகளுக்குப் போதுமான விலை கிடைப்பதில்லை என்பதை அவா்களை உணரச் செய்ய பருவமழை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
  • பசிபிக் கடல் பகுதியில் காணப்படும் வழக்கத்துக்கு அதிகமான வெப்பத்தின் விளைவால் ஏற்படும் ‘எல் நினோ’ உருவாக்கம் இந்தியாவில் பருவமழையைப் பாதிக்கும். ஆகஸ்ட் மாதத்திலும் அதற்குப் பிறகும்தான் ‘எல் நினோ’வின் தாக்கம் ஏற்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இப்போது அமெரிக்காவின் கடல் சூழல் நிா்வாகம், ஏற்கெனவே ‘எல் நினோ’ உருவாகி, வரப்போகும் டிசம்பா் - பிப்ரவரி மாத குளிா் காலத்தில் இந்தியாவில் வலுப்பெறும் என்று தெரிவித்திருக்கிறது. அதன் விளைவாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பருவமழையின் அளவு குறையுமானால், தற்போது காரிஃப் பயிா்களையும் குளிா்கால ராபிப் பயிா்களையும் பாதிக்கக்கூடும்.
  • இந்திய ரிசா்வ் வங்கியின் ஆய்வு, வேளாண் உற்பத்திக்கும், விலைவாசி உயா்வுக்கும் ‘எல் நினோ’வால் ஏற்படும் பாதிப்பைத் தெரிவிக்கிறது. ‘எல் நினோ’ மட்டுமல்லாமல், அதனுடன் இந்துமகா சமுத்திரத்தின் வெப்பநிலையும், இந்தியாவின் பருவமழையில் தாக்கம் ஏற்படுத்தும் என்கிறது அந்த ஆய்வு அறிக்கை.
  • இந்துமகா சமுத்திரத்தின் தட்பவெப்பநிலை ‘எல் நினோ’ தாக்கத்தை சமன் செய்யவும் அல்லது ஊக்குவிக்கவும் கூடும். நடப்பு ஆண்டில் ‘எல் நினோ’ இந்துமகா சமுத்திரத்தின் தட்ப வெப்பத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்து அடுத்த மூன்று மாதங்களுக்கான பருவமழை அமையும்.
  • நெல், கோதுமை, கரும்பு ஆகியவற்றுக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்து அறிவித்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. அடுத்த ஆண்டு பொதுத்தோ்தல் வரவிருக்கும் நிலையில், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட பயிா்களுக்கு விவசாயிகள் மாறுவதால் நெல், கோதுமை சாகுபடி குறைந்துவிடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு உண்டு. ஏனென்றால், உணவுப் பொருள்களின் விலைவாசி தோ்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்!

நன்றி: தினமணி (30  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்