TNPSC Thervupettagam

பருவமழையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

July 16 , 2020 1471 days 663 0
  • இந்தியாவில் இந்த ஆண்டும் மழை பொய்க்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.

  • இந்திய வானிலை ஆய்வு மையம்’ அளித்த சமீபத்திய தரவின்படி இந்தக் காலகட்டத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட 14% அதிகமாகத் தற்போது மழை பெய்திருக்கிறது.

  • ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் பருவமழையின் 17% மழை ஜூன் மாதத்தில் பெய்திருக்கிறது. ஜூன் மாதத்தில்தான் இந்தியாவில் பருவமழை இரண்டு திசைகளில் தொடங்கும்.

  • இதன் ஒரு திசைப் பயணம் கேரளத்தில் தொடங்கி வடக்கு நோக்கி நகரும் என்றால் இன்னொரு திசைப் பயணம் வங்கக் கடலிலிருந்து இந்தியாவின் தென்கிழக்கு வழியாகப் புகும்.

  • இரண்டு பருவமழைகளும் வடக்கில் ஒன்றுசேரும்; பருவமழை இவ்வாறு சங்கமிப்பதும் வலுப்பெறுவதும் ஜூலை நடுப்பகுதி வரை நிகழும்.

  • இந்த ஆண்டு இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. பருவமழை சொல்லிவைத்தாற்போல் ஜூன் 1 அன்று தொடங்கியது. வங்கத்தைச் சூறையாடிய உம்பன் புயலால் பருவமழை பிந்திப்போகலாம் என்ற கவலை நிலவிய பிறகு இப்படி சரியாகத் தொடங்கியிருக்கிறது.

  • இரண்டாவது விஷயம், ஒட்டுமொத்த நாட்டையும் இது உள்ளடக்கிய வேகம். இந்த ஆண்டு பருவமழை தொடங்கியபோது, பல நகரங்களில் எப்போது மழை தொடங்கும் எப்போது முடியும் என்ற கணிப்பில் ‘இந்திய வானிலை ஆய்வு மையம்’ ஒரு திருத்தத்தை வெளியிட்டது.

  • இதன்படி வடக்கு, மேற்கு எல்லைகளில் பருவமழை ஜூலை 8-க்கு முன்பு பெய்யும் என்று சொன்னது; அதையும் முறியடிக்கும் விதத்தில் ஜூன் 25-க்குள் நாடு முழுவதையும் பருவமழை தொட்டுவிட்டது. இது 2013-லிருந்து காணப்படாத வேகமாகும்.

  • ஜூன் மாதத்தில் நிறைய மழை பெய்திருக்கிறது; அதுவும் பரவலாக என்பது நிம்மதி அளிப்பது.

  • வடமேற்கு இந்தியாவில் மட்டும் மழையளவு 3% குறைந்திருக்கிறது. மற்றபடி, தென்னிந்தியா, மத்திய இந்தியா போன்ற பகுதிகளில் 13-20% கூடுதல் மழை பெய்திருக்கிறது.

  • இது நிலத்தைத் தயார்ப்படுத்தவும் குறுவைக்கு விதைக்கவும் விவசாயிகளுக்கான சமிக்ஞையாகும். ஆனால், மிக முக்கியமான மாதங்கள் ஜூலையும் ஆகஸ்ட்டும்தான்.

  • இந்த இரண்டு மாதங்களில்தான் பருவமழையில் மூன்றில் இரண்டு பங்கு பெய்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் சில சமயம் பருவமழை இடைவெளி விடுவதும் உண்டு.

  • தரவுகள் திரட்டுவதிலும் தொழில்நுட்பத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் இருந்தாலும் மழை எப்போது இடைவெளி எடுத்துக்கொள்ளும், அது எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து வானியல் ஆய்வு மையங்களால் துல்லியமாகக் கணிக்க முடிவதில்லை.

  • ஆகவே, குறுகிய காலம் மற்றும் நடுத்தர கால அளவுக்கான வானிலை முன்னறிவிப்புகள் வலுப்படுத்தப்படுவதுடன் அவை மக்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட வேண்டும்.

 

நன்றி: தி இந்து (16-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்