பறவைகளின் வானமாக இருப்போமா?
- சின்ன வயதில் இருந்தே காலையில் எழுந்ததும் செய்தித்தாளில் கண் விழிப்பது வழக்கம். அதில் யானைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கும்போது, “இங்கே பாரு யானை. நான் அந்தக் காலத்தில் இரவு வேளையில் பயணம் செய்யும்போது எத்தனை யானைகளைப் பார்த்திருக்கேன் தெரியுமா?” என்று ஆரம்பித்து யானைகளைப் பற்றி அப்பா கதைகதையாகக் கூறுவார். அப்போது ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படும்.
- சின்ன வயதில் யானையைப் பற்றி அப்பா சிலாகித்துக் கூறக் கேட்ட நான், என்னையும் அறியாமலே யானையைப் பெரிதும் நேசிக்கத் தொடங்கிவிட்டேன். அதனால்தான் சத்தியமங்கலம் - மைசூரு சாலை, உடுமலை - மூணாறு சாலை ஆகியவற்றில் உறவினர்களுடன் செல்லும்போது யானைக் கூட்டம் தென்படுகிறதா என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். நிறைய யானைகளைப் பார்த்தும் இருக்கிறோம். அவற்றைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
- யானைகளை நேசிக்க ஆரம்பித்ததும் அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. யானைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் அளவுக்கு யோசிக்கத் துண்டியது. அண்மைக் காலத்தில் எனக்குப் பறவைகளைப் பார்க்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.
- ஒருவேளை அப்பா பறவைகளைப் பற்றிய செய்திகளைக் கூறி வளர்த்திருந்தால், நானும் பறவைகளை ஆரம்பத்திலிருந்தே நேசிக்கத் தொடங்கி இருப்பேன். அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகரித்திருக்கும். பறவை நோக்குதலில் ஆர்வம் அதிகரித்திருக்கும். பறவைகள் என் தோழர்கள் ஆகி இருக்கும். ‘மொபைல் போன் வாங்கித் தாருங்கள் அப்பா’ என்பதற்குப் பதில், ‘பைனாகுலர் வாங்கித் தாருங்கள் அப்பா’ என்று கேட்டிருப்பேன். அவற்றுக்கு நேரும் அநியாயங்களுக்குத் தீர்வுகாண முயன்றிருப்பேன்.
- பறவைகளைத் தோழர்களாகப் பார்ப்பது ஏன் முக்கியம்? பறவைகளால் ஏற்படும் நன்மைகள் நிறைய உண்டு என்றாலும், பறவைகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற குரல்கள் கேட்டுக்கொண்டுதானே இருக்கின்றன. இதே பறவைகளை யாரோ போலப் பார்க்காமல் நம் தோழர்களாகப் பார்க்கும்போது பறவைகள் காப்பாற்றப்படுகின்றன.
- இயற்கையுடனான என் தொடர்பு, படிப்பு காரணமாக நடுவில் நின்றுவிட்டது. பின்னர் என் வேலை தொடர்பாக ஒருவரைப் பேட்டி எடுக்க நேர்ந்தது. அப்போது பறவைகளைப் பற்றி நிறைய தகவல்களை அவர் வழங்கினார். அதன் பிறகுதான் பறவைகளை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
பறவைகளைப் பற்றிய புரிதல்:
- பறவை நோக்குதலுக்காக ஓர் இடத்திற்குச் சென்றிருந்தபோது, ‘அருளகம்’ பாரதிதாசனைச் சந்தித்தோம். அழிவின் விளிம்பில் இருக்கும் பாறு கழுகுகளை மீட்கப் போராடிக் கொண்டு இருப்பவர் அவர். முன்னொரு காலத்தில் பாறு கழுகுகள் அதிக அளவில் காணப்பட்டன.
- காட்டில், வயலில் இறந்து கிடக்கும் ஆடு, மாடு, மான், புலி போன்ற உயிரினங்களை உண்பதன் மூலம் அவை நமக்குப் பெரும் சேவை ஆற்றி வந்தன, இன்னும் செய்துகொண்டே இருக்கின்றன. இறந்து கிடக்கும் விலங்குகளைப் பாறு கழுகுகள் உண்ணாமல் விட்டிருந்தால், அவற்றின் மூலம் நோய்த் தொற்று ஏற்படும். அதைத் தடுக்க இயற்கை நமக்கு அளித்த வரம்தான் பாறு கழுகுகள்.
