- இருபது லட்சம் கோடி. இதுதான் இன்று பேசுபொருளாகியிருக்கிறது. இப்போதைய அறிவிப்பின்படி, தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி தந்து, அதன் மூலம் தொழிலைப் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் யோசனையைச் சொல்கிறார்கள். மாறாக, அந்த நிதியை நேரடியாக இளைஞர்களுக்கே ஏன் தரக் கூடாது?
- இந்தத் தொகையில் 50%, அதாவது 10 லட்சம் கோடியை இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில் முனைவுக்குத் தந்தால் எப்படி இருக்கும்? ஒரு கோடி பேருக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கினால்? மிகப் பெரும் நிதி, சிறிய அலகுகளில் சிதறிப்போய் வீணாகிவிடக் கூடாது என்று கூறலாம். நியாயம்தான்.
- 10 லட்சம் பேருக்குத் தலா ரூ.1 கோடி வழங்கலாமே? அதிலும், குறைந்தது 10 பேராவது சேர்ந்து வந்தால்தான் தரப்படும் என்று சொல்லலாமே?
பேசினால் மட்டும் போதுமா?
- கூட்டுறவு இயக்கம் மூலம்தான் சமூகத்தில் எந்தவொரு பொருளாதாரப் புரட்சியும் சாத்தியமாகும். அதிலும், இளைஞர்களின் கூட்டுறவுப் பொருளாதார முனைவுகள் அத்தகைய இலக்குகளை எளிதில் எட்ட உதவும்.
- உள்ளூரில் தொழில் தொடங்குகிற, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக எல்லா வரிகளிலிருந்தும் விலக்களிக்கலாம்.
- பிரதமர் தனது உரையில் இந்திய இளைஞர்களின் அறிவு, ஆற்றல், திறமை குறித்து நிறைய பேசுகிறார். அதற்கேற்ப அவர்களுக்கு நிதி உதவி தந்து ஊக்குவிப்பதற்கு ஏன் எந்தத் திட்டமும் இல்லை?
- அரசின் அறிவிப்புகளானது சிறு, குறு தொழில்களுக்கு நன்மை பயக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. அப்படியில்லை. சிறு, குறு தொழில்களின் முதலீட்டு வரம்பை மாற்றியிருக்கிறது மத்திய அரசு. நேற்றுவரை ரூ.5 கோடி வரை முதலீடு கொண்டவையெல்லாம் சிறு, நடுத்தரத் தொழில்களாக இருந்தன. இன்று முதல் ரூ.10 கோடி முதலீடு கொண்டவையும் இந்தப் பிரிவில் அடங்கும்.
- குறுந்தொழில்களும் ரூ.10 கோடி முதலீட்டுத் தொழில்களும் ஒன்றாக ஒரே தளத்தில் அரசு உதவிக்குப் போட்டியிட்டால் யார் வெற்றி பெறுவார்கள்?
- நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தினக்கூலி ரூ.182-லிருந்து ரூ.202-ஆக உயர்த்தப்படுகிறது. இதனால், 13 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் என்கிறார்கள்.
- இந்தக் கணக்கை மறுமுறை பாருங்கள்: 13 கோடி குடும்பங்கள் இன்னமும் ரூ.200 கூலியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன! தற்போது அறிவித்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியுதவி, சலுகை, தள்ளிவைப்பு தாராளங்கள் எதுவும், இந்த 13 கோடி குடும்பங்களை அண்டவே அண்டாது.
வரிவிலக்குகள் தேவையில்லை
- இந்தியாவில் பல பெரிய பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் அறக்கட்டளை பெயரில் நடக்கின்றன.
- இந்த அறக்கட்டளைகள், வருமானவரிச் சட்டம் பி.11-ன் கீழ் முழு வரிவிலக்கு பெற்றவை. இவற்றில் பெரும்பாலானவை பொதுமக்களைக் கசக்கிப் பிழிந்து கட்டணம் வசூலிப்பவை. பிறகு ஏன் வரிவிலக்கு?
- தற்போதுள்ள பினாமி பரிமாற்றத் தடைச் சட்டம் வலுவிழந்து, செயல்படாது உள்ளது. உடனுக்குடன் பினாமி சொத்துகள் அடையாளம் காணப்பட்டு, பறிமுதல் செய்கிற வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரலாமே?
- கடந்த ஆண்டு, நிறுவன வரி 20%-ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1,45,000 கோடி இழப்பு. இதை ஏன் திரும்பப் பெறக் கூடாது?
- நமது நாட்டில், விவசாய வருமானத்துக்கு வருமான வரி கிடையாது. நமது விவசாயிகளின் பொருளாதார நிலையே அதற்குக் காரணம்.
- ஆனால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கில் விவசாய வருமானத்தைக் காட்டி, வரிவிலக்கு பெறும் பெரிய மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த மோசடியைத் தடுத்து வரி வருவாயைப் பெருக்க முடியாதா?
- ஆண்டுக்கு ஆண்டு வருமானத்தில் பெரும் பகுதியைச் சொத்துகளில் மூதலீடு செய்து, அதற்காக வங்கிக் கடன் பெற்று, அதன் மீதான வட்டி, சொத்துகளின் மீது தேய்மானம் என்று இரு வகைகளில் வரிக்கான வருமானம் பறிபோகிறதே? அதை ஏன் அரசு இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது?
நன்றி: தி இந்து (19-05-2020)