- ஆனால், சில பத்தாண்டுகளாகப் பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து, அவை அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அறிவியலாளர்கள் அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இறந்த பாறு கழுகுகளின் உடலைக் கூராய்வு செய்தனர். அப்போது அவற்றின் உடலில் அவற்றின் இறப்புக்கு காரணமான வேதிப்பொருளைக் கண்டறிந்தனர். அந்த வேதிப்பொருள் எவ்வாறு பாறு கழுகுகளின் உடலில் கலந்தது என யோசிக்க ஆரம்பித்தனர்.
- அப்போதுதான் அவர்களுக்கு ஓர் உண்மை விளங்கியது. மாடுகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்தின் எச்சம் அவை இறந்த பிறகும் அவற்றின் உடலிலேயே தங்கியிருந்தது. அந்த இறந்த கால்நடையைப் பாறு கழுகுகள் உண்டபோது அந்த வலிநிவாரணி மருந்து அவற்றிற்கு நஞ்சானது. இதுவே பாறு கழுகுகளின் வீழ்ச்சிக்குக் காரணம். இதனால் டைக்ளோபினாக் எனும் வலிநிவாரணி மருந்தை அரசு தடைசெய்துள்ளது.
- இப்படிப்பட்ட பாறு கழுகுகளைப் பாதுகாக்கத்தான் மாநில அளவிலான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. மாநில அளவிலான இந்தக் குழுவின் பொறுப்புகளில், 2022-2025 ஆம் ஆண்டிற்கான பாறு கழுகுப் பாதுகாப்புக்கான தமிழ்நாடு செயல் திட்டம் (TNAPVC) தயாரித்தல், பாறு கழுகுகளின் முக்கிய உணவான கால்நடைகளின் சடலங்களில் நஞ்சு வைப்பதைத் தடுத்தல், இறந்த கால்நடைகள், காட்டுயிர் சடலங்களை அப்புறப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிர்வகித்தல், பாறு கழுகுகளுக்கு வழங்கப்படும் நச்சுத்தன்மையுள்ள மருந்துகளைத் தடைசெய்வதற்கான ஒருங்கிணைந்த - நன்கு நிறுவப்பட்ட- திறமையான ஒழுங்கு முறைகளை ஏற்படுத்துதல், காயம்பட்ட - நோய் வாய்ப்பட்ட பாறு கழுகுகளைப் பராமரிப்பதற்காக பாறு கழுகு மீட்பு மையங்களை அமைத்தல், மாநிலம் முழுவதும் பாறு கழுகுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து கண்காணித்தல், தமிழ்நாட்டில் கழுகு பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் கழுகு பாதுகாப்பு மண்டல வலையமைப்பை மேம்படுத்துதல் போன்றவை உள்ளன.
- இவை அனைத்தையும் செயல்படுத்த ஓரிருவரோ, ஒரு சில அமைப்புகளோ மட்டுமே முன்னெடுப்புகளைத் தொடங்குவது போதாது. மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. பாறு கழுகுகளைப் போன்ற சூழலியல் சுட்டிக்காட்டிகளாகப் பல வகையான பறவைகளும் காட்டுயிர்களும் உள்ளன.
- நாம் இப்போது பார்த்து ரசிக்கும், பாதுகாக்க முற்படும் பாறு கழுகு போன்ற பறவைகளை எதிர்காலச் சந்ததியினரும் பார்த்து மகிழ வேண்டும். குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்திற்கு இயற்கையைப் பாதுகாப்பதையும், அவற்றின் அருமை பெருமைகளையும் நாம் உணர்த்த வேண்டும்.
- பறவைகள் அழிவுக்கு உள்ளாகின்றன என்பதை வெறும் செய்தியாக மட்டுமே கேட்டும் படித்தும் கடந்து செல்லாமல், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற நம்மால் செய்ய முடிந்தவற்றைச் செய்ய வேண்டும். அதற்கு முதல்படியாக இயற்கையை, அதன் ஓர் அங்கமாக இருக்கும் பறவைகளை நாம் தோழர்களாகப் பார்ப்பது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 08 – 2024